தமிழ்த்தாயின் தவப்புதல்வன் மறைந்தாரே!

தமிழ்த்தாயின் தவப்புதல்வன் மறைந்தாரே!
கவிஞர் இரா.இரவி!
பட்டிமன்றத்தின் நடுவராகத் தொடங்கி
பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பியவர்!
சூரிய தொலைக்காட்சியின் மூலம்
சூரியன் உதிக்கும் நாடெல்லாம் சென்றவரே!
குடும்பத்தின் தலைப்புகளைத் தந்து
குடும்பத்தோடு பார்க்க வைத்தவரே!
ஆறிலிருந்து அறுபது வரை அனைவரும்
அன்போடு ரசிக்கும் பட்டிமன்றம் தந்தவரே!
தான் சிரிக்காமல் அரங்கத்தை சிரிக்கவைத்து
தரணி முழுவதும் வலம் வந்தவரே!
உடலின் நிறம்தான் அவருக்கு கருப்பு
உள்ளத்தின் நிறமோ வெள்ளையோ வெள்ளை!
பொதுவாக ஈடுசெய்ய முடியாத இழப்பு என்போம்
உண்மையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு உன்இழப்பு!
உன் இடத்தை நிரப்புவதற்கு யாருமில்லை
உனக்கு நிகர் உலகில் நீ மட்டுமே!
முடிசூடா மன்னனாக பவனி வந்தாய்
முன்னணி நடுவராக நீயே நின்றாய்!
அணிந்துரைக்காக பத்தாயிரம் காசோலை வந்ததை
அறமன்று திருப்பி அனுப்பிடச் சொன்னாய்!
அறத்தோடு வாழ்ந்திட்ட அறமனச் செம்மல்
அறம் பொருள் இன்பம் தினமும் சொன்னாய்!
சிந்தனை மிக்க நூல்கள் பல எழுதினாய்
சிந்திக்க வைத்து சிந்தனை விதைத்தாய்!
பத்மஸ்ரீ விருது உன்னால் பெருமை பெற்றது
பட்டிமன்றமே உன்னால் உலகப்புகழ் பெற்றது!
உடலால் உலகை விட்டு மறைந்தாலும்
உந்தன் குரலாய் எங்கும் ஒலித்து இருப்பாய்!





