கட்டுரைகள்

காவியத் தலைவி

அஞ்சலி: சௌகார் ஜானகி 

காவியத் தலைவி

 எஸ் வி வேணுகோபாலன் 

லைமாமணி ஆர் பிச்சுமணி அய்யரின் வீணை இசையோடு தொடங்கும் பாக்கியலட்சுமி (1961) திரைப்படத்தின் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ எனும்  அசாத்திய பாடல் பி சுசீலா அவர்களது மந்திரக் குரலில் ஒலிக்கும்போதே திரையில் ஒளிரும் சௌகார் ஜானகி அவர்களது முகத்தை எப்படி மறக்க முடியும்…..’கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றால் தோழி’ என்ற சரணத்தில், ‘கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி’ என்ற கேள்விக்கு அற்புதமான இசைக் கலைஞர் சத்யம் அவர்களது ஷெனாய் பதில் சொல்கிறேன் என்று தொடங்கி இழைத்து இழைத்து உருக வைத்துப் பிறகு, உனக்கே தெரியுமே, என்ன சொல்ல என்கிற மாதிரி விக்கித்து நிற்கும் இடத்தில் சௌகார் ஜானகி வெளிப்படுத்தும் உணர்வுகள் அபாரமானவை.  தனக்கு வாய்த்த வித விதமான பெண் பாத்திரங்களில் அந்தந்தச் சூழலுக்கான உணர்ச்சிகளை அத்தனை நேர்த்தியாக நடிப்பில் கொண்டு வந்தவர் மறைந்து விட்டார்.

ராஜமுந்திரி நகரத்தில் பிறந்த ஜானகி, துணிவு மிக்க பெண்ணாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு அகில இந்திய வானொலியில் ஏ பிரிவு கலைஞராக இயங்கி இருக்கிறார்.  புகழ் பெற்ற திரை தயாரிப்பாளர் – இயக்குநர் பி என் ரெட்டி அவராக அறிந்து வாய்ப்பு கொடுக்க அழைத்தபோது கட்டுப்பட்டியாக இருந்த தெலுங்கு பிராமணக் குடும்பம் அவரைத் திரை உலகுக்கு அனுப்ப மறுத்துவிட்டது.  அது மட்டுமல்ல வேக வேகமாக அவருக்குத் திருமணமும் நடத்தி முடித்தனர்.  காலச் சூழலில் கைக் குழந்தை, கணவர் உடன் வர, அவராக பி என் ரெட்டி அவர்கள் வீட்டுக் கதவைச் சென்று தட்டி இருக்கிறார் ஜானகி, இப்போது வாய்ப்பு தாருங்கள், நடிக்க வருகிறேன் என்று!  தனது படத்தில் வாய்ப்பு முடிந்துவிட்டிருந்தாலும், வேறு ஒரு தயாரிப்பாளரை அழைத்து பரிந்துரை செய்திருக்கிறார்.  முதல் படம், சவுக்காரு எனும் தெலுங்குப் படத்தில், என் டி ராமராவ் நாயகன், ஜானகி கதாநாயகி.  ஏற்கெனவே வி என் ஜானகி திரையுலகில் அறியப்பட்டு இருந்ததால், குழப்பம் வேண்டாம் என்று இவர் சவுகார் ஜானகி என்று அழைக்கப்படலானார். 

வறுமையின் துரத்தலில் திரைக்கு வந்தவர், மேடை நாடகங்களிலும் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார்.  சவாலான பாத்திரங்களில் திறமையாகத் தோன்றி நடித்துக் கொண்டாடப் பட்டிருக்கிறார்.  ‘புதிய பறவை’ படத்தில் இரட்டை வேடங்களில் அமைந்த வாய்ப்பு அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது.  எதிர்பாராத நேரத்தில் சிவாஜி கணேசனின் எதிரில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்று ஒயிலான தோற்றத்தில் பார்வையால் ஆயிரம் அதிர்ச்சிகளை அள்ளி வீசும் காட்சியில் பின்னி இருப்பார்.  புதிராக நகரும் படத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது.  அந்தப் பாத்திரத்திற்கு இவரை சிவாஜி தான் பரிந்துரைத்திருக்கிறார், அப்போது சுவாரசியமற்று  இருந்தவர்கள் படம் முடிந்து திரைக்கு வந்தபோது பெருவியப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

ஒரு பெரிய தொழிலதிபரின் மிடுக்கான மனைவியாக ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் வெவ்வேறு உணர்ச்சிக் கலவைகளில் காட்சிக்கு காட்சி வித்தியாசமாக அந்த உணர்வுகளை பிரதிபலித்து இருப்பார் ஜானகி.  வீட்டு வேலைக்காரனாக இருக்கும் இளைஞன் சிவகுமாரிடம் அளவற்ற பாசம் ஏன் காட்டுகிறார் கணவர் என்று அவர் ஆவேசம் கொண்டு சிவாஜி கணேசனோடு மோதும் காட்சி புகழ் பெற்ற பெரிய நடிகருக்கு சமமாக நடித்த பெருமையைத் தந்தது.  கடைசி காட்சியில் பிள்ளை பெறாத தாயாக சிவகுமாரை மகனாக ஏற்றுத் தழுதழுத்துப் போவார்.

‘காவியத் தலைவி’ அவரது சொந்தத் தயாரிப்பில் வெளியான வித்தியாசமான திரைக்கதை, இரட்டை வேடங்களில் தாயாகவும், மகளாகவும் அசத்தி இருப்பார் ஜானகி.  கவிஞர் கண்ணதாசனின் ‘ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு’ எனும் பாடல், மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் மேதைமை மிக்க இசையில் படத்தின் கதையை ஓரிடத்தில் குவிய வைத்து உணர்த்திவிடும்.  ‘பாபு’ திரைப்படத்தில் அவருக்கு வாய்த்த வேடம், அவரது நிஜ வாழ்க்கையைப் போலவே அமைந்து விட்டது என்று எழுதுகின்றனர்.  எந்த வசதிமிக்க குடும்பத்திற்கு கார் பழுதுபட்ட ஒரு மழை நேரத்தில் கை ரிக்ஷா ஓட்டியாக உதவி செய்வாரோ, கணவனைப் பறிகொடுத்து மகளோடு நடுத்தெருவில் குடிசை வாழ்க்கையில் மானம் காக்கப் போராட வேண்டிய தருணத்தில் அந்தத் தாய்க்கு உதவி செய்பவராகப் போய் சிவாஜி நிற்பார். அந்தக் கருணையை ஏற்றுக் கொள்ளவும் இயலாமல், குழந்தைக்காகத் தட்டி விடவும் முடியாமல் மன்றாடும் இடத்திலிருந்து படத்தின் இறுதிக் காட்சி வரை ஜானகியின் நடிப்பு அபாரமாக அமைந்திருக்கும்.  

நீதி திரைப்படம் முற்றிலும் எதிரெதிர் நிலைகளில் ஒன்றாகவே உள்ளும் புறமுமாக வாழ வேண்டிய கட்டங்களில் ஜானகியும் சிவாஜியும்.  பொறுப்பற்ற விபத்துக்கு காரணமாகிக் கணவனைக் கொன்ற லாரி ஓட்டுநரை எப்படி தனது பாதுகாவலனாக ஒரு விதவை ஏற்றுக் கொள்ள முடியும் ? நீதி மன்ற தீர்ப்பின் காரணமாக அது சாத்தியம் என்று அமைக்கப்பட்ட வித்தியாசமான திரைக்கதையிலும் மின்னினார் ஜானகி.  

அழுகை ராணி என்று தனக்கு முத்திரை குத்தப்பட்டதை அவரே  வெறுத்துப் பேசி இருக்கிறார்.  சொல்லப் போனால், பாமா விஜயம், எதிர் நீச்சல், தில்லு முல்லு போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரங்கள் கிடைத்தபோதெல்லாம் கலக்கி இருக்கிறார் ஜானகி. பாமா விஜயம் ஒரு நடிகையின் நுழைவால் அல்லோலகல்லோலப் படும் குடும்பம்,  தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று ஜம்பம் காட்டிக் கொள்ளும் மூன்று மருமகள்கள் மோதிக்கொள்ளும் குடும்பத்தில் சவுகார் ஜானகி தனித்துத் தெரிவார், பாலசந்தரின் பாராட்டுப் பெற்ற நடிகை அவர்.  எதிர் நீச்சலில் அவர் அடுத்தாத்து அம்புஜத்தைக் காட்டியே கணவர் ஸ்ரீகாந்த்திடம் வம்பு செய்து கொண்டிருக்கும் பாத்திரத்தில் வெளுத்துக் கட்டினார்.  அந்தப் பாடல் காட்சி இரண்டு அசடுகளில் யார் அதிக அப்பாவி என்பதற்கான போட்டியாக ஒளிரும். பாலச்சந்தர் படம் தான் அதுவும்.

‘தில்லுமுல்லு’  படத்தில் மீனாட்சி துரைசாமி பாத்திரம் இவருக்காகவே உருவாக்கியது போல் இருக்கும்.  தேங்காய் சீனிவாசனும் ஜானகியும் சந்தித்துக் கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் திரை அரங்குகளில் கரவொலி காதைப் பிளக்கும்.  ஒரு கட்டத்தில் இதற்கு மேல் உன்னிடம் மாட்டிக் கொண்டு முழிக்க முடியாது என்று தன்னைத் தாயாக நடிக்க அழைத்திருக்கும் ரஜினிகாந்திடம், என்னை கொன்னுட்டே என்னை கொன்னுட்டே என்னை விட்டுரு என்று அவர் கை கூப்பும் காட்சி பெரிதும் ரசிக்கப்படும் ஒன்று. அசாத்திய கற்பனையோடு புரட்டி எடுத்திருப்பார். 

ஒளிவிளக்கு திரைப்படம் தயாரிப்பில் இருக்கையில் மீனா குமாரி பாத்திரத்திற்கு யாரும் தேர்வு ஆகவில்லை என்று அறிந்தபோது இவராக எம்ஜிஆரை அழைத்து வாய்ப்பு கேட்டிருக்கிறார்.  வி என் ஜானகி தான் தொலைபேசியை எடுத்தாராம், பிறகு எம்ஜிஆர் பேசி இருக்கிறார், அதற்கென்ன மகிழ்ச்சி நீங்களே நடியுங்கள் என்று நடிக்க வைத்தாராம்.  ப்ரூக்ளின் மருத்துவமனை சிகிச்சை முடிந்து நாடு திரும்பி வந்தபின் இவர் போய்ப் பார்த்தபோது, எனக்காக மக்கள் பிரார்த்தனை செய்தபோது மூலை முடுக்கெல்லாம் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல் தான் ஒலித்திருக்கிறது என்று இவர் நடித்த காட்சியை நினைவூட்டினாராம் எம்ஜிஆர். சவுக்காரு படத்திற்குப் பிறகு தானாக வாய்ப்பு கேட்டு நடித்த மற்றொரு படம் ஒளிவிளக்கு என்று குறிப்பிட்டு இருக்கிறார் ஜானகி.

தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 400 படங்களுக்குமேல் நடித்திருப்பவர் என்று சொல்லப்படுகிறது.  வீட்டிலேயே ஆங்கிலம் தான் பேச்சுமொழியாம், அங்கிருந்து புறப்பட்டு வாழ்க்கைச் சூழலில் மாற்றங்கள், இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடித்தபின் கணவரைப் பிரிந்துவிட நேர்ந்து தனிமையிலேயே வாழ்க்கையைக் கழித்தவர். ஆனாலும், எப்போதும் தனக்கான முடிவுகளைத் தான் தீர்மானிப்பவராக, புலம்பல் தவிர்த்து வாழ்க்கையை எதிர்கொண்டவராக இருந்திருக்கிறார் என்பது அவரது நேர் காணல்களில் வெளிப்படுகிறது.  முரண்பட்ட கருத்துகளும் சிலது வெளிப்படுத்தி இருக்கிறார், வயது மட்டுமல்ல காரணம், கால காலமாகக் கடத்தப்பட்டு வரும் பண்டைய சிந்தனைகளுக்குள் இருந்து விடுபடுவது எளிதல்ல என்பதாகவும் பார்க்க முடியும். 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button