திருவாடானை அருகே வயல்வெளியில் புகுந்த 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள்: வனவிலங்குகளை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை!

திருவாடானை அருகே வயல்வெளியில் புகுந்த 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள்: வனவிலங்குகளை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோணி கிராமத்தின் அருகே உள்ள வயல்வெளிப் பகுதிகளில், 25-க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை மேய்ந்து சென்ற நிகழ்வு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் தெரிவிக்கையில் இப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், அப்பகுதிகளில் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாலும், மான்கள் தங்களின் வாழிடத்திலிருந்து வெளியேறி வயல்வெளிப் பகுதிகளுக்கும் சாலைகளுக்கும் வரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இவ்வாறு உணவு மற்றும் பாதுகாைத் தேடி சாலையோரப் பகுதிகளுக்கு வரும் புள்ளிமான்கள், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி மான்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.ஊருக்குள் அல்லது வயல்வெளிகளுக்குள் வரும் மான்களைத் தெருநாய்கள் துரத்தி கடித்துக் கொல்படும் சம்பவங்களும் அவ்வப்போது பதிவாகி வருகின்றன.
“வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அவற்றைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*
குறிப்பாக, அதிகமான மான்கள் நடமாடும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் (Signboards) வைப்பதுடன், வாகன ஓட்டிகள் வேகத்தைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், வனத்துறையினர் இப்பகுதிகளில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி மான்கள் பாதுகாப்பாக வாழ்விடத்திற்குத் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.





