கவிதைகள் (All)

இன்று உலக நீரிழிவு நாள்

இன்று
உலக நீரிழிவு நாள்

இந்தியாவில் நீரிழிவு
20விழுக்காடு என்கிறார்கள்

‘சக்கர’வர்த்திகளே
சலனப்படாதீர்கள்

நீரிழிவு என்பது
நோய் அல்ல; குறைபாடு

உணவு மருந்து உடற்பயிற்சி
மூன்றும் இருந்தால்
முறியடிக்கலாம்

நீரிழிவு எனக்கும் உள்ளது
என்று சொல்லத்
தயக்கமில்லை எனக்கு

நீரிழிவுதான்
எழுத்தாளர்களின்
முதல்விருது

அது கண்டறியப்பட்ட பின்புதான்
உடல்நலம் குறித்து விழிப்பானேன்

கணையம் கல்லீரல்
கண் குறித்து
அறிவு பெற்றேன்;
வாழ்க்கை முறையை
ஒழுங்கு செய்தேன்

உண்ணும் பொருளில்
என்ன உள்ளது என்று
எண்ணி உண்ணுங்கள்

அஞ்ச வேண்டாம் யாரும்.

மாவுச்சத்து குறைத்துப்
புரதத்துக்கு மாறுங்கள்

நார்ச்சத்து மிக்க பொருளை
நாடி உண்ணுங்கள்.
ஆப்பிள் பப்பாளி
அளவோடு கொள்ளுங்கள்

முக்கனியும் வேண்டாம்; வேறு
எக்கனியும் வேண்டாம்

சுறுசுறுப்புதான்
முதல் மருந்து

நடக்க நடக்க
நன்மை நடக்கும்

நீரிழிவு இல்லாதவர்கள்
அறுபதில் மறைவதும் உண்டு;
நீரிழிவு உள்ளவர்கள்
தொண்ணூறு தொடுவதும் உண்டு

வாழ்த்துக்கள்;
வாழுங்கள்

✍️வைரமுத்து

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button