கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் அமைச்சரிடம் மனு

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் அமைச்சரிடம் மனு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை நகரின் மீன்வளம், சுற்றுலா மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்களிடம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில்
கீழக்கரையில் உள்ள புதிய ஜெட்டி மற்றும் பழைய ஜெட்டியை முழுமையாக சீரமைத்து நவீன மீன்பிடித் துறைமுகமாக மாற்ற வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மீன்வளத்துறையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் தேவையான படகுகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல்சார் சுற்றுலா மையமாக அறிவிக்க கோரிக்கை,
கீழக்கரை அருகே அமைந்துள்ள அழகிய கடற்கரை மற்றும் தீவுகளை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை மூலம் பாதுகாப்பான படகு சேவை ஏற்படுத்தி, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தீவுகளுக்குச் சென்று வர நடவடிக்கை எடுத்தால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதக்காதி மணிமண்டபம் புதுப்பிப்பு
சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ள சீதக்காதி மணிமண்டபத்தை முழுமையாக புதுப்பித்து, அவரது வாழ்க்கை வரலாறு, சமூகப்பணி மற்றும் தொண்டு சேவைகளை விளக்கும் நிரந்தர காட்சியகமாக மாற்ற வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பழைய மீன் மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று கூறி இடிக்கப்பட்ட நிலையில், இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது தனியார் இடத்தில் செயல்படும் மீன் சந்தையால் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம், போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், உடனடியாக புதிய மீன் மார்க்கெட்டை கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மீன் சந்தை அமைந்துள்ள இட நெரிசலால் பேருந்துகள் நகருக்குள் வர முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் பயணிகள் நகரின் நுழைவுப் பகுதியில் இறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஆட்டோவில் செல்ல ₹80 முதல் ₹100 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் பொருளாதார சுமையாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்நிகழ்வில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் செயலாளர்
சர்பாஸ் நவாஸ் ,பொருளாளர்
முஹம்மது ஃபரூஸ்,துணை தலைவர்
முஹம்மது சுபைர்,துணை செயலாளர்
நெய்னா முஹம்மது ,செயற்குழு உறுப்பினர் சபீர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர்




