இராமநாதபுரம்கட்டுரைகள்முதுகுளத்தூர்

பூக்குளம் மனிதநேயச் சமத்துவக் கொள்கைவாதி காயாம்பூ புலவர்

பூக்குளம் மனிதநேயச் சமத்துவக் கொள்கைவாதி காயாம்பூ புலவர்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள பூக்குளம் என்னும் சிற்றூரில் பிறந்தவர் காயாம்பூ புலவர். இவர் 1932ஆம் ஆண்டு பிறந்தவர். உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்மொழியின் மீது தீராத பற்றுக் கொண்ட இவர் மனிதநேயமும் சமத்துவக் கொள்கையும் உடையவராகத் திகழ்ந்தவர்.
இளஞ்செம்பூர் தொடக்கப்பள்ளி, முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி, சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்.
உடற்கல்வி ஆசிரியராகக் கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், சிக்கல், அபிராமம், முதுகுளத்தூர் ஆகிய ஊர்களில் பணியாற்றியுள்ளார்.
1963ஆம் ஆண்டு செம்பொன்குடியைச் சேர்ந்த ராஜலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். செந்தமிழ்ச்செல்வி, மாதவி, பொற்கொடி, மணிவண்ணன், நெடுஞ்செழியன், ராஜாராம் பாண்டியன், திருமாறன் ஆகியோர் இவரது பிள்ளைகள் ஆவர்.
உடற்கல்வித் துறையைச் சார்ந்தவராக இருந்தபோதிலும், தமிழ்மொழியின் மீது தனிப்பற்றுக் கொண்டிருந்தார். மரபுக் கவிதைகளை இயற்றும் ஆற்றல் பெற்றவர். கவிஞர் கண்ணதாசன் நடத்திய வெண்பாப் போட்டியில் கலந்துகொண்டு கவிதை படைத்துள்ளார். தொடர்ந்து, ‘தென்றல்’, ‘முரசொலி’ போன்ற இதழ்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி மலர்களிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
அரசியல் மற்றும் இலக்கியத் துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். முன்னாள் தி.மு.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினராகவும், தி.மு.க. இலக்கிய அணித் தலைவராகவும், செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றுவதற்காக நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்றுப் போராடியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அபிராமம் ஆண்டநாயகபுரத்தைச் சேர்ந்த பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இவரது ஊருக்கு வருகைதரும் போதெல்லாம், இவரது இல்லத்தில் விருந்தோம்பல் நடைபெறுவது வழக்கம்.
நூல் வாசிப்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். நாள்தோறும் நான்குக்கும் மேற்பட்ட நாளிதழ்களையும் மாத இதழ்களையும் வாசித்து வந்தவர். தான் வசித்து வந்த இல்லம் முழுவதும் புத்தக அலமாரிகளை அமைத்து, ஏராளமான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். இவரது இல்லமே ஒரு சிறிய நூலகம்போல் காட்சியளித்தது.
இளஞ்செம்பூர் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான நூல்களை நூற்கொடையாக வழங்கியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் கல்வியில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் பரிசுத்தொகையும் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நினைவிடம் அமைப்பதற்காக, இவரது மருமகன் நம்புராஜன் குடும்பத்தினரின் பங்காளி வகையறா சார்பில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவரது பெயர்த்தி ஐஸ்வர்யா, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு பட்டம் பெற்றபோது, தமிழக ஆளுநரிடமிருந்து ஏழு விருதுகளைப் பெற்றுள்ளார்.
உடற்கல்வி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் நூல்கள் பலவற்றைக் கற்று, தமிழ் அறிஞர்கள் பலருடன் நட்புறவு கொண்டு வாழ்ந்தவர் காயாம்பூ புலவர். சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் மக்களும் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகநிலையில் முன்னேறி, சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைக் கொண்டிருந்தார். மனிதநேயம், சமத்துவம், தமிழ்ப்பற்று, வாசிப்பு, கல்வித் தொண்டு ஆகியவற்றைத் தனது வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு வாழ்ந்த பூக்குளம் காயாம்பூ புலவர், 08.11.2026 அன்று இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.

கட்டுரையாளர்:
முனைவர் சே.முனியசாமி
இராமநாதபுரம் மாவட்டப் புலவர் ஆய்வாளர்
தமிழ் உதவிப் பேராசிரியர்
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button