வங்கி பணியாளர்கள் தற்கொலை
தீர்வுக்கு வழி என்ன ?
எஸ் வி வேணுகோபாலன்
வங்கி பணியாளர்கள் தற்கொலை:
தீர்வுக்கு வழி என்ன ?
எஸ் வி வேணுகோபாலன்
மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பொதுத் துறை வங்கி ஒன்றின் கராத் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்த ரவிகிரண் லாடே இந்த நவம்பர் 13 அன்று தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினாலும் மண்டல நிர்வாகம் இணையவழியில் அவ்வப்போது நடத்தும் காணொளிக் கூட்டங்களில் மற்ற அதிகாரிகள் முன்னிலையில் தனக்குத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட அவமதிப்புகளும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமும் தான் தன்னை இந்த முடிவை நோக்கித் தள்ளியது என்று கடிதத்தில் பதிவு செய்துவிட்டு யாரும் அற்ற நேரத்தில் வீட்டுக்குள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கடுமையான வேலை பளு, மோசமான பணிச்சூழல் ஏற்படுத்தும் மன அழுத்தம் காரணமாக நேரும் மரணம் அல்லது தற்கொலையை ‘கரோஷி’ என்று குறிப்பிடுகின்றனர் ஜப்பானியர்கள். 2024இல் மட்டும் ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், இந்தியாவில் அப்படியான பகுப்பு ஆய்வு இல்லை என்றாலும், அதே ஆண்டு, இந்தியாவில் பதிவு ஆகியுள்ள 1 லட்சத்து 70 ஆயிரத்து 246 தற்கொலைகளில், பல ஆயிரம் பேர் பணியிடத்து வேலைச் சுமை காரணமாகத் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று புரிந்து கொள்ள முடியும்.
பத்தாண்டுகளில் 500 தற்கொலை
வணிக இதழ் பத்திரிகையாளர் தமல் பந்தோபாத்யாய ஆகஸ்ட் 2025இல் எழுதிய தனது கட்டுரை ஒன்றில், வங்கித் துறையில் மட்டுமே கடந்த பத்தாண்டுகளில் 500க்கு அதிகமான தற்கொலைகள் என்று பதிவு செய்திருந்தார். எந்தெந்த வங்கி, எந்த அதிகாரி, என்ன சூழலில் தங்களது இன்னுயிரைப் போக்கிக் கொண்டனர் என்று இதயத்தை உலுக்கிப் போடும் விவரங்களோடு வந்திருந்த கட்டுரை அது.
கடந்த பத்தாண்டுகளில் 500 பேர் என்பது தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை. அந்த முடிவை நோக்கிப் போய், நல்ல வேளைக்குக் குடும்பத்தை நினைத்தோ நண்பர்கள் வழங்கிய ஆறுதல் சொற்களோ என்ன காரணத்தாலோ அந்த எண்ணத்திலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை யாருக்குத் தெரியும்! என்ன கொடுமை வந்தாலும் சகித்துக் கொண்டே வாழ்ந்து தொலைப்போம் என்று பரிதவிப்போர் கணக்கும் எங்கும் கிடைக்காது.
நிரப்பப்படாத காலியிடங்கள்
பெருகிக் கொண்டே செல்லும் வர்த்தகத்திற்கு ஏற்ப பணியாளர்கள் எண்ணிக்கையை உறுதி செய்ய மறுக்கும் போக்கு வேலையிடத்தில் உருவாகும் பிரச்சனைகளுக்குக் கண்ணுக்குப் புலப்படாத முக்கிய காரணி. புதிய தாராளமயக் கொள்கை நடைமுறைக்கு வந்தபின் வங்கித்துறையின் பணித் தன்மைகள் பெருமளவு மாற்றத்திற்குள்ளாகி வருகின்றன. 1990களில் ஓசைப்படாமல் நிர்வாகங்களுக்கு வந்த மத்திய அரசின் உத்தரவு, பணி நியமனத் தடை. பல வங்கிகளில் 1995 – 96 அளவில் புதிய நியமனங்கள் மெல்ல மெல்ல இழுத்து மூடப்பட்டன. பணியில் இருப்போர் மரணம் அடைந்தால் அவர்களது குடும்ப வாரிசுக்கு வங்கியில் வேலை கொடுத்து வந்த கருணை நியமனங்கள் கூட ஒரு கட்டத்தில் முற்றாக நிறுத்தப்பட்டு விட்ட கொடுமையும் நிகழ்ந்தது.
புதிய நியமனங்கள் இல்லாது போனது மட்டுமல்ல, 1979 முதல் இயங்கி வந்த வங்கிகள் தேர்வாணையக் குழுமத்தை (Banking Service Recruitment Board) 2001 ஒன்றிய பட்ஜெட் தாக்கலின் போது மூடப்படுகிறது என்று அப்போதைய நிதியமைச்சர் திரு யஷ்வந்த் சின்ஹா அறிவித்தார்.
ஆள் பற்றாக்குறையின் நீட்சி
2000 ஆண்டு பிறக்கும்போது கணினிகளில் நூற்றாண்டு மாற்றத்தின் குழப்பம் Y2K பிரச்சனை என்ற பெயரில் ஏற்பட்டது. இராப்பகலாக வங்கி பணியாளர்கள் அப்போது பட்டபாடு சொல்ல முடியாது. 2000ம் ஆண்டில் வங்கிகளில் விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டதும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வெளியேறினர். வெவ்வேறு வங்கிகள், வெவ்வேறு மென்பொருள், கோர் பாங்கிங் முறை அறிமுகம் இவற்றின் அமலாக்கத்தின்போதும் போதிய ஆட்கள் இல்லாது திண்டாடித் திணறியே வேலைகளை இருக்கின்ற பணியாளர்கள் சாதித்து முடித்தனர்.
2019ம் ஆண்டில் வங்கிகள் இணைப்பு தொடங்கப்பட்டதன் விளைவுகள் பெரிதாக எங்கும் விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டு மூன்று வங்கிகள் வேறொரு வங்கியோடு இணைவது எல்லாம் நீரோடு நீர் போல நாம் கூடுவோம் என்று இணைத்துக் கொண்டு விட முடியாது. இடமாற்றல் என்று வீசிய சுழல் காற்று, அதிகாரிகளைப் பந்தாடியது. கணவர் ஓரிடம், மனைவி தொலைதூரம் என்றெல்லாம் மாற்றப்பட்டுக் குடும்பத்திற்குள் விழுந்த இடி இலேசானது அல்ல. இத்தனைக்கும் பல லட்சம் காலியிடங்கள் அப்படியே நீடிக்க, வெளியே பல கோடி தகுதியுள்ள இளைஞர்கள் வேலைக்குப் போராடிக் கொண்டே இருக்கின்றனர்.
2020 – 21 கொரோனா கொடிய தொற்று நேரத்திலும் கடமை ஆற்றப் போனதன் விளைவாகத் தங்களது இன்னுயிர் இழந்தவர்கள் நூற்றுக் கணக்கில் ! 2016 நவம்பர் 8 அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகான நாட்களிலும் அப்படியான இழப்பு வங்கித்துறையில் !
பெருகும் மன அழுத்தம்
விரும்பியபோது விடுப்பு எடுக்கமுடியாது என்பதற்காகவே குடும்ப நிகழ்ச்சிகள், சங்கமங்களை இழக்கும் வருத்தம், பெற்றோரது முதுமையில் தங்களது கடமையைச் செய்ய முடியாத சோகம், விடுமுறை நாட்களில் கூட பணியாற்ற வேண்டிய அழுத்தமும் வாடிக்கையான ஒன்றாக சம காலத்தில் மாறி விட்டிருக்கிறது. எல்லோரும் நொறுங்கிவிடுவதில்லை தான். வாழ்க்கையின் மீதான ஆசையின் சங்கிலிக் கண்ணி மீது வந்து விழும் அவமதிப்புச் சொல், மோசமான பார்வை, கீழ்த்தரமான வசவு அது யாருக்கு நலிவுற்றுத் தெரிகிறதோ அங்கே அறுத்தெறிந்து விடுகிறது.
பணியாளர்கள் தற்கொலைக்குத் தாங்கள் பொறுப்பு அல்ல என்று ஊழியர்களின் குடும்ப பிரச்சனை மீது பழிபோட்டு நிர்வாகங்கள் தப்ப முடியாது. குடும்பத்தில் ஏன் பிரச்சனை மூண்டது என்பதைத் தேடினாலே பணிச் சூழல் தான் காரணம் என்ற இடத்தில் போய் நிற்கும் முள். வாழ விரும்பியே மனிதர்கள் படிக்கவும், போட்டித் தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெறவும், வேலையில் மகிழ்ச்சி பொங்க வந்து சேரவும் செய்கின்றனர். இளம் வயதில் சட்டென்று அத்தனை கனவுகளுக்கும் தீ வைத்துப் பொசுக்கிப் போட்டுவிட்டுத் தங்களைத் தாங்களே ஏன் மாய்த்துக் கொள்ளத் துணியப் போகிறார்கள்?
பணியிடத்தில் நிம்மதியற்ற சூழலில் நிர்வாகங்கள் ஆக்கபூர்வமான மாற்றங்கள் செய்யாமல், யோகா பயிற்சி செய், இசையைக் கேள், தியானம் செய், எதையும் மனத்தில் போட்டுக் கொள்ளாதே என்றெல்லாம் உபதேசம் செய்து பிரச்சனையைக் கடந்து விட முடியாது.
என்று தணியும் அதிகார போதை ?
500 பேர் தற்கொலை பத்தாண்டுகளில் என்ற எண்ணிக்கை, வங்கிகளின் உயர் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஏன் சுடுவதில்லை? தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அடிமைகள் அல்ல, தாங்கள் அவர்களது எஜமானர்களும் அல்ல என்பது ஏன் அவர்களுக்குப் பிடிபட மறுக்கிறது? சாட்டையைச் சுழற்றும் அதிகாரத் தன்மையிலிருந்து அவர்கள் எப்போது தங்களை விடுவித்துக் கொள்வார்கள்?
இந்த நவம்பர் 13 அன்று ரவிகிரண் தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக எழுதிய கடிதம் ஒன்றில், தன்னைக் கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டும் அதிகாரி பெயரைக் குறிப்பிட்டு அவருக்கே எழுதுகிறார்: ‘அய்யா, மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு திறமை படைத்தவர்கள், யார் ஒருவரும் எல்லாம் அறிந்தவராக இருப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் !’
இது அவர் ஒருவருக்கு மட்டும் சொல்லப்பட்ட வாக்கியம் அல்ல.
நன்றி: தமிழ் இந்து: நவம்பர் 24, 2026..