
தீண்டாமை

கொன்று விடு வேற்றுமையை !
- முதுவைக் கவிஞர் ஹாஜி ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ –
தீண்டாமை என்கின்ற தீயதொரு வார்த்தைக்குத்
தீ’யென்ற சூடான ஓரெழுத்தே முதலெழுத்து !
வேண்டாத உணர்வுகலை விதைத்திட்ட தீண்டாமை
வேண்டாமே ! வேண்டாமே ! என்கிறது அனைத்துலகு !
ஆண்டாண்டு காலங்கள் அகிலமெலாம் ஒன்றிணைந்து
ஆறுகிற பணிகளிலும் முளைக்கிறது தீண்டாமை !
தோன்றுகிற நாகரீக, துளிர்விட்ட விஞ்ஞானம்
தலையெடுத்த உலகினிலும் வாழ்கிறது தீண்டாமை !
மண்பிறந்த மனிதயினம் விண்சென்று கால்பதித்தும்
மகிழ்வுடனே திரிகிறது மானங்கெட்ட தீண்டாமை !
புண்பட்ட மனதுடனே பாருலே அழுதாலும்
பண்பட்டுப் போகாமல் அலைகிறது தீண்டாமை !
தீண்டாமை ஒழிக்கவந்த திறமையுடை அறிஞர்களும்
தீயசில மனிதரினால் மாண்டேதான் போய்விட்டார் !
மாண்டோரின் கொள்கையிலே தீண்டாமை எதிர்ப்பிருந்தால்
மறுபடியும் வருபவர்கள் நெருப்பூட்டி எரிக்கின்றார் !
கருப்பான தோலுக்குள், வெளுப்பான தோலுக்குள்
கட்டாயம் ஓடுவது சிவப்பான ஓரிரத்தம் !
கரும்பாக வெள்ளையையும் வெறுப்பாகக் கருப்பினையும்
கருதுவது மானிடரில் யார் குற்றம் ? யார் குற்றம் ?
படித்தாலும் அறிவில்லை ; பண்பாட்டில் தரமில்லை !
பாருலகில் மேல்நாடு (?) என்பதில் முறையில்லை !
இடித்தாலும் சுரனில்லை : எதிர்த்தாலும் சூடில்லை !
இப்படியே இருந்திட்டால் இதற்குத்தான் ஏதெல்லை ?
நாட்டினிலே தீண்டாமை ! நிறத்தினிலே தீண்டாமை !
நாபேசும் மொழியினிலும் நாசமுள்ள தீண்டாமை !
ஏட்டினிலே தீண்டாமை ! எழுத்தினிலும் தீண்டாமை !
ஏற்றமுள்ள கல்வியிலும் ஏனிந்தத் தீண்டாமை !
தீண்டாமை ஒழிப்பதற்குத் தரணியிலே வழியில்லையோ ?
தீண்டாமை இல்லாமல் வாழ்வதற்கு வழியில்லையோ ?
தீண்டாமை எனுஞ்சொல்லை அழிப்பதற்கு வழியில்லையோ ?
தீண்டாமை என்பதனை மறப்பதற்கு வழியில்லையோ ?
வழியுண்டு ! வாழ்வுண்டு ! தீண்டாமை ஒழிவதற்கு !
வழியில்லை என்பதற்கு வழியில்லை மானிடர்க்கு !
பழிசொல்லி நழுவிவிடப் பாருலகில் நாமெதற்கு ?
புறட்டுங்கள் சரித்திரத்தை ! படியுங்கள் இஸ்லாத்தை !
கருப்புநிற ‘ஹபஷி’க்கும் சிவப்புநிறக் குறைஷிக்கும்
கடுமையென நின்றிருந்த தீண்டாமை எங்கேயோ !
மறுப்பதற்கு ஏதுமில்லை ; மறைப்பதற்கு வேலையில்லை….
மாநபிகள் வழிநடந்தால் மறைந்துவிடும் தீண்டாமை !
கலிமாவை நெஞ்சினிலே ஏந்தி நின்றால் மறைந்துவிடும் !
குர்ஆனை வாழ்வினிலே கொண்டுவந்தால் பறந்துவிடும் !
வலிமைதரும் நபிவழியில் நடந்து சென்றால் ஓடிவிடும் !
வாழ்வினிலே தீண்டாமை இல்லாமல் ஆகிவிடும் !
ஒன்றுயிறை ஒன்றுமறை ஒன்றுகுலம் ஒன்று மனம்
என்று மணம் ஏற்றுவிட்டால் எதுயிங்கு தீண்டாமை ?
நின்றுயிதை நிதானித்துக் கொன்றுவிடு வேற்றுமையை !
நன்று நன்று என்று சொல்லி வென்றுவிடு நானிலத்தை !


