டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு திருவாடானை வாலிபர் தேர்வு
டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு திருவாடானை வாலிபர் தேர்வு
திருச்சி மாவட்ட கிரிக்கெட் அணியில் டி.என்.பி.எல்., போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட திருவாடானை வாலிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து மகன் ரமேஷ் 35. இவர் சிங்கப்பூரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கிறார். ஓய்வு நேரங்களில் அங்குள்ள மைதானங்களில் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார்.
இவரது திறமையை கவனித்த சிங்கப்பூர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் அவரை தங்களது நாட்டு அணியில் சேர்த்துக் கொண்டனர்.
இதையடுத்து பல்வேறு நாடுகளுக்கு சென்று சிங்கப்பூர் கிரிக்கெட் அணியின் சார்பில் ரமேஷ் விளையாடினார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) டி 20 தொடருக்கான வீரர்கள் தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் திருச்சி மாவட்ட கிரிக்கெட் அணி சார்பில் விளையாட ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
சொந்த ஊருக்கு வந்த ரமேஷுக்கு கீழ்க்குடி கிராம மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.




