
அல்பேனியாவில் நடைபெற்ற திரானா சர்வதேச மாரத்தான் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக வீரர் நியாஸ் கான் சாதனை!
ஒட்டுமொத்தப் பிரிவில் மூன்றாம் இடம் – பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசு வென்று அசத்தல்!

ஷார்ஜா :
அல்பேனியா நாட்டின் தலைநகர் திரானாவில், கடந்த 15 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10-வது ஆண்டு திரானா சர்வதேச மாரத்தான் 2026 போட்டியில், ஷார்ஜாவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் நியாஸ் கான், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் பங்கேற்று ஒட்டுமொத்தப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சிறப்பான வெற்றியின் மூலம் பதக்கத்துடன் ரொக்கப் பரிசையும் வென்று சர்வதேச அளவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கடின உழைப்பு, விடாமுயற்சி, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஓட்டப்பந்தயத்தின் மீதான ஆர்வம் ஆகியவற்றின் மூலம் தனது விளையாட்டுப் பயணத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் நியாஸ் கான், உலகின் புகழ்பெற்ற ஆறு Abbott World Marathon Majors மாரத்தான் போட்டிகளையும் நிறைவு செய்து Six Star Finisher என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இவர், சர்வதேச ஓட்டப்பந்தயப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
திரானா மாரத்தான் போட்டியில் பெற்றுள்ள இந்தப் பதக்கம், அவரது ஓட்டப்பந்தயப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
தமிழகத்திற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பெருமை சேர்த்த நியாஸ் கானுக்கு வாழ்த்துகள்!
சாதனை தொடரட்டும்! வெற்றிகள் குவியட்டும்!






