மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் நடத்தும் திருமிகு நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளைச் சொற்பொழிவு 28/7/2026 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான தமிழ் உயராய்வு மையத் துறைத்தலைவர் & இணை பேராசிரியர் முனைவர் சீ.காயத்ரிதேவி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் திரு.மூ.விஜயராகவன், கௌரவத் தலைவர் பொறியாளர் சு.இராஜகோபால், செயலாளர் பொறியாளர் சு.இரா.ஸ்ரீதர், பொருளாளர் திரு.அ.ஆழ்வார்சாமி ஆகியோரும் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினரை உதவிப் பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி அறிமுகப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினராகக் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் செ.நாகநாதன் அவர்கள் “காலத்தால் அழியாத தமிழ்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அச்சிறப்புரையில் செம்மொழியான தமிழ் காலத்தால் அழியாத ஆழமான வரலாற்றையும் வேர்களையும் கொண்டது. இது வெறும் மொழியியல் அடையாளமாக மட்டும் நின்று விடாமல் உலக மொழிகளின் போக்கிலும் கலாச்சார பரிமாற்றங்களிலும் செல்வாக்கை செலுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் வளமான நிலப்பரப்பில் உருவான இந்த மொழி எண்ணற்ற நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு, செதுக்கப்பட்டு வந்துள்ளது. இதன் தொன்மையையும் தனித்துவத்தையும் பறைசாற்றும் சான்றாகத் தொல்காப்பியம் திகழ்கிறது. இது வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல அக்காலத்தில் சமூக அமைப்பு, வாழ்வியல் நெறிகள், கவிதை மரபுகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் களஞ்சியம். மொழியின் கட்டமைப்பு, இலக்கிய வகைகள், சமூக பழக்க வழக்கங்கள் எனப் பல்வேறு பரிமாணங்களை விளக்குவது. தமிழின் செழுமையான கவிதை மரபையும் அக்கால மக்களின் உணர்வுகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் அழியாத ஓவியங்களை தீட்டி உள்ளது. காதல், வீரம், கொடை, நட்பு, பிரிவு என மனித உணர்வுகளின் பல்வேறு நிலைகளையும் இயற்கையின் அழகையும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளையும் மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளது சங்க இலக்கியம். தமிழின் இலக்கியச் செழுமைக்கு ஒரு சான்றாகும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற தொகுப்புகள் தமிழின் வளமான கவிதை மரபையும் மொழியின் இனிமையையும் உலகுக்கு எடுத்துரைக்கின்றன. இத்தகைய வளமான பாரம்பரியம், காலத்தால் அழியாத இலக்கியச் செல்வம் இருந்தும் இன்றைய நவீன உலகில் தமிழுக்குப் புத்துயிர் அளிப்பதும் அதன் தொடர்ச்சியை உறுதி செய்வதும் மிகவும் அவசியமாகும். இளைஞர்கள் மத்தியில் தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து வருவது கவலை அளிக்கிறது. எனவே தமிழ் மொழியின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் அதன் பயன்பாட்டை அன்றாட வாழ்வில் ஊக்குவிப்பதும் காலத்தின் கட்டாயமாகும். தமிழ் மொழியின் தொன்மை, இலக்கணம், இலக்கியம், பண்பாடு, வரலாறு என பல்வேறு தலைப்புகளில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் தொடர்ச்சியான அறிவுச் செழுமைக்கும் உரமிடுகிறது. முடிவாக தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல .அது ஒரு பண்பாடு. ஒரு வரலாறு. ஒரு வாழ்க்கை முறை அதன் ஆழமான வேர்களையும் காலத்தால் அழியாத இலக்கியச் செல்வத்தையும் போற்றிப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் நமது கடமையாகும். இந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போமாக வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! தமிழை நல்ல முறையில் படிக்க வேண்டும். படைக்க வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்வில் 254 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.இந்நிகழ்வில் பொருளியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி வெ.கனிமொழி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியினை வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி சுபிக்ஷா தேவி தொகுத்து வழங்கினார். தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் கோ.தேவி பூமா, முனைவர் தி. மல்லிகா முதுமுனைவர் ப.திருஞானசம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் உயராய்வு மையத்தின் ஆய்வாளர்கள் வி.மோனிகா யாழினி, பா.சுரேஷ், ச.சௌமியா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.








