பாளையங்கோட்டை : பார்வையற்றோர் பள்ளியில் விதைப்பந்து பயிற்சி முகாம்

பார்வையற்றோர் பள்ளியில் விதைப்பந்து பயிற்சி முகாம்

பாளையங்கோட்டையில் 130 வருடங்களைக் கடந்த பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது. முழுமையாக பார்வை இல்லாதவர்கள், பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் இங்கு பயில்கின்றனர். இந்தப் பள்ளியிலேயே படித்த பட்டதாரிகள் இங்கேயே ஆசிரியராக பணி புரிவது ஆச்சரியமான விஷயம். இதன் முதல்வர் கிங்ஸ்டன், துணை முதல்வர் ஹெலன். வழக்கமான பள்ளி மாணவ மாணவியர் போல் இவர்கள் படிக்க முடியாது. தடவித்தான் வாசிக்க முடியும். இவர்களுக்கு இயற்கையை பேணும் விஷயங்கள் கற்றுத் தரும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக பள்ளிகளில் தன்னார்வத்துடன் சென்று விதைப்பந்துகள் திட்டத்தை விரிவுபடுத்தும் சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ திருமாறன் பார்வையற்ற மாணவ மாணவிகள் மத்தியில் விதைப்பந்து செய்யும் முறையை விவரித்தார். மண்ணை தண்ணீர் தெளித்து உருண்டைகளாக்கி அதனுள் மர விதைகளை செருகி விதைப்பந்துகளை தயாரிக்கும் வழி வகைகளை திருமாறன் உதாரணங்களுடன் விளக்கினார்.
பார்வையற்ற குழந்தைகள் அன்றாடம் நடக்கும் மண்ணை பார்த்திருக்க மாட்டார்கள். வெயிலுக்காக நிழலில் ஒதுங்கினாலும் நிழலும் தெரியாது, மரமும் தெரியாது, காலில் மிதிபடும் சருகும் தெரியாது, மரங்கள் ஒழிந்து இருக்கும் விதைகளும் தெரியாது, ருசிக்கும் பழங்களும் தெரியாது.
கண்ணிரண்டும் தெரிபவர்களை காட்டிலும் பார்வையற்றோர் அறிவாற்றலில் உள் உணர்வு புற உணர்வில் திறமையானவர்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளைக் கொண்டு மரங்களை உருவாக்கி, மழையைப் பெருக்கும் திட்டம் தான் விதைப்பந்துகள் தயாரித்து வீசும் திட்டம் என திருமாறன் பேசினார். திரைப்பட நாயகன் தினேஷ், ஹரி பிரியாணி அதிபர் ஹரிஹர செல்வன், வரம் ஜவகர், நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். பார்வையற்ற மாணவிகள் மணிமாலா, ரேவதி ஆகியோர் படிக்க உதவும் சவுண்ட் ரெக்கார்டர் கருவிகளை தினேஷ் மற்றும் ஹரிஹர செல்வன், வழங்கி உதவியது பெரும் வரவேற்பை பெற்றது.
விதைப்பந்து புரட்சியில் விழியில்லாதோர் களம் இறங்கி இருப்பது பாராட்டிற்குரியது. ஆசிய கண்டத்தின் இரண்டாவது பெரிய பார்வை திறன் குறைவற்றோர் பள்ளியான பாளையங்கோட்டை பள்ளியில் +2 வரை இருபாலாரும் பயில்கின்றனர்.


