இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு ஹைக்கூ பயணத்தைத் தொடங்கக்கூடாது :

காவல் துணை அதிகாரி, கவிஞர் மணி சண்முகம் கருத்து
இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு ஹைக்கூ பயணத்தைத் தொடங்கக்கூடாது

காவல் துணை அதிகாரி, கவிஞர் மணி சண்முகம் கருத்து
சென்னை.
சென்னையில் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை
10.30 மணிக்கு கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் தரைத்தளத்திலுள்ள
மகாகவி ஈரோடு தமிழன்பன் அரங்கில் ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் 14-ஆவது
நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ‘ஹைக்கூ முற்றம்’ ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ்
தலைமையேற்றார். ‘ஹைக்கூ முற்றம்’ 11-ஆவது மின்னிதழை இயக்குநர் என்.குமார்
வெளியிட, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கவிஞர்
தமிழமுதன் பெற்றுக்கொண்டார்.
‘ஹைக்கூ கவிதையும் கவிஞர் மணி சண்முகமும்…’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல்
நிகழ்வில் கவிஞர்கள் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம், புதுகை ஆதீரா, அன்புத்தோழி ஜெயஸ்ரீ,
வ.ரகுநாத், ந.வேலாயுதம், சா.கா.பாரதி ராஜா, க.குணசேகரன், பா.ஸ்ரீகுமார், சஞ்சீவி மோகன்,
சீ.பாஸ்கர், குருசங்கர் கனகராஜன், தெ.சு.கவுதமன் ஆகியோர் பங்கேற்று, தங்களின்
வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். நிறைவாக, காவல்துறை அதிகாரியும்
கவிஞருமான மணி சண்முகம், ஐபிஎஸ்., பேசும்போது, “இந்த நிகழ்வு முடிந்து நீங்கள்
வெளியே செல்லும்போது ஒரு புத்தரைச் சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்வியை
நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழுப்பிக்கொண்டு, அதற்கான பதில் என்னவாக இருக்கலாம்
என்று பலவிதமாக நம்மால் யோசிக்க முடியும். அப்படியான யோசிப்பே ஹைக்கூ கவிதையின்
தொடக்கமாக அமைகிறது. சராசரியான மனித வாழ்வின் பொழுதுகளிலிருந்து சற்றே நம்மை
விலக்கிக்கொண்டு, நம்மைச் சுற்றி நடப்பவற்றை கூர்ந்துநோக்கும் போதுதான் நம்மைச்
சுற்றிலும் கணந்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கும் கவித்துவமான செயல்பாடுகளை நம்மால்
கண்டுணர முடியும்.
மலையின் உச்சியை அடைய வேண்டுமென்கிற ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, தொடர்ந்து
முயற்சி செய்து, மலையின் உச்சியை நீங்கள் அடைந்துவிடுகிறீர்கள். பிறகு… என்ன செய்வீர்கள்?
கீழிறங்கித்தானே வந்தாக வேண்டும். ஹைக்கூ எழுத விரும்புகிறவர்கள் எப்போதும் இலக்குகளை
நிர்ணயித்துக்கொண்டு எழுதத் தொடங்கக்கூடாது. தேடலுடன் கூடிய தொடர் பயணங்களில்தான்
நல்ல ஹைக்கூவை நம்மால் கண்டடைய முடியும்” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு பேரூராட்சிகள் துறை கூடுதல் இயக்குநர் சோ.பி. மலையமான் திருமுடிக்காரி, கவிஞர்
மணி சண்முகத்திற்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.
‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழில் வெளியான ஹைக்கூ படக்கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்ற
கவிஞர்களுக்குப் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், கனடாவிலுள்ள டொரண்டா பல்கலைக்கழகப் பேராசிரியர் பொ.விவேகானந்தன்,
‘வையம்’ ஆசிரியர் க.சந்திரசேகரன், கவிஞர் நிமோஷினி உள்ளிட்ட ன் ஏராளமானோர்
கலந்துகொண்டனர்.
முன்னதாக, கவிஞர் சாந்தி சரவணன் வரவேற்க, கவிஞர் இரா.நாகராஜன் நன்றி கூறினார்.
படக்குறிப்புகள்:
1. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற காவல் துறை அதிகாரி, கவிஞர் மணி சண்முகத்திற்கு
தமிழ்நாடு பேரூராட்சிகள் துறை கூடுதல் இயக்குநர் சோ.பி. மலையமான் திருமுடிக்காரி நினைவுப்
பரிசினை வழங்கினார்.
2. ஹைக்கூ முற்றம்’ 11-ஆவது மின்னிதழை இயக்குநர் என்.குமார் வெளியிட, தமிழ்நாடு திரைப்படப்
பாடலாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கவிஞர் தமிழமுதன் பெற்றுக்கொண்டார்.
3. நிகழ்வில் பங்கேற்றோரின் குழு புகைப்படம்.





