பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் 5 மணி நேரத்தில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் 5 மணி நேரத்தில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வார சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த சந்தைக்கு உள்ளூர் மக்களுடன் சேர்ந்து அண்டை மாவட்டங்களான சிவகங்கை , விருதுநகர், மதுரை, தூத்துக்குடி,தேனி, புதுக்கோட்டையில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தை விட சற்றே அதிகரித்து காணப்பட்டது.
இதனால், அதிகாலை முதலே சந்தையில் திருவிழா போன்ற சூழல் நிலவியது. உள்ளூர் மற்றும் வெளி மாநில பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஏராளமான வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.
ஆடுகளை வாங்கவும், விற்பனைச் செய்யவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தையில் திரண்டனர்.
சந்தையில் ஆடுகள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனையாகின. குறிப்பாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தரமான ஆடுகளை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டியதால் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
மொத்தமாக சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விற்பனையில் மட்டும் ரூ. 3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆடு வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், சந்தையில் வாங்கப்பட்ட ஆடுகளை இஸ்லாமியர்கள் தங்களது வாகனங்களில் ஏற்றி மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். பக்ரீத் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் சந்தை முழுவதும் உற்சாகமான சூழல் காணப்பட்டது.
பரமக்குடி வார சந்தையில் மட்டுமின்றி மாநிலத்தின் பிற சந்தைகளிலும் ஆடுகள் விற்பனை சூடுபிடித்துக் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் அதிகளவில் விற்பனையாகுவதால், ஆடு வளர்ப்பு கீதாரிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.




