இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட 290 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட 290 கிலோ கஞ்சா பறிமுதல்
உச்சிப்புளி அருகே ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் – 2 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பெரியபனிவலைசை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ கஞ்சாவை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சம்பவ விவரம்:
போதைப்பொருள் கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் G. சந்தீஷ் IPS உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.
துணை கண்காணிப்பாளர்கள் முத்துராஜ், சிவசங்கரன், ஆய்வாளர்கள் சுல்தான், பாதுஷா மற்றும் தனிப்படை போலீசார் முனியசாமி, மணிமாறன், தர்மராஜன், பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழு கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடத்தியது.
அப்போது 2 கிலோ வீதம் 145 பொட்டலங்களாக பிரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 290 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது & தேடுதல்:
இதுதொடர்பாக தினேஷ் மற்றும் களஞ்சிஸ்வரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தல் கும்பலில் மேலும் 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
SP ஆய்வு:
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இராமநாதபுரம் ஆயுதப்படை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு மாவட்ட SP G. சந்தீஷ் நேரில் ஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து சன்மானம் வழங்கினார்.
கடந்த சில நாட்களில் மட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




