கட்டுரைகள்

சுயநல வேடதாரியின் கரிசனத்தின் ரகசியம் : எஸ் வி வேணுகோபாலன்

மோடிக்கு வெள்ளிவிழா எடுக்கும் சந்திரபாபு நாயுடு

சுயநல வேடதாரியின் கரிசனத்தின் ரகசியம் எஸ் வி வேணுகோபாலன்

சுவர்கள் எல்லாம் இற்றுப் போய், மேற்கூரை சரிந்து, எப்போது இடிந்து விழுமோ என்று இருக்கும் ஒரு கட்டிடத்திற்கு வெள்ளிவிழா நடத்திட சான்றிதழ் கொடுத்திருக்கிறார் ஓர் உத்தமர். எல்லா விதங்களிலும் தோற்றுப்போன – பல வகைகளிலும் அம்பலப்பட்டு நிற்கிற – நாட்டு மக்களுக்கு ஒரு நற்பயனும் விளைவிக்காத – விளைவிக்க விரும்பவும் விரும்பாத – நாசகர செயல்களையே முப்போதும் நாடி நிற்கிற, குறிப்பாக அக்டோபர் 10 அன்று தலைநகரில் ஒரு ஜனநாயக போராட்டத்தை சந்திக்கக் கூடத் துணிவு இன்றி எல்லாப் போக்குவரத்தையும் மூடி, இணைய வழி தொடர்புகளை முடக்கி, ஏதோ எதிரி நாட்டுக்காரன் போருக்கு வந்தது போல் இராணுவப் படைகளை தலைநகரில் குவித்து ஒடுங்கி உட்கார்ந்து இருக்கும் ஓர் அரசியல் வாழ்க்கையின் 25ம் ஆண்டு நிறைவு பற்றி சொந்தக் கட்சிக்காரர்கள் கூட பெரிதாக வாய் திறக்கவில்லை, ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து நிற்கிற மேதாவி எதற்காக கூரைமீது ஏறி நின்று இப்படி கூவோ கூவு என்று கூவி இருக்கிறார் தெரியவில்லை.  

அக்டோபர் 7 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் ஆந்திர பிரதேச மாநில முதல் அமைச்சரும் தேசத்திலேயே மிகப் பெரிய சொத்துக்கார முதலமைச்சர் என்று சில பத்தாண்டுகளுக்கு முன்பே பெயரெடுத்தவரும் அரசியல் களத்தில் மாமனார் என் டி ராமாராவையே கட்டம் கட்டிக் கவிழ்த்துத் தான் ஆட்சியைக் கைப்பற்றிய சாகச வீரருமான என்.சந்திரபாபு நாயுடு, இந்தியாவின் வரலாற்றையே புரட்டிப் போட்ட 25 ஆண்டு கால அரசியல் தலைமைப் பண்பாளர் நரேந்திர மோடி என்று கட்டுரை வடித்துள்ளார்.  

2023இல் திறன் வளர்ப்பு பயிற்சி தொடர்பான 370 கோடி ரூபாய் ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு மீதான வழக்குகள், அமலாக்கத் துறை குற்றச் சாட்டுகள் எல்லாம் 2024இல் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டு எல்லாவற்றிலும் இருந்து அவர் விடுவிக்கப்பட்டது நாடு அறியும். அதெப்படி, இத்தனை சிக்கலான புகார்கள், ஆவணங்கள், சாட்சியங்கள் எல்லாம் திடீர் என்று ஒன்றுமில்லாமல் போய் வழக்குகள் தள்ளுபடி ஆகப் போயிற்று? முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல்களில் 400 இடங்களில் வெற்றி பெறும் மமதையில் களத்தில் இறங்கிய பாஜக தனிப் பெரும்பான்மை கூடப் பெற முடியாமல் திண்டாடி ஆட்சியைத் தக்க வைக்க நடத்திய பேரத்தில் நிதிஷ் குமாரோடு சந்திரபாபு நாயுடுவும் ஓடோடிப் போய் கைகொடுத்து மோடி மூன்றாம் முறையாக பிரதமராக பட்டம் சூட்டிக் கொள்ள உதவினார்கள் அல்லவா, எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், செய்ந்நன்றி கொன்று விடக்கூடாதே என்று பரஸ்பரம் இவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் கூட்டுக் களவாணித்தனத்தின் அண்மைய காட்சி தான் இந்த மோடி துதிபாடல்.

நரேந்திர மோடி, ரயில் நிலையமே வந்திராத இடத்தில் கற்பனையான ஒரு பிளாட்பாரத்தில் வரவே வராத பயணிகளுக்கு ஓடோடிப் போய் டீ விற்றவர். இல்லவே இல்லாத ஒரு படிப்பை நடத்தவே நடத்தாத கல்வி நிறுவனத்தில் இருந்து அந்தக் காலத்தில் உருவாக்கமே செய்யப் படாதிருந்த கணினி எழுத்துருவில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருந்தவர். இந்தப் பேரண்டத்தில் செவ்வாய் கோளுக்கும் சூரிய நட்சத்திற்கும் மட்டுமே இன்னும் செல்லாதவர். இப்படியான அசாத்திய நாயகருக்கு சரிக்கு சரி ஈடு கொடுக்கவல்ல சாதனையாளர் தானே வாழ்த்துப் பா வாசிக்க முடியும்!  

வழி நெடுக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களை காசுக்கு வாங்குவது, மிரட்டி எடுத்து மடியில் போட்டுக் கொள்வது, எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடுவது என்கிற அரசியல் சதுரங்க வேட்டையில் மோடிக்கு முன்னோடி சந்திரபாபு நாயுடு. அந்தப் பெருமைகளை ஒப்பிட்டுத் தனது கட்டுரையில் அவர் எழுதாதது வருத்தமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவைக்கு திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட ருக்மணி மல்லிக், ஜூலை மாதம் அந்தப் பதவியை உதறி வெளியேறி, பாஜக கட்சியில் சரணடைந்து, முன்னதாகப் பதவிக்காலம் முடித்திருந்த 3 திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் வரிசையில் போய்க் கலந்து நாலாவது நபராக எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் நிற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயக சிறப்பு அம்சத்தையும் நாயுடு சுட்டிக் காட்டி இருக்க வேண்டாமா? தான் அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிட்டு தெலுங்கு தேச வேட்பாளரிடம் தோற்றது, உடனே தெலுங்கு தேசத்திற்குத் தாவியது, மாமனாரின் அன்பைப் பெற்றுக் கொண்டவாறே கட்சியைத் தனக்குள் அள்ளிச் செருகிக் கொண்டு அவரையே வெளியேற்றியது இவையெல்லாம் இன்று பாஜக நாடு முழுவதும் – அஸ்ஸாம், மணிப்பூர், மகாராஷ்ட்டிரம் தொடங்கி மேற்கு வங்கம் வரை நடத்திக் காட்டி வருவதை புளகாங்கிதத்தோடு பார்த்தபடியே தான் தனது பாராட்டுக் கட்டுரையை அவர் எழுதி இருக்க வேண்டும்.

வேளாண் சட்டங்கள் போட்டு தேசத்தின் ஒட்டு மொத்த விவசாயிகளின் பாடுகளை ஒழித்துக் கட்டி கார்பொரேட் பெருந்தொழில் நிறுவனங்களின் பலி பீடத்தில் இந்திய உணவுத் தேவையைக் கொண்டு கிடத்திட உழைத்துக் கொண்டிருப்பவர் தான் பிரதமர் நரேந்திர மோடி. மூன்று வேளாண் சட்டங்களை அத்தனை திமிரோடு பாஜக ஆட்சி கொண்டு வந்ததை தலைநகரில் ஓராண்டுக்கு மேலாக அனல் பறக்கும் வெயில், பொழிந்து தள்ளும் பெருமழை, நடுங்க வைக்கும் கடுங்குளிர் எல்லாப் பருவத்தையும் எதிர்கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய விவசாய சங்கங்களின் ஐக்கிய அமைப்பு மண்டையில் அடித்துப் பின்வாங்க வைத்தது. ஆந்திராவில் தான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் வேளாண் துறையை ஒழித்து ஐடி துறைக்கே முன்னுரிமை என்று கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்து மக்களின் கொந்தளிப்புக்குப் பதில் சொல்ல இயலாமல் விரட்டப்பட்டவர் தான் சந்திரபாபு நாயுடு.  

உள்ளூரில் எளிய மக்கள் வாழ்வாதாரங்களை நசுக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் திசைவழியில் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், மைக்ரோ சாஃப்ட் அதிபர் பில் கேட்ஸ் இவர்களையெல்லாம் ஹைதராபாத் மாநகருக்கு வரவழைத்துத் தனது சைபராபாத் கனவுகளை பீற்றிக் கொண்டவர் சந்திரபாபு நாயுடு. நரேந்திர மோடியின் அமெரிக்க விசுவாசத்தை அவர் மெச்சுவதில் என்ன வியப்பிருக்க முடியும்? உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கிலா அலகிலா போர் விளையாட்டை நடத்தி உலக மக்களை அச்சத்தின் விளிம்பில் கொண்டு நிறுத்தி இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியாக ஆர் எஸ் எஸ் பாஜக அரசின் பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதில் சந்திரபாபு நாயுடு உச்சி குளிர்ந்து போய் காவடி எடுத்து சிந்து பாடி இருக்கிறார்.

மக்களின் நம்பிக்கையைப் பெற்று குஜராத் முதல்வராக 2001இல் தொடங்கிய மோடியின் தலைமைப் பண்பு, 2014 முதல் பிரதமராக ஜொலிக்கிறது என்று ஒரு பொய்ச் சித்திரம் தீட்டுகிறார் சந்திரபாபு நாயுடு. அப்படியானால் இவர் ஏன் ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி அளிக்கவில்லை என்று சொல்லி எட்டு ஆண்டுகளுக்கு முன் அமைச்சரவையில் இருந்து தனது பிரதிநிதிகளை திரும்பப் பெற்றுக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார்? எந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் தொடங்கினாரோ அந்த காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து பாஜகவுக்கு எதிராகக் களம் இறங்கினார் ? மோடி ஆட்சி வாக்குறுதிகளை மதிக்காத மக்கள் விரோத ஆட்சி என்று பக்கம் பக்கமாக ஏன் அறிக்கைகள் வெளியிட்டார்? தென்னகத்தை வளர விடாதவர்கள் என்று 2018இல் ஒன்றிய பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தவர், இப்போதைய கட்டுரையில் கூச்சம் இன்றி, தில்லியில் இருந்து அதிகாரம் செலுத்த விரும்பாதவர் மோடி, மாநிலங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வண்ணம் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தைக் கொண்டாடுபவர் என்று எப்படி எழுதுகிறார்?

நவம்பர் 8, 2016இல் போலிக் காரணங்களை முன்வைத்து 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று திடுதிப்பென்று அறிவித்த மோடி, இனி டிஜிட்டல் மயமாகி விட்டது இந்தியா, யாருமே பணத்தாள்கள் பயன்படுத்துவது இல்லை என்று பம்மாத்து பேசி, பத்தாண்டுகள் கழித்து, இனி டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்தால் வரி செலுத்த வேண்டும் என்று மக்களை முட்டாள் ஆக்கி இருக்கிறார். கள்ளப்பணத்தை, கறுப்புப் பணத்தை, தீவிர வாதத்தை ஒழிக்கத் தான் பணமதிப்பு நீக்கம் என்று அவர் அடித்துவிட்டு பொய் பல்லை இளிக்கிறது. இவரைத் தான் சூத்திரதாரி, ராஜ தந்திரி என்று விவரிக்கிறார் சந்திரபாபு நாயுடு.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை ஒழித்துக் கட்டி விபி ஜி ராம் ஜி என்று பெயரால் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைக் குழி தோண்டிப் புதைத்த மோடியை, எளிய மக்களுக்கான நலச்சட்டங்களின் வடிவமைப்பாளர் என்று புகழ்கிறார் சந்திரபாபு நாயுடு. உணவுக் கிடங்குகளில் தானியத்தை பெருச்சாளிகளுக்கும், உணவுக் கிடங்குகளை அமைத்து தானியங்களைப் பதுக்கக் காத்திருக்கும் அதானி வகையறா பெருச்சாளிகளுக்கும் எடுத்து இறைத்துவிட்டு உணவுப் பஞ்சத்தை, பட்டினியை கோடிக்கணக்கான ஏழை மக்களின் தலையில் சுமத்தி இருக்கும் மோடி ஆட்சியை ரேஷன் கடைகளில் அள்ளியள்ளி வழங்கும் மோடியின் தரும துரைத்தனம் என்று வருணிக்கிறார் சந்திரபாபு நாயுடு.  

வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட பெருந்தொழில் நிறுவனங்களின் பல லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்ததோடு, ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் கார்பொரேட் கும்பலுக்கு வாரி வாரி சலுகைகள் வீசும் மோடி, உண்மையில் யாருக்கான தர்ம பிரபு என்று சொல்லி இருக்க வேண்டாமா அவர்?

கல்வித் துறையை சீரழித்து இருப்பது ஆர் எஸ் எஸ் பாஜக ஆட்சி. எல்லாப் போட்டி தேர்வு வினாத் தாள்களும் கசிவு, தேர்வு மோசடி என்று அம்பலப்பட்டு, இந்த ஜூலை நடைபெற்ற மாணவர் இளைஞர் எழுச்சிக்கு முன் பணிந்து கல்வி அமைச்சரை விலக வைத்தவர் தான் மோடி. மக்கள் நம்பிக்கை பெற்ற தலைவரின் லட்சணம் இது! 

உளறிக்கொட்டும் வேகத்தில் சிலர் உண்மைகள் சிலவற்றையும் கொட்டி விடத்தானே செய்வார்கள், விண்வெளியையும் தனியாருக்கு தாரை வார்த்து விட்டார் மோடி என்பதைப் பெருமையோடு எடுத்துப் பேசுகிறார் சந்திரபாபு நாயுடு. உள்நாட்டில் எண்ணெய் அரசியலை அம்பானி கும்பலுக்கு சாதகமாக அமைத்தவாறும், நாம் விரும்பும் நாட்டில் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இரட்டிப்பு வரி விதிக்கும் டொனால்ட் டிரம்புக்கு எதிராகச் சுண்டுவிரல் கூட உயர்த்தாத அடிமைத்தனத்தோடும் நடந்து வரும் மோடியை நவீன இந்தியாவை செதுக்கும் சிற்பி என்று கொண்டாடுகிறார் சந்திரபாபு நாயுடு. தேசத்தின் சொத்தான, நவ இந்தியாவின் கோயில்கள் என்று வருணிக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபரை, நவீன இந்தியாவின் வரைபடம் தீட்டியவர் என்கிறார் சந்திரபாபு நாயுடு.

சமூக அமைதி என்ன, மத நல்லிணக்கத்தின் கதி என்ன, தேச ஒருமைப்பாட்டின் நிலவரம் என்ன, சாதீய சக்திகளின் ஒடுக்குமுறை என்ன என்பதை எல்லாம் மறந்து கூடத் தனது கட்டுரையின் பேசுபொருளாகத் தொட்டுக் கொள்ளாத சாமர்த்தியத்தோடு மோடிக்கான புகழ்மாலை சூட்டி இருக்கும் சந்திரபாபு நாயுடு, இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று 2047 வரை இப்போதைய அவலமான, மோசமான திசையிலேயே இன்னும் தீவிரமாக நாடு நடை போடவேண்டும் என்று வாழ்த்தி (?) அருளி இருக்கிறார்.

2001இல் குஜராத் மாநிலத்தில் பூஜ் பகுதியில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுச் சொல்லொணாத துயரம் சூழ்ந்த வேளையில் நாடு முழுவதிலுமிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்ட போது சிறுபான்மை இஸ்லாமியருக்கு எதுவும் செல்லக்கூடாது, இந்துக்களுக்கு மட்டும் தான் என்று சொல்லும் அளவு வன்மத்தை உருவாக்கிய பெருமை தான் மோடிக்கு சேரும். 2002இல் ராம பக்தர்களை சிறுபான்மையினர் கொன்றனர் என்ற பழியைப் போட்டு வதந்தியை தீயாகப் பரவ வைத்து ஆயிரக்கணக்கில் இஸ்லாமிய மக்களை வெட்டிச் சாய்த்தது, கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி உள்ளிருக்கும் சிசுவையும் எரித்துப் போடும் அளவு அராஜகத்தை உருவாக்கியது, தண்டிக்கப்பட்ட கொடிய கயவர்களை தண்டனைக் காலத்திற்கு முன்பே விடுவிக்க வைத்து அவர்களை மாலை மரியாதையோடு வரவேற்றுக் கொண்டாட வைத்தது இந்தப் பெருமைகளை எல்லாம் பேசவில்லை சந்திரபாபு நாயுடு. பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர் அராஜகம், அயோத்தி கோயில் உண்டியல் கொள்ளை போன்றவற்றை இடம் இல்லாததால் ஒருவேளை எழுதாமல் விட்டுவிட்டு இருப்பார் போலும்.  

தேர்தல் பத்திர விஷயத்தில் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தது, இன்று தேர்தலையே பத்திரமில்லாது செய்வதற்கு ஞானேஷ் குமார் போன்ற ஒருவரை தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து பல கோடி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்தது எல்லாம் கூட நரேந்திர மோடியின் வெள்ளிவிழா சாதனையின் மைல் கற்கள். அதற்கு எதிரான நாடு தழுவிய பெரும் கொந்தளிப்பை தலைநகர் பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது. இவற்றையும் தனது பாராட்டுப் பத்திரத்தில் பதிக்க மறந்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. கொடுத்த ஆதரவுக்கு மேலாகக் கூவி இருக்கிறார் அல்லவா, அந்த மயக்கம் தான் காரணம். அது சரி, ஏன் இத்தனை கரிசனம், அவருக்கு?

கட்டுரையின் முதல் வரியில், ஏன், முதல் மூன்று சொற்களிலேயே ஒரு சூட்சுமம் உள்ளது. தனக்கு 48 ஆண்டு பொதுவாழ்க்கை நிறைவு பெற்றுள்ளது என்று தான் தொடங்குகிறார் சந்திரபாபு நாயுடு. அதன் பொருள், 2028இல் தனது பொன்விழாவை நரேந்திர மோடி நாடு முழுவதும் கொண்டாட வேண்டும், தனது புகழை தேச மக்களுக்குப் புத்தகம் போட்டுத் தரவேண்டும். ஏனெனில், 2029இல் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தங்களது ஆதரவு மோடிக்கும், ஆர் எஸ் எஸ் பாஜக கோஷ்டிக்கும் தேவைப்படும் என்பதை சூசகமாக முதலடியிலேயே கொளுத்திப் போட்டுவிட்டுத் தான் தனது சரவெடியை விரித்து வைத்து வாணவேடிக்கை காட்டி சிலிர்த்துப் போயிருக்கிறார் சுயநல அரசியல்வாதி, வேடதாரி சந்திரபாபு நாயுடு.  

பொய் சாட்சியம் சொல்பவர் வீட்டில் ‘வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே பாதாள மூலி படருமே மூதேவி சென்று இருந்து வாழ்வளே’ என்றாள் தமிழ் மூதாட்டி அவ்வை. மக்களைக் கொள்ளை அடித்த ஒரு வெள்ளிவிழாவையும், மண்ணைத் தின்ற வைத்த பொன்விழாவையும் மக்கள் ஒருபோதும் கொண்டாட மாட்டார்கள். ஓட ஓட விரட்டுவார்கள்! நன்றி: தீக்கதிர்: 12 10 2026

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button