கவிதைகள் (All)

அன்னையர் நாள் வாழ்த்துகள்!

அன்னையர் நாள் வாழ்த்துகள்! 💐

தென்னை ஓலையில் மேற்கூரை, கடுக்காய்,வெல்லம் கரைசலில் மண்சுவர், தகரத்தில் கதவு, கருவேலங்குச்சியில் சன்னல் அது வாடகைவீடுதான் ஆனாலும் எங்களுக்கு மட்டுமே சொந்தமாய் இருந்தது உன் பேரன்பு!

பொத்தான் விழுந்த சீருடையில் பக்குவமாய் ஊக்குமாட்டுவாய் அம்மா உனக்குத் தெரியுமா?
உன் ஊக்கத்தால் வளர்ந்த நான்,
இன்றும் மேல்ச்சட்டையில் மேல்பொத்தான் போடுவதேயில்லை!

கன்னம்பிடித்து, தலைவாருவாய், அத்தனை வறுமையிலும் எங்களிடம் என்ன பிடித்திருந்ததோ!
எங்களை சிலையாய் செதுக்குவாய்!

அந்த ஓலைக்குடிசையில் மின் விசிறிகள் இருந்ததில்லை ஆனாலும் எங்களுக்கு வேர்த்ததேயில்லை, நீதான் முழுநேரமும் எங்களின்
விசிறியாகவே இருந்தாயே!

வேடிக்கை என்னவென்றால் இன்று குளிர்சாதனப் பெட்டிமாட்டிய பிறகும் அப்படியே தொடர்கிறாய்!

இந்தத் தியாகமும்,
பெருந்தன்மையும் உறுதியாக நீ இயற்கையிடமிருந்துதான் பெற்றிருக்க வேண்டும் ஏன் தெரியுமா, அது மட்டுந்தான் என்ன செய்தாலும் மனிதர்களை நேசிக்கிறது!

அம்மா நீயும் இந்த உலகத்தில்தான் வாழ்கியாய் உன் பேரன்புக் கருணையால் எங்களுக்குத்தான் உலகமாய் தெரிகிறாய்!

அம்மா இருளுமற்ற , வெளிச்சமுமற்ற இந்த உலகத்தில் எல்லாமே பொய், எங்களை உலகமாய் எண்ணும் நீ மட்டுமே மெய்!

அம்மா மெய்!

கவிஞர்
சிவசக்திவேல்பாண்டி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button