இராமநாதபுரம் பள்ளி: தேசிய அளவில் சாதித்து ISRO-வில் பயிற்சி பெற தேர்வான மாணவர்கள்!

இராமநாதபுரம் பள்ளி: தேசிய அளவில் சாதித்து ISRO-வில் பயிற்சி பெற தேர்வான மாணவர்கள்!
இராமநாதபுரம்:”ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் ஒரு சிறிய யோசனையிலிருந்தும், அதை செயல்படுத்தும் துணிச்சலிலிருந்தும் தான் தொடங்குகிறது.” இதனை மெய்ப்பிக்கும் வகையில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பாக கடந்த ஜூலை 27 அன்று நடத்தப்பட்ட ‘இக்னைட் இந்தியா 2026’ (Ignite India 2026) தேசிய அளவிலான அறிவியல் போட்டியில், இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்தியா முழுவதிலும் உள்ள 470க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புத் திட்டங்களுடன் போட்டியிட்டு, இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் இரண்டு படைப்புகள் தேசிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) நேரடியாகப் பயிற்சி பெறும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
தேசிய விருது வென்ற சாதனைப் படைப்புகள்:
தரவரிசை 57: ‘லைஃப் லிங்க் கார்டியன்’ (Life Link Guardian)

- மாணவர்கள்: சுல்ஃபாத் & மர்வா
- கண்டுபிடிப்பின் சிறப்பு: சூரிய சக்தியால் இயங்கும் இந்த அவசர சிகிச்சைப் பிரிவு (ICU) கண்காணிப்பு சாதனம், நோயாளிகளின் உடல்நிலையை உடனுக்குடன் கண்காணித்து அவசரக்கால எச்சரிக்கைகளை வழங்குகிறது. இது கிராமப்புற மற்றும் மின்சார வசதியற்ற இடங்களிலும் தடையில்லா மருத்துவ உதவியை உறுதி செய்கிறது.
தரவரிசை 62: ‘ஸ்மார்ட் அக்ரி கார்ட் சிஸ்டம்’ (Smart Agri Guard System) - மாணவர்: ஃபெளசியா
- கண்டுபிடிப்பின் சிறப்பு: இந்த நவீன விவசாய நுட்ப சாதனம், மண் வளத்தைத் துல்லியமாகப் பரிசோதித்து, நிலத்திற்கு ஏற்ற பயிர்களைத் தேர்ந்தெடுக்க விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறது.
செயல்முறை வழிக் கல்வியின் மகத்தான வெற்றி
மாணவர்களின் இந்தத் தேசிய சாதனை குறித்துப் பள்ளியின் வழிகாட்டிகள் கூறுகையில், “வெறும் புத்தகப் படிப்போடு நின்றுவிடாமல், ஷெல் என்எக்ஸ்புளோரர்ஸ் (Shell NXplorers) திட்டத்தின் முறையான சிந்தனைப் பயிற்சியும், அட்டல் டிங்கரிங் லேப் (Atal Tinkering Lab) மூலமாகப் பெற்ற செயல்முறைப் பயிற்சியுமே மாணவர்களை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது” எனத் தெரிவித்தனர்.
இத்தகைய மகத்தான சாதனையைப் படைத்த மாணவர்களுக்கும், வழிகாட்டியாக இருந்த அட்டல் டிங்கரிங் லேப் ஒருங்கிணைப்பாளர் திரு. மாதன் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மாணவர்களின் இந்தத் திறன் வளர்ச்சிக்கான களத்தை அமைத்துத் தந்த அட்டல் இன்னோவேஷன் மிஷன் (AIM), நிதி ஆயோக் (NITI Aayog) மற்றும் ஷெல் இந்தியா (Shell India) நிறுவனங்களுக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.




