இராமநாதபுரம்கட்டுரைகள்

மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர்

மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர்  

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மீசல் என்னும் ஊரில் பிறந்தவரே வண்ணக்களஞ்சியப் புலவர். கி.பி.19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மேலும் புலவர் பிறந்த ஊர் முகவை மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகில் உள்ள மீசல் என்பதாகும் என அறியலாம். (வண்ணக்களஞ்சியப்புலவரின் குத்பு நாயகம் ஆய்வுரை, ப.1) இவரது இயற்பெயர் ஹமீது இப்ராஹிம் என்பதாகும்.  இவர் “வண்ணப்பாக்களை எண்ணியவாறே பாடும் ஆற்றல் இவருக்கு நன்கு அமைந்தது. பல வண்ணப் பாடல்களைப் பாடினார். இவருடைய வண்ணப்பாடல் திறமைமையைக் கண்டு மகிழ்ந்த நாகூர் அறிஞர்,  ‘வண்ணக்களஞ்சியம்’ என்று சிறப்புப் பெயர் வழங்கினார். இதன் பிறகு இவருடைய இடுகுறிப்பெயர் மறைந்து வண்ணக்களஞ்சியம் என்னும் பெயரே வழங்கலாயிற்று’’ என சு.அ.இராமசாமிப் புலவர் சுட்டுகின்றார். (தமிழ்ப்புலவர் அகரவரிசை, மூன்றாம் பகுதி, ப.673)மதுரையில் வாழ்ந்த தம்பிரானிடம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டார்.

இயற்றிய நூல்கள்

     வண்ணக்களஞ்சியப் புலவர் ஆறு நூல்கள் எழுதியுள்ளார். அவையாவன, இராஜநாயகம் (1807), குத்பு நாயகம் (1814), தீன் விளக்கம் (1821), அலிபாதுசா நாடகம் (1887), முகைதீன் புராணம், சீறா வண்ணம்

மதுரையை மறவாதவர்

 இவர் பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் மீசல் எனினும் தாம் மதுரை திருமடத்து ஆதினத்தில் கற்றதை நினைவு கூறும் வாயிலாக  இராஜநாயகக் காப்பியத்தில்  ‘‘மதுரை வாழ் மீசல் வண்ணக் களஞ்சியம்’’ (கடவுள்    வாழ்த்து பா-26) எனவும், குத்பு நாயகத்தில் ‘‘கூடல்வாழ் மீசல் வண்ணக் களஞ்சியம்’’ (கடவுள் வாழ்த்து-பா 33) எனவும், தீன் விளக்கத்தில்  ‘‘கூடல் அதிபன்…. மீசல் வண்ணக்களஞ்சியம்’’ (கடவுள் வாழ்த்து -பா28) எனவும் தம்மைக் குறிப்பர்’ என்பதை அறியலாம்(வண்ணக்களஞ்சியப்புலவரின் குத்பு நாயகம் ஆய்வுரை, ப1)

     இவர் இயற்றிய தீன் விளக்கம் எனும் நூல் 1821 ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்காப்பியத்தில் 22 படலங்களும், 1740 விருத்தப்பாக்களும் அமைந்துள்ளன. இக்காப்பியத்தலைவர் ஏர்வாடி செய்யிது இபுராகீம் ஷகீது வலியுல்லாஹ் என்பவர் ஆவார். இவரது புகழையும், பெரு வெற்றியும் பாடும் இந்நூலில் போர்க்களச் செய்திகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நூல் ஏர்வாடியில் அரங்கேற்றப்பட்டது. சேதுபதி செப்பேடுகள் எனும் நூலில் ஏர்வாடிச் செப்பேடு இடம் பெற்றுள்ளது. இச்செப்பேட்டில் சையத் இபுராகீம் வலி பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. ஏர்வாடியில் அடக்கம் அடைந்துள்ள சான்றோர் சுல்தான் சையத் இபுராகீம் வலி அவர்கள் மக்காவில் பிறந்த அவர் மதினாவிலிருந்து இங்கு வந்தார். இவர் ஆண்டவனின் புனிதத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் திருமகளார் வழி 16ஆவது வாரிசாகவும், 12 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்துள்ளார் எனவும் அறிய முடிகிறது. காயல், மதுரை, பெரியபட்டினம் சென்று சமயநெறி பரப்பி ஏர்வாடியில் புனித அடக்கமானார். இவரது வரலாற்றை வண்ணக்களஞ்சியப் புலவர் தீன்நெறி விளக்கம் என்னும் நூலில் எழுதியுள்ளார். அந்நூல் குறிப்பிடும் பவித்ர மாணிக்க பட்டினம் ஏர்வாடியே என்பர்.  சுல்தான் சையத் இபுராகிம் வழி அவர்கள் அராபியாவில் வாழ்ந்த இடத்திற்கு  ‘ஏர்பாத்’ என்பது பெயர் என்றும், அதனால் அவர் புனித அடக்கமான இடத்திற்கு ‘ஏர்பாடி’ ‘ஏர்வாடி’ என்று பெயராயிற்று என்பர்’’ எனும் செய்தியை அறிய முடிகிறது. (சேதுபதி செப்பேடுகள், ப.382) 

புலவர்களைப் போற்றுதல்  

இந்நூலின் ஒரு பகுதியில் புலவர்களை வண்ணக்களஞ்சியப் புலவர் போற்றியுள்ளார்.  “முந்நூல் உணர்ந்தோர், இயற் புலவோர் (35) பொழிகவிப் புலவோர் (36), நீல ஆய்ந்த புலவோர் (37), முழுக்க நன்றென முற்றும் உணர்ந்தவர் கவி (38), கற்ற பெற்றியோர் (39) என தமக்கு முந்திய முத்தமிழ்ப் புலவர்களின் வித்தகத் திறத்தை வியந்து பாடுவர்என்பதை அறியலாம். (வண்ணக்களஞ்சியப்புலவரின் குத்பு நாயகம் ஆய்வுரை, ப.68)

     இவருடைய முகையதீன் புராணாம் எனும் நூல் 38 படலங்களையும், 1707 பாடல்களையும் கொண்டுத் திகழ்கிறது. பொதுவாக ஒருவர் அளிக்கும் கொடையை மேகங்களுக்கு ஒப்பிடுவது வழக்கம். மக்கள் கேட்காமலே மழையைப் பொழிகிறது மேகம். குறிப்பிட்ட நிலம் பாராது எல்லா நிலங்களையும் நோக்கிப் பெய்கிறது. அதே போல ‘அருண் முகில்கள்’ கொடை நாயகர் அப்துல் காதரின் கைகள் போல வாரி வழங்க வேண்டுமென்றக் கருத்தினை முன் வைக்கின்றார். இதனை, தேடிய புகழுத் தமனப்துல் காதிர்/ செழுங்கரம் போலருன் முகில்கள்/ கூடிமென் மலர்பொன் மணிபொழிந்திடச் செங்/ கோல்முறை செலுத்தின ரன்றே எனும் அடிகளில் பாடி வாழ்த்தியுள்ளார். (இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் தமிழ்ப்பணி, ப73)  இப்புராணத்தை பாடியதற்காக பத்தானை மரக்காயர் தம் மகளை இவருக்கு மணமுடித்துக் கொடுத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

இறுதிக் காலம்

      இப்புலவருக்குத் தஞ்சை வேந்தர் சிங்க முகம் பொறித்த பொற் சிவிக்கையை அன்பளிப்பாகக் கொடுத்தான் என்பர் எனக் குறிப்பிடப்படுகிறது. (முஸ்லீம் தமிழ்ப் பாரம்பரியம், ப.64) தான் இயற்றிய பாக்களால் பெயர் பெற்ற வண்ணக்களஞ்சியப் புலவர் நீண்ட காலம் நாகூரில் வாழ்ந்திருக்கக்கூடும். பின்னர் 89 ஆம் வயதில்  முகவை மாவட்ட  இராசசிம்ம மங்கலத்தை அடுத்த தும்பட்டிகா  கோட்டை எனும் சிற்றூரில் மரணம் அடைந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதாக மு.அப்துல்கறீம் குறிப்பிடுகின்றார். இராமநாதபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற இசுலாமியப் புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களில்  வண்ணக்களஞ்சியப்புலவரும் குறிப்பிடத்தக்கவராவார். இவராலும் இவரது படைப்புகளாலும் தமிழ்மொழி பெருமை கொள்கிறது.

முனைவர் சே.முனியசாமி, ஆய்வாளர்,

உதவிப்பேராசிரியர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button