முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
(11.11.1899 – 19.12.1994)

தமிழ்க் ‘காதலராய்’ வாழ்வைத் தொடங்கி தமிழ்க் ‘காவலராய்’ வாழ்வை நிறைவு செய்தவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.
இயல், இசை நாடகம் என்ற மூன்று தமிழையும் உள்வாங்கி; பேசியும் எழுதியும் இயங்கியும் காத்து நின்றதால் அவரைச் சரியாகவே ‘முத்தமிழ் காவலர்’ என்று திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் 1957இல் விருது தந்து பாராட்டியது. இதை உணர்ந்தே
“பேச்சு பவளம்; பெருந்தொண்டு நல்முத்து மூச்செல்லாம் தூயதமிழ்…” என்று கவிஞர் சுரதா தங்கச் சொற்களால் கவி சொன்னார்.
1997இல் திருச்சியில் அமைந்த
அரசு மருத்துவக் கல்லூரி,
அவர் பெயராலேயே ‘கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி’ என்று அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்த பெயர் எவ்வளவு பொருத்தம் என்பதை வரலாறு சொன்னது.
பூக்கின்ற மலரெல்லாம் மணப்பதில்லை; புகழுடம்பை அனைவருமே பெறுவதில்லை
என்ற தமிழ்க் கவிதையினை மெய்யாக்கும்படி தமிழுடம்பைப் புகழுடம்பாக்கி, தம் பெயரை நிலைநாட்டியவர் – முத்தமிழ்க் காவலர், தமிழ்ச் செம்மல், தமிழ் வித்தகர், சித்த மருத்துவ சிகாமணி, வள்ளுவவேள், செந்தமிழ்க் காவலர், இலக்கியச் செல்வர், தனி நாயகர், உலகத் தமிழர்ச் செம்மல், கலைமாமணி, தமிழ்மறைக் காவலர் என பல பட்டங்களுக்குச் சொந்தக்காரர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், தமிழிசை மீட்சிக்காகவும் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்.
இவரின் தந்தையார் பெரியண்ணன் அவர்கள் தமது மூத்த சகோதரர்கள் கிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தததோடு கூட்டாகப் புகையிலைத் தொழிலை யும் நடத்தி வந்தார். மூவரின் முதலெழுத்தைக் குறிக்கும் வகையில் ‘கி.ஆ.பெ.’ (K.A.P) எனும் பெயரினைத் தொழிலுக்குப் பயன்படுத்தியதால் இந்தப் பெயரே காலப்போக்கில், விசுவநாதம் அவர்களுக்கும் தலைப் பெழுத்தாக நிலைத்து விட்டது.
வாலையானந்த சுவாமிகள் மூலம் சைவப்பற்றையும், மறைமலையடிகள் மூலம் தமிழ்ப்பற்றையும் வளர்த்துக் கொண்டார். ஆயினும் சைவத்தின் பெயரால் சாதி ஏற்றத்தாழ்வு பாராட்டினால் அதை ஏற்க மறுத்தார் கி.ஆ. பெ.வி. சிவதீட்சைப் பெறாத தாழ்த்தப்பட்ட மக்கள் திருவாசகம் படிப்பதற்கு கி.ஆ.பெ.வி. அனுமதி கேட்டபோது சைவராகிய வாலையானந்த சுவாமிகள் மறுத்தார். அதுமுதல் தன் கழுத்தில் சிவதீட்சைப் பெற்று தான் அணிந்திருந்த உத்திராட்ச மாலையை இனி அணிவதில்லை என்று கழற்றி வீசினார்.
இந்தி எதிர்ப்புப் பரப்புரைக்கு கி.ஆ.பெ.வி. தூத்துக்குடிக்கும், திருநெல்வேலிக்கும் சென்றபோது அவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நெல்லை மேலை வீதியில் கற்கள் வீசப்பட்டதில் நெற்றி உடைந்து இரத்தம் வழிந் தோடிய போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. அப்போது அவர் “நான் வீட்டிலிருந்து புறப்படும் போது திரும்ப வருவதாகச் சொல்லிப் புறப்படவில்லை. நான் உயி ரோடு இருந்து தமிழை வளர்ப்பதை விட என் புதைகுழியே அதிக மாக வளர்க்கும்!” என்றார். எட்டயபுரத்தில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கி.ஆ.பெ.வி. பேசும் போது கல்லெறிதல் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது முத்தமிழ்க் காவலரின் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தோடியது. உடனடியாக கூட்டம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நடந்த முதல் கட்ட
இந்தி எதிர்ப்புப் போரில் மட்டும் 12 மாவட்டங்களில் 314 ஊர்களில் 480 நாட்கள் 617 சொற்பொழிவுகளை கி.ஆ.பெ.வி. நிகழ்த்தி சாதனை படைத்தார்.
இந்தி எதிர்ப்புப் போரின்போது கி.ஆ.பெ.வி. மகன் இராசரத்தினம் மறைந்தார். அதுபற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. மகன் இறந்த அன்றும், மறுநாளும் தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது ‘விடுதலை’ தலையங்கத்தில் “வங்க நாட்டு பாபு சுரேந்திரநாத் பானர்ஜி
தம் மகன் இறந்த போது அவரின் மனத் திண்மை மாறாது தொடர்ந்து பணியாற்றியதைப் போல் கி.ஆ. பெ.வி. தம் மகன் இறந்தபோதும் கலங்காது இந்தி எதிர்ப்புப் போரில் போராடி வருகிறார்” என்று தந்தை பெரியார் பாராட்டி எழுதினார்.
இன்றைய மாறிவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப சூழ்நிலைக்கேற்பத் தமிழ் மொழியின் உத்வேகமும் மாறிவருகிறது. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஒரு இனத்தின் வளர்ச்சி என்பார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சி ஒரு ஒட்டுமொத்த இனத்தையே கட்டிப்போடுவதாக இருக்கிறது. ஒருசில மொழிக்கே இப்படிப்பட்ட உள்ளார்ந்த பண்பு இருக்கும் என்பது அறிஞர்களின் கூற்று. அப்படிப்பட்ட தமிழ் மொழியை வளர்க்க உழைத்த ஏராளமான அறிஞர்களுள் முத்தமிழ்க் காவலரும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், தமிழறிஞர், அரசியலர், இதழாளர் எனப் பன்முகம் கொண்ட கி.ஆ.பெ.விசுவநாதம்,
‘சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த மாமனிதர்’ என்று போற்றப்படுபவர்.
தமிழ் இலக்கியங்களை வெறும் பாடப்புத்தகமாக மட்டும் பார்க்காமல், அவை எப்படியெல்லாம் அன்றாட வாழ்க்கைக்குப் பாடமாகவும் பாலமாகவும் இருக்கிறது என்பதைச் சொல்வதற்குத் தன்
வாழ்நாளை அர்ப்பணித்தவர் கி.ஆ.பெ.விசுவநாதம். அவருடைய படைப்புகள் எல்லாமே பாமரருக்கும் புரியும்படி எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள், சங்க இலக்கியங்களின் இன்றைய தேவைகள் போன்றவையெல்லாம் காலத்துக்கேற்ற உதாரணங்களுடன் பள்ளி மாணவரும் புரிந்துகொள்ளும்படி படைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவருடைய படைப்புகள் தமிழறிஞர்களைத் தவிர பொதுமக்களுக்கு இன்னும் போய்ச்சேரவில்லை என்பது
மிகுந்த வருத்தத்திற்குரியது.
தமிழ் மொழிக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கி.ஆ.பெ.விசுவநாதம்,
தமிழ் படிப்பதற்காகப் பள்ளி சென்றதில்லை. சிறு வயதில் முத்துசாமி கோனாரிடம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். பிறகு, வேங்கடசாமி நாட்டார், வேதாசலம், கலியாணசுந்தரனார், சோமசுந்தர பாரதியார் போன்ற புகழ்பெற்ற தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கியங்கள் கற்றுப் புலமை பெற்றார். வாலையானந்த சுவாமிகளிடம் சைவத்தைக் கற்றறிந்தார். இந்த ஆளுமைகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் வகையில் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டார் விசுவநாதம்.
தனிமனித ஒழுக்கம், நற்பண்புகளைப் பேணுதல், இல்லறத்தைச் செம்மையாக்குதல், தமிழ் மொழியுணர்வை ஊட்டுதல், சமூக ஒற்றுமையுணர்வின் மகத்துவம், தமிழைக் கற்க இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல்
போன்ற பணியைத்தான் முத்தமிழ்க் காவலரின் புத்தகங்கள் செய்கின்றன. அறிஞர்களிடம் மட்டுமே புழங்கிக்கொண்டிருக்கும் அவரது ஆக்கங்களை வெகுமக்களிடம் கொண்டுசேர்க்க முற்படுவதுதான் அவரது பிறந்த நாளில் நாம் எடுக்க வேண்டிய முன்னெடுப்பு.
உலகில் தொன்மையான பல மொழிகள் வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் அவ்வாறு ஆகிவிடக் கூடாதென்று, தமிழ் மொழியைப் பாதுகாத்து வளர்க்க, ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வந்தார்.
அவருடைய வேண்டுகோளை ஏற்று அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தஞ்சையில் தமிழுக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். இது கி.ஆ.பெ.யின் சாதனைகளுள் ஒன்றாகும்.
அண்ணா, தமிழக முதல்வராக இருந்து நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று, மாநாடு வெற்றிபெறத் துணை நின்றார்.
மேலும், தமிழுக்கென்று சங்க காலத்தைப்போன்று 49 பேர் கொண்ட புலவர் குழு ஒன்றையும் தமது மணிவிழாவின்போது (1958) தோற்றுவித்தார். மலேசியா, சிங்கப்பூர், பர்மா, பிரான்ஸ், அரபு நாடுகள், ஜெர்மனி, லண்டன் முதலிய அயல் நாடுகளுக்கெல்லாம் இலக்கியப் பயணம் மேற்கொண்டு தமிழ் மணத்தைப் பரப்பினார்.
68 ஆண்டுகளாக செம்மையாக இயங்கிக் கொண்டிருக்கும்
புலவர் குழு முத்தமிழ்க் காவலரின் மறைவுக்குப் பின்னர் அவர்தம் மகள் மருத்துவர் மணிமேகலை அவர்களால் கட்டி காக்கப்பட்டு இன்று விஐடி வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன் அவர்கள் தலைமையில்
வெகு சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
குறள்நெறியை அறுபதாண்டு காலம் தமது பேச்சாலும் எழுத்தாலும் முத்தமிழ்க் காவலர் உலகெங்கும் பரப்பியதன் காரணமாகப் பல திருக்குறள் அமைப்புகள் தோன்றின. தி மு க கலைஞர் தமிழக முதல்வர் தமது ஆட்சிக் காலத்தில் “வள்ளுவர் கோட்டம்’ அமைத்து கி.ஆ.பெ.வுக்கு “திருக்குறள் விருது’ அளித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழரின் மருத்துவ முறையாக, தொன்மையான சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்காக எழுதியும், பேசியும் கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றை நடத்தியும் வந்தார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது சித்த மருத்துவத்துக்காகத் தனி வாரியம் அமைக்கவும் காரணமாக இருந்தார்.
தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர், நிறுவநர், அமைப்பாளர், புரவலர், பொருளாளர், ஆய்வுக்குழு உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், ஆசிரியர் (தமிழ்நாடு), துணையாசிரியர் (ஆனந்தபோதினி), பொறுப்பாசிரியர் (விடுதலை, குடியரசு) சிறப்பாசிரியர் (தமிழின ஓசை), எழுத்தாளர், பேச்சாளர் ஆகிய பன்முகம் கொண்டவர். தமிழகத்தில் பேச்சும் எழுத்தும் கைவரப்பெற்ற குறிப்பிடத்தக்க சிலருள் முத்தமிழ்க் காவலரும் ஒருவர்.
95 அகவை வரை ஒரு
தமிழ்த் தேசியராகவே தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்து வந்த அவர் 19.12.1994 அன்று மறைந்தார். இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன் விடுத்த அறிக்கையில் “தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப் பாட மொழியாக்கினால் நான் மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் சாவேன்” என்று இறுதி ஆசையை வெளிப்படுத்தினார்.
தமிழ் வாழும்வரை
முத்தமிழ்க் காவலரும் வாழ்வார் !
- சுகுமார் (எ) நற்குமரன்