ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக விவசாயிகள் திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக விவசாயிகள் திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாடானை – R.S.மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தேர்தல் காலத்தில் அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். இந்தத் தாலுகா அளவிலான போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து, திருவாடானை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். அதிகாரியின் இந்த உறுதிமொழியை ஏற்று விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க திருவாடானை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.





