தமிழ்க்கவிஞருக்குகவிதைவிருது

தமிழ்க் கவிஞருக்கு கவிதை விருது

ஒடிசாவின் புவனேஸ்வரிலுள்ள ரோட்டரி பவனில் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES)
இலக்கிய இதழ் ஏற்பாடு செய்த தேசிய இலக்கிய விழா-2026, கடந்த ஜூலை
5 அன்று நடைபெற்றது.
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கவிதைகள் எழுதிவரும்
பன்மொழிக் கவிஞர் முனைவர் எழில் வேந்தனுக்கு ‘கூழாங்கற்கள் – கவிதை
விருது – 2026′ வழங்கப்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் கவிதைகள்
எழுதிவரும் எழில்வேந்தன் எழுதிய ‘ஆலமரம்’ கவிதை 1995ஆம் ஆண்டில் இந்திய
குடியரசு தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற தேசிய பன்மொழிக்
கவியரங்கத்திற்கு தமிழின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,
பதினெட்டு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இக்கவிதை இதுவரை
முப்பத்து ஒன்பது உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2002ஆம்
ஆண்டில் தமிழில் வெளியான இவரது கவிதைத் தொகுப்பான ‘வெளிச்ச விழுதுகள்’
(Velicha Vizhudhugal), அவராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம்
ஆண்டு டெல்லியில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டுக்
கவிஞர்களின் கவனத்தை ஈர்த்த இத்தொகுப்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒடிய கவிஞர் சங்கமித்ரா ராய்குருவால் ஒடிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு
ஒடிசாவில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இலக்கியத் திருவிழாவுக்கு முனைவர் லிபி புஷ்பா நாயக் தலைமை தாங்கினார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய விமர்சகர் பேராசிரியர் டாக்டர் பாசுதேவ் சக்ரவர்த்தி
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேராசிரியர்கள் ஸ்னேஹபிரவா தாஸ், ஜெகன்னாத
தாஸ் மற்றும் பிஸ்வஜித் தாஸ் ஆகியோர் விருது பெற்றவரை வாழ்த்திப் பேசினர்.
ஆங்கிலதில் எழுதிவரும் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக 1987-ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES) எனும் ஆங்கில இலக்கிய இதழ் தொடங்கப்பட்டது.
இது ஒரு காலாண்டு இதழாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. இவ்விதழில் இந்திய மற்றும்
சர்வதேச எழுத்தாளர்களின் கவிதைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள் மற்றும் ஆய்வுக்
கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆர்.கே.நாராயண், முல்க் ராஜ் ஆனந்த், நிஸ்ஸிம் எசேக்கியேல்,
குஷ்வந்த் சிங், ஜெயந்த மகாபத்ரா, மனோஜ் தாஸ் மற்றும் பல முக்கிய இந்திய ஆங்கில
எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன.
இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்காற்றிய ஒருவருக்கு அவர்தம் வாழ்நாள் சாதனைக்காக
வழங்கப்படும் இவ்விருது 2026-ஆம் ஆண்டிற்கு தமிழ்க் கவிஞர் எழில் வேந்தனுக்கு வழங்கப்பட்டது.




