
துபாய் தர்பார் ஊடக நிறுவனம் சார்பில்
சமூக சேவையின் வரைவிலக்கணம்
புரவலர் ஹாஷிம் உமர் நூல் வெளியீட்டு விழா

துபாய் :
துபாய் தர்பார் ஊடக நிறுவனம் சார்பில் சமூக சேவையின் வரைவிலக்கணம் புரவலர் ஹாஷிம் உமர் நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்புடன் நடந்தது.
நூல் வெளியீட்டு விழாவுக்கு துபாய் தர்பார் ஊடக நிறுவனத்தின் தலைவர் முஹம்மது கபீர் தலைமை வகித்தார்.
அவர் தனது உரையில் இலங்கையின் சமூக சேவகர் புரவலர் ஹாஷிம் உமரின் சமூக சேவையின் வரைவிலக்கணம் துபாயில் வெளியிடப்படுவது மிகவும் பெருமகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
அதனைத் தொடர்ந்து தொடக்கவுரை நிகழ்த்திய மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், இலங்கையின் சமூக சேவகர் புரவலர் ஹாஷிம் உமரின் சமூக சேவையின் வரைவிலக்கணம் என்ற நூல் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக உள்ளது.
புரவலர் ஹாஷிம் உமர் மாணவர்கள் உயர்கல்வி படிக்க தனது சொந்த முயற்சியால் 140 பேருக்கு மடிக்கணினி வழங்கி சாதனை படைத்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும் 1,400 க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று அந்த நூலின் முதல் பிரதிகளை பெற்று எழுத்தாளர்களின் பணிகளை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்புக்குரியது. தொடர்ந்து அவரது முயற்சிகள் பெற வாழ்த்துவோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து பிரபல எழுத்தாளர் திண்டுக்கல் வினோத் சேகர், இலங்கை முகம்மது மபாஸ், ருஸ்தி அகமது, முகம்மது வாஜித், பாரூக் இசாம், சுப்ரமணி சிவலிங்கம் என்ற பாரதி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் திருவாரூர் நவாசுதீன், ஊட்டி காயத்ரி, குளச்சல் சபீக் உள்ளிட்ட பலர் பங்கேற்று நூலாய்வுரை வழங்கினர்.
அவர்கள் அனைவரும் இந்த நூல் இளைஞர்கள் தங்களது சம்பாத்யத்தில் பொது சேவையை செய்யக்கூடிய வகையில் ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பலர் சமூகத்துக்கு தொண்டாற்றக்கூடிய வகையில் உந்துதலாக இருக்கும் என தெரிவித்தனர். குறிப்பாக இலங்கையின் சமூக சேவைகரது இந்த நூலானது துபாய் மண்ணில் வெளியிடப்படுவது சிறப்பானது என குறிப்பிட்டனர்.
நூலாசிரியர் ஹாஷிம் உமர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஏற்புரை நிகழ்த்தினார்.காயத்ரி நன்றியுரை நிகழ்த்தினார்.





