திருச்செந்தூர் அரசு பள்ளி குழந்தைகள் அசத்தல்!

திருச்செந்தூர் அரசு பள்ளி குழந்தைகள் அசத்தல்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விதைப்பந்து புரட்சி தீவிரமாகியுள்ளது. விதைப்பந்துகள் தயாரித்து இயற்கைக்கு அர்ப்பணம் செய்யும் பசுமை பணியை சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ திருமாறன், பல் மருத்துவர் ஏகலைவன், வரம் ஜவகர் பள்ளிகளில் தீவிர படுத்தியுள்ளனர். சியன்னா பரமேஸ்வரன், திருச்செந்தூர் உதயகுமார், மேட்டுப்பாளையம் ராஜ் பிரதீப், பழனியைச் சேர்ந்த நித்தியா ஆகியோர் விதைப்பந்து புரட்சி பயணத்தில் பங்கெடுத்துள்ளனர். திருமாறன் மேற்கொண்டு வரும் விதைப்பந்து தயாரிப்பில் நேரடியாக பள்ளி குழந்தைகளுடன் பரமேஸ்வரன், உதயகுமார் பங்கெடுத்தனர். திருச்செந்தூர் செந்தில்குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சண்முகம், முதல்வர் சத்யா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சில்வான் சுந்தர் சிங், திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை மரியாள், ஆசிரியை இருதய மேரி லையோலின் விதைப்பந்துகள் விஷயத்தில் மிக ஆர்வமாக தங்களது பள்ளி குழந்தைகளை ஈடுபட வைத்தது குறிப்பிடத்தக்கது. காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை பள்ளி குழந்தைகள் வெவ்வேறு கல்வி நிலையங்களில் விதைப்பந்துகளை உருட்டி தள்ளினர்.
மூளையை மூலதனமாகக் கொண்டு செம்மண்ணில் உருண்டைகள் செய்து வேப்பமரம், புளிய மரத்தடியில் கிடக்கும் விதைகளை மண் லட்டுகளில் ஏடிஎம் கார்டு போல் செய்தால் முடிந்தது விதைப்பந்து தயாரிப்பு. பள்ளி கல்லூரிகளில் விதைப்பந்து தயாரிப்பில் தற்போது ஈடுபாட்டுடன் திருமாறனை அணுகி வருகின்றனர். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்த நல்ல விஷயத்திற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என மாணவர்களை களம் இறக்கி விட்டுள்ளனர். பசுமை புரட்சி, வெள்ளைப்புரட்சி போல பின் ஒரு காலத்தில் விதைப்பந்து புரட்சியும் பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெறும்.
விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபடும் குழந்தைகளுக்கு ஹரி பிரியாணி நிறுவனம் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறது. ஒரு கோடி விதைப்பந்துகள் தயாரிப்பு திட்டத்தில் இணைய விரும்பும் கல்வி நிறுவனங்கள் 7708775647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என டிரஸ்ட் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.



