கவிதைகள் (All)
சனநாயகமாய்..
சனநாயகமாய்..
“
இருப்பாரின் பொருளெல்லாம் நாட்டுடமை?
இயலானின் முகத்திலோ பேச்சுரிமை..
அறியானின் செயலெல்லாம் ஆளுரிமை
அடைக்கலம் ஆனது நமதுரிமை!
கல்லாரின் பேச்சது பூச்சுகளே
கற்பாரை தானிங்கு காணலியே..
விருப்பார்கள் போல்தானே பொய் பேச்சு
விளையாத நெல்தானே உயரமாச்சி..
கற்பனை பேச்சுகள் கடை விரிப்பாய்..
கள்ளங் கபடங்களே முகத்துதியாய்
வல்லமை காணாத ஏக்கங்களாய்..
வரவெல்லாம் விளையாட்டுத் தேடல்களாய்!
ஆசைக்கே விதை போட்டு விளம்பரமாய்..
அங்கங்கு நிற்கின்ற வியாபாரமாய்?!
ஈகங்கள் காணாத ஈகிகளாய்
எல்லோர்க்கும் எல்லாமும் என்ற வெறுமைகளாய்..
கால்வாயின் நீர்வரா விளைநிலமாய்
கண்கெட்ட பின்னாலும் விழும் வடிவாய்
இன்று எங்குமாய் ஆனது சனநாயகம்!
இதற்கே இங்கெங்குமாய் துதிப் பாடல்களே?!
ஆரடா சரியென்பார் சாதனையாய்?
அழிப்பதற்கா இங்கு காவல் நிற்பார்?
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.
