கட்டுரைகள்தமிழ்நாடு

பட்டிமன்றங்களின் தமிழறிஞர் சாலமன் பாப்பையா

பட்டிமன்றங்களின் தமிழறிஞர் சாலமன் பாப்பையா

 — தேமொழி

தமிழ் இலக்கியப் பணிக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது (2000) மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது (2021) பெற்ற பாராட்டுக்குரியவரும், பட்டிமன்ற மேடைகளின் தலைவரும்,  தமிழ்நாடு மட்டுமின்றி உலகத் தமிழர்களின் அன்புக்கு உரியவருமானவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா.   மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக, தமிழ்த்துறைத் தலைவராக மிகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.  தன்னுடைய இலக்கியத்திறமையால், எழுத்தாற்றலால் திறமை மிக்கவராக நூல்கள் பல இயற்றினாலும் பேச்சாளராகப் பொதுமக்களிடையே அவர் சென்று சேர உதவியது அவருடைய பட்டிமன்றங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்தான். உலக அளவில் தமிழ்க் குடும்பங்களின் ஜென்-சி தலைமுறையினரும் அறிந்த அன்பு தமிழ்த் தாத்தா சாலமன் பாப்பையா.

solomon.jpg

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சாத்தன்குடி கிராமத்தில் 1936 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் சுந்தரம்-பாக்கியம் இணையரின் ஒன்பதாவது மகனாக சாலமன் பாப்பையா பிறந்தார். பெற்றோர் இருவரும் பஞ்சாலை கூலித் தொழிலில் கிடைத்த சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்திச் சென்ற காலத்தில் கல்வியில் பெரும் ஆர்வம் கொண்டவராக வளர்ந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த அவருடைய கல்வி ஆர்வத்தை உணர்ந்த ஆசிரியர் ஒருவர் அமெரிக்கன் கல்லூரியில் சேர்த்துவிட்டார். கல்லூரிக் கட்டணம் செலுத்த இயலாத பொழுது உறவினர் ஒருவர் பணம் அளித்தது படிக்க உதவியுள்ளார்.   இளநிலை பொருளாதாரம் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சாலமன் பாப்பையா, செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைத்த அரசுப் பணியை உதறிவிட்டு  மதுரை தியாகராயர் கல்லூரியில் முதுகலைத்தமிழ் படிப்பைத் தொடர்ந்தார்.

தமிழ் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைக்கும் வரை மதுரையில் டுட்டோரியல் கல்லூரி ஒன்றிலும், வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பின்னாளில் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலேயே பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் அவர் உயர்ந்தார். அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்த காலங்களில் மேடைப் பேச்சுகளில் கவனம் செலுத்தலானர்.  

கற்றோர் குழுமும் இலக்கியப் பட்டிமன்றங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் குன்றக்குடி அடிகளார் ஆவார். குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகள் வானொலியில் ஒலிபரப்பானதுண்டு. சாலமன் பாப்பையா1962 ஆம் ஆண்டு அடிகளார் பொள்ளாச்சியில் ஏற்பாடு செய்த சிலப்பதிகார மாநாட்டில்,  ‘கோவலன் வீழ்ச்சிக்குக் காரணம் சூழலா.. காமமா?’ என்ற தலைப்பில் முன்னெடுத்த பட்டிமன்றத்தில் பங்கேற்றார். பின்னர் அடிகளாரால் பல பட்டிமன்ற வாய்ப்புகளைப் பெற்றார். கல்கத்தாவில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்றில் முதன் முதலாக  நடுவராகப் பங்கேற்றார்.  மரபுகளைக் காப்பவர் ஆண்களா பெண்களா?, ஏற்பாடு செய்யும் திருமணமா, காதல் திருமணமா எது சிறந்தது? என்பது போன்று குடும்பங்களை மையப்படுத்திய தலைப்புகளாக அவரது பட்டிமன்றத் தலைப்புகள் அமைந்தன.  இரு தரப்பினரும் ஏற்கும் வகையில் தன்னுடைய தீர்ப்புகளை நகைச்சுவை  கலந்து வழங்கி வந்தார்.

சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதி வரை, இலக்கிய ஆர்வலர்கள் கூடும் இலக்கியப் பட்டிமன்றங்களாக விளங்கிய நிகழ்ச்சிகள் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளாக மாற்றம் பெற்றன.  தனியார் தொலைக் காட்சி நிறுவனங்களின் வளர்ச்சியும் இந்நிகழ்ச்சிகளை வரவேற்றன.  அந்தக் கால மாற்றத்தில் பல்வேறு பின்புலம் கொண்ட பொதுமக்களையும் கவரும் சமூகம் சார்ந்த விவாதங்களாக,  பொழுதுபோக்கு நிகழ்வுகளாகத் திசை திரும்பிப் பயணித்தன பட்டி மன்றங்கள்.

இவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்று  திசை திரும்பிப் பயணித்த பட்டிமன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்துச் செல்லும் தமிழிலக்கிய வழிகாட்டியானார் சாலமன் பாப்பையா. அன்பு தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே…இனிய குழந்தைகளே காலை வணக்கம்…” என்று அழைத்து, தன்னுடைய உரைகள் மூலமும் தீர்ப்புகள் மூலமும் மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.  தமிழ் இலக்கியப் பணியில் தனியிடத்தையும் பெற்றார்.  பட்டிமன்றங்கள் மூலமாகப் பெரும்பாலான தமிழர்களின் இதயங்களில் இடம்பிடித்த சாலமன் பாப்பையா கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொலைக்காட்சியிலும், மற்றும் உலகம் முழுவதும் பலநாடுகளிலும் என 7,000 பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கும் மேல் நடத்தியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 2010 ஆம் ஆண்டு முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டம் தந்து இவரைச் சிறப்பித்துள்ளது. திருக்குறளுக்கு உரை, புறநானூறு, அகநானூறு ஆய்வு நூல்கள், பட்டுக்கோட்டை ஒரு பார்வை, உரைமலர்கள் ஆகிய நூல்கள் என இவர் எழுத்துப்பணி பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஜெயபாய் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மதுரையில் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை அன்று, தமது 90 ஆவது அகவையில் உடல்நலக் குறைவு காரணமாக சாலமன் பாப்பையா மறைந்தார்.

பண்டைய தமிழ்நாட்டில் ‘நாவலோ நாவல்’ என்று கூவி நாவல் கிளை ஒன்றை பொது மன்றில் நட்டு வைத்து விவாதங்கள் நடத்தப்பட்டன என்பது வரலாறு. அந்நாட்களில் சமயச் சச்சரவுகள்  விவாதங்களாக வடிவெடுத்தன. பல்வேறு சமய வாதங்கள் நடந்ததைத்  தமிழ் இலக்கியங்களில் காண முடியும்.  பின்னர் காலப்போக்கில் அது போன்ற விவாதங்களின் பொருண்மை இலக்கியங்களின் மீதும், இலக்கிய மாந்தர்கள் மீதும் என்று மாற்றமடைந்தது.   தொடர்ந்து  தற்காலத்தில் பட்டிமன்றங்கள் சமூக குடும்ப பொருண்மைகளில் என்ற நிலைக்கு மாற்றமடைந்துள்ளது. சமயச் சச்சரவு  வாதங்களை விடச் சமூகப் பொருண்மையிலான வாதங்கள் மக்களுக்கு நடப்பு  வாழ்வில் உதவக் கூடியவை. இது குறித்து, “இலக்கிய விசாரணை வடிவமான பட்டிமன்றங்களில் குடும்பக்கட்டமைப்பை மையமாக்கியது காலத்தின் கட்டாயம்” என சாலமன் பாப்பையா குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புநாள் நிகழ்ச்சிகளாக, பொழுது போக்குகளாகப் பட்டிமன்றங்கள் மாற்றமடையத் தொலைக்காட்சிகள் உதவின. அவற்றிற்கான தடத்தைத் தமிழுடன் கலந்து முன்னெடுத்து,  பட்டிமன்ற நடுவராக வழி நடத்திய சாலமன் பாப்பையா அவர்களின் பங்களிப்பு ஒரு திருப்புமுனையாகப் பட்டிமன்ற வரலாற்றில் அமைந்தது என்பது காலத்தின் தீர்ப்பு.

நன்றி: சக்தி, அக்டோபர் – 2026,
https://archive.org/details/sakthi-october-2026/page/n21/mode/2up

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button