சுகாதாரச் சீர்கேடு
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரிப்பையூர் கிராமத்தில் உள்ள பொதுக் கண்மாயில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கண்மாயில் வீட்டு கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிற குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு மற்றும் ஈக்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் கண்மாய் நீரை மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குடிப்பதால் அவற்றுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.
மழைக்காலத்தில் இந்தக் குப்பைகள் நீருடன் கலந்து சுற்றுச்சூழலை மேலும் மாசுபடுத்தும் நிலை உள்ளதாகவும், கண்மாயை உடனடியாக சுத்தம் செய்து குப்பை கொட்டுவதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஊராட்சி நிர்வாகம் கண்மாயை முறையாக பராமரித்து, குப்பைகளை அகற்றுவதோடு, இனி யாரும் அங்கு குப்பை கொட்டாத வகையில் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




