திருவாடானை : அமைச்சர் தொகுதியில் அவலம்! காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து 2 மாதமாக வீணாகும் குடிநீர் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திருவாடானை:

அமைச்சர் தொகுதியில் அவலம்! காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து 2 மாதமாக வீணாகும் குடிநீர் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாடானை பேருந்து நிலையம் அருகே உள்ள மணிமுத்தாறு கிளை ஆற்றின் பாலத்தின் வழியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருவாடானை, ஆனைக்குடி, பாண்டுகுடி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த முக்கிய குடிநீர் குழாயில் கடந்த 2 மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. குப்பைகளுக்கு மத்தியில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறுவதை வீடியோவில் காணலாம்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியப் போக்கு நீடிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் தொகுதியான திருவாடானையில், ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் காணப்படும் நிலையில், கிடைக்கும் காவிரி கூட்டுக் குடிநீரும் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது.
எனவே அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய கவனம் செலுத்தி, உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்து, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




