தமிழ்நாடு

காது கேளாதோர் பள்ளியும் களத்தில் இறங்கியது : பத்தாயிரம் விதைப்பந்துகள் தயாரிப்பு

காது கேளாதோர் பள்ளியும் களத்தில் இறங்கியது பத்தாயிரம் விதைப்பந்துகள் தயாரிப்பு

 பாளையங்கோட்டை காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கோடி விதைப்பந்துகள் உருவாக்கும் திட்டத்தில் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற நிகழ்ச்சி உற்சாகமாக நடந்து முடிந்தது.

 தமிழகத்தில் சீராக மழை பொழிவு இருந்திட, தொலைநோக்கச் சிந்தனையோடு மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பசுமை பணியில் சமூக நல ஆர்வலர் திருமாறன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று (19: 8: 2025) நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் அம்மையார் உருவாக்கிய காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்துகளை ஏராளமாக செய்து குவித்த நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை யாசிரியை ஜான்சி தலைமையில் தாளாளர் ஆர்.கே.ஜேக்கப், செல்வின் சாமுவேல், வரம் ஜவஹர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் விதைப்பந்துகள் செய்வதற்கு முன்பாக வந்தே மாதரம் முழக்கத்துடன் ஆரம்பித்தனர். பசுமைப் படை பொறுப்பாசிரியை பாலின் ஜோன்ஸ் ஒருங்கிணைப்பில் ஆசிரியர் கால்வின் வரவேற்றார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் “மண்ணும் மனிதனும் மாசுபடுவதை” எப்படி உறுதி செய்யலாம் என விளக்கினார். விதைப்பந்துகளையும் செய்து காண்பித்தார். சைகை மொழி பெயர்ப்பாளர் ஜோஷ்வா டேனியல் மிகத்திறமையாக திருமாறன் உரையை காது கேளாதோர்க்கு புரிய வைத்தார். முன் பருவப் பள்ளி குழந்தைகள் முதல் பிளஸ் 2 மாணவ மாணவியர் வரை விதைப்பந்து தயாரிப்பில் சுறுசுறுப்பாக இயங்கினர். பத்தாயிரம் விதை உருண்டைகளை அரை நாளில் செய்த பிள்ளைகளுக்கு “நெல்லை- தென்காசி – கேரளா” ஹரி பிரியாணி அதிபர் ஹரிஹர செல்வன் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்வை ஆசிரியர்களும், பிள்ளைகளும் மிக வித்தியாசமாக உணர்ந்ததாக தெரிவித்தனர். இதுவரை 43 லட்சத்து 10 ஆயிரம் விதைப்பந்துகள் தென் தமிழகத்தில் மாணவ மாணவியர் மூலம் வீசப்பட்டுள்ளதாக திருமாறன் தெரிவித்தார். தலைமை ஆசிரியை ஜான்சி, ஆசிரியை பாலின் ஜோன்ஸ் அனைத்தையும் ஒருங்கிணைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button