இராமநாதபுரம்

இராமநாதபுரம் ANTF அதிரடி: 1.4 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் -ஆய்வகத்துடன் 9 பேர் கைது

இராமநாதபுரம் ANTF அதிரடி: 1.4 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் -ஆய்வகத்துடன் 9 பேர் கைது

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANTF) ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடித்துள்ளது. இந்த சோதனையில் சுமார் 1.4 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சூடோஎபிட்ரின் (1.9 கிலோ), சிவப்பு பாஸ்பரஸ் (5 கிலோ), அயோடின் (4.8 கிலோ) போன்ற மூலப்பொருட்கள், பிற அமிலங்கள், வினையூக்கிகள் (Reagents), தின்னர்கள் மற்றும் ஒரு மெத்தம்பெட்டமைன் தயாரிப்பு ஆய்வகம் மற்றும் ஆய்வக உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 27, 2026 அன்று மாலை சுமார் 17:00 மணிக்கு காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் செயல்பட்ட இராமநாதபுரம் ANTF குழு, இராமநாதபுரம் நகராட்சி வாட்டர் டேங்க அருகில் சோதனை நடத்தி, மார்த்தாண்டம், செட்டிச்சார்விளையைச் சேர்ந்த இராமநாதபுரத்தில் பணிபுரியும் ஜபீஷ் (25) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிராம் மெத்தம்பெட்டமைன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஜபீஷிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் இந்த போதைப்பொருளை முகமது உமருல் ஜமீன் (22) மற்றும் முகமது அஸ்லம் (22) ஆகியோரிடமிருந்து வாங்கியது தெரியவந்தது. உடனடியாகச் செயல்பட்ட ANTF குழு, காரிக்கூட்டத்தில் உள்ள பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள அவர்களின் வீட்டைச் சோதனை செய்து, இருவரையும் கைது செய்ததுடன், மேலும் 08 கிராம் மெத்தம்பெட்டமைனையும் பறிமுதல் செய்தது. ஜமீன் மற்றும் அஸ்லமிடம் நடத்திய கூடுதல் விசாரணையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, காதர் பிச்சை தெருவைச் சேர்ந்த ஷேக் முகமது (38) என்பவரிடமிருந்து இந்த போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது இருப்பை உறுதி செய்த தனிப்படை, அவரிடமிருந்து 120 கிராம் மெத்தபெட்டமைனையும் பறிமுதல் செய்தது. விசாரணையின் போது, இந்த போதைப்பொருள் இளையான்குடியைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் (52) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று ஷேக் முகமது கூறினார். இந்தத் தகவலைத் தொடர்ந்து, தனிப்படை ஹபீபுர் ரஹ்மான், சிக்கந்தர் பாதுர்ஷா (53), ஜமால் மொய்தீன் (60) ஆகியோரைக் கைது செய்து, அவர்களிடம் இருந்து முறையே 300 கிராம், 100 கிராம் மற்றும் 180 கிராம் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் நடத்திய தீவிர விசாரணையில், இந்த கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளி இளையான்குடியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் தோல்பொருள் தொழில் செய்து வருகிறார். போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்து, இளையான்குடியைச் சேர்ந்த ஜாஹிர் உசேனுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜாஹிர் உசேன் மற்றும் இருவர் சேர்ந்து, ஜாஹிர் உசேனுக்குச் சொந்தமான லேத் பட்டறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெத்தபெட்டமைன் தயாரிப்பு ஆய்வகத்தில் இந்த போதைப்பொருளைத் தயாரித்துள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையில், தனிப்படை அந்த வளாகத்தில் சோதனை நடத்தி, 670 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சூடோஎபிட்ரின் (1.9 கிலோ), சிவப்பு பாஸ்பரஸ் (5 கிலோ), அயோடின் (4.8 கிலோ) ஆகிய மூலப்பொருட்கள், பிற அமிலங்கள், வினையூக்கிகள், தின்னர்கள் மற்றும் ஆய்வக உபகரணங்களைக் கைப்பற்றியது. மொத்தமாக காவல்துறையால் நடத்தப்பட்ட சோதனையில் 1.37 கி.கி மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டதோடு இந்த குற்ற பின்னனி முழுவதுமாக ஆராயப்பட்டு மேலும் இருவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button