வாசிப்பின் வண்ணக் கலவை ஒரு காலப் பயணத்தின் வரைபடம்

வாசிப்பின் வண்ணக் கலவை ஒரு காலப் பயணத்தின் வரைபடம்

எஸ் வி வேணுகோபாலன்
பலர் மறுபிறவி பற்றி நம்புகிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஆனால், அப்படி ஒன்று இருக்குமானால், நான் எங்கு பிறந்தாலும் எனது புத்தகங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, டிஜிட்டல் வடிவில் என்றாலும் கூட, தொடர்ச்சியாக புத்தகங்கள் எனக்கு கிடைத்துக் கொண்டே இருப்பதை உறுதி செய்தால் நன்றாக இருக்கும்…..
யார் சொல்லி இருக்கிறார்கள் இப்படி என்கிறீர்களா…… மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் என்று சொன்னால் சிலிர்க்கிறது அல்லவா…. ஆம், அவரது வாக்கியங்கள் தான் இவை! தனது பரந்த புத்தக வாசிப்பு குறித்த ஓர் எளிய சுருக்கமான மீள் பார்வையின் நிறைவுப் பகுதியை இப்படி எழுதி முடித்திருக்கிறார் காரத் !
பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும், தி இந்து ஆங்கில நாளேட்டில், பிரகாஷ் காரத் அவர்களுக்கு துப்பறியும் நாவல் வாசிப்பில் இருக்கும் ஆர்வம் பற்றிய அருமையான குறுங்கட்டுரை ஒன்று வந்திருந்தது. பெருவியப்பை ஏற்படுத்திய சுவாரசியமான விவாதம் அது. இப்போது வாசகர் முன் அவர் வைத்திருப்பது, இளமைக்காலத்தில் இருந்து தொடங்கி வேர்ப்பிடித்து இன்றும் தொடரும் புத்தக வாசிப்பின் தடங்களையும், அந்தக் கிறக்கத்தின் முகவரிகளையும் !
எனது சிறந்த மாணவர் என்று தன்னுடைய ஆசிரியரால் கொண்டாடப்படும் இன்பத்தை விஞ்சும் வேறொன்று வாய்க்குமா வாழ்க்கையில்…. சென்னை கிறித்துவக் கல்லூரி பேராசிரியர் சிடி குரியன் அப்படி கொண்டாடி மகிழ்ந்தார், பிரகாஷ் காரத் பற்றிப் பேசுகையில். பிரகாஷ் வழிப்பயணத்தின் விவரிப்பை வாசித்தால், பள்ளி பிராயத்தில் இருந்தே ஆசிரியர்களின் பாராட்டு சுவைத்து வளர்ந்து வந்திருக்கிறார் என்பது இனிக்கிறது.
தனது நினைவாற்றலின் பின்னணியைத் தனது எழுத்தில் குறிப்பிடுகையில், மார்க்சிய தத்துவ மேதை இ எம் எஸ் நம்பூதிரிபாடு அவர்கள், இறை நம்பிக்கையும், ஆன்மீக நெறியும் மிகுந்திருந்த குடும்பத்தில் பிறந்த தனக்கு இளவயதில் வீட்டைச் சுற்றிலும் இருந்த தெய்வ சன்னதிகள் அனைத்திலும் சென்று நின்று சுலோகங்களை சொல்லி முடித்தபின் தான் உணவு உண்ணவே அழைப்பு வரும் என்று குறிப்பிட்டிருப்பார். திரும்பத் திரும்பச் சொல்லி மனப்பாடம் ஆகிவிடும் இந்தத் தன்மையினால் தான் அரசியல் பணிகளில் முழுக்க ஈடுபடத்தொடங்கிய பிறகு நிகழ்வுகள், தேதிகள், பேச்சுகள் யாவற்றையும் நினைவில் நிறுத்திக் கொள்ளும் ஆற்றல் இயல்பாகப் படிந்துவிட்டது என்று அவர் சொல்லி இருப்பார். கிருஷ்ண பக்தை தன்னுடைய தாய் என்று சொல்லும் பிரகாஷ் காரத், 14 வயது வரை சுலோகங்கள் சொல்லி வளர்ந்ததைக் குறிப்பிடுகிறார். ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து எனும் இராமாயண மகாபாரதம் குறித்த முக்கிய புத்தகங்களை வாசித்தது, கிங் ஜேம்ஸ் பதிப்பின் மொழி அழகில் சொக்கி பைபிள் படித்து ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றது, ஆறாம் ஏழாம் வகுப்புகளில் சமய நூல் தொடர்பான போட்டிகளில் பரிசுகளைக் குவித்தது என்று வாசிப்பின் சுவையைப் பகிர்கிறார் பிரகாஷ் காரத்.
ஆங்கில இலக்கிய வரிசையில் தொடக்க காலத்திலேயே ஷேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கென்ஸ், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா என்று விழுங்கத் தொடங்கியிருந்த பிரகாஷ், பத்தாம் வகுப்பு படிக்கையில் புகழ் பெற்ற புத்தக நிறுவனமான ஹிக்கின்ஸ் பாதம் நேருவின் புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டும் போட்டி நடத்தியதில் பங்கேற்றபோது, நேருவின் பிரசித்தி பெற்ற ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ நூலை அங்கே பரிசாகப் பெற்று முழுக்க வாசித்திருக்கிறார். இன்றும் பொக்கிஷமாகத் தனது வீட்டு நூலகத்தில் வைத்துள்ளார். நேருவின் சுய சரிதையும் படித்தபோது, ஒரு நவீன ஜனநாயக மதச்சார்பற்ற பன்முகத் தன்மை கொண்ட இந்தியா எனும் நேருவின் பார்வையைத் தானும் ஏற்றுக் கொண்டு தன்னை ஒரு தன்னை நேருவியன் (நேருவின் கருத்தியல் பற்றாளர்) ஆக உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.
இந்தப் பின்புலத்தோடு கல்லூரியில் நுழைபவரைப் பிறகு கேட்க வேண்டுமா, புனைவுக் கதைகளின் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொண்டே வரலாறு, பொருளாதாரம், அரசியல் புத்தகங்களைத் தேடித் துளைத்தெடுக்கிறார். எர்னஸ்ட் ஹெமிங்வே, கிரஹாம் கிரீன், ஆல்பர்ட் காம்யு புத்தகங்கள் அவரை மிகவும் கவர்கின்றன. எதிர்காலம் பற்றிய ஆல்டஸ் ஹக்ஸ்லி எழுதிய புத்தகம் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நடக்க இருக்கும் அச்சமூட்டும் நிகழ்வுகளைப் பேசியது, இப்போது 21ம் நூற்றாண்டில் கூடப் பொருத்தமாக இருப்பதை உணர்த்துகிறது என்பதைப் பெருவியப்போடு நினைவு கூர்கிறார் காரத்.
அண்மையில் தமிழின் முக்கிய படைப்பாளி ஆர் சூடாமணியின் தொகுப்பு வெளியீட்டில் பேசிய பத்திரிகையாளர் என் ராம், அவரை ஆர் கே நாராயண் அவர்களோடு ஒப்பிட்டுக் கூறுகையில் தானும் தன்னுடைய முன்னாள் மனைவி சூசன் ராமும் சேர்ந்து ஆர் கே நாராயண் அவர்களைப் பற்றி எழுதியதை அங்கே குறிப்பிட்டு இருந்தார். எனக்கு ஏற்பட்ட வியப்பு, அந்த அருமையான புத்தகம், பிரகாஷ் காரத் வாசிப்பில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது என்பது! அது மட்டுமல்ல, ஒரு கல்லூரி மாணவராக இருக்கும்போதே தங்களது இதழுக்காக ஆர் கே நாராயண் அவர்களைத் தான் நேர் காணல் செய்த சுவாரசியமான விஷயத்தைக் கூறுகிறார். அசாத்திய விஷயம் அது.
நேருவியன் பிறகு எப்படி மார்க்சியவாதி ஆனார் எனில், அங்கே நிற்கிறார் இஎம்ஸ்! பின்னாளில் கேரளா நேற்று இன்று நாளை என்று விரிவாக்கம் செய்யப்பட்ட இஎம்ஸ் அவர்களது கேரளத்தில் தேசிய பிரச்சனை எனும் சிறு புத்தகம் தனக்குப் பெரிய திறப்பாக அமைந்தது, அதனை அடுத்து ஓர் ஆழமான தாக்கம் என்று சொல்ல வேண்டுமானால், டி டி கோசாம்பி அவர்கள் வரலாறு பயில்வதற்கான அறிமுகம் என்று எழுதிய நூல் என்கிறார் காரத். அவரது எல்லா படைப்புகளும் படித்திருக்கிறார், பின்னர் தனது ஆசிரியர் குரியன் பரிந்துரையில் ஏகபோக மூலதனம் எனும் நூல் மார்க்சிய நோக்கில் அரசியல் பொருளாதாரம் குறித்த முதல் ஆய்வு வாசிப்பாக அமைந்தது என்கிறார்.
மேற்கல்விக்கு ஸ்காட்லாந்தின் எடின்பரோ பல்கலைக் கழகம் சென்று சேரும் ஒருவர், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள வேண்டாம், கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்காக இந்தியா திரும்புவோம் என்று முடிவை எடுப்பாரா, தேடல் மிக்க மாணவரை இன்னும் உன்னதமான தேடலை நோக்கி உந்தித் தள்ளியது வாசிப்பு தான், மார்க்சிய செவ்வியல் நூல் வாசிப்பு, குறிப்பாக, லெனின் தேர்வு நூல்கள்! தத்துவத்தின் நிறம் சாம்பல் என்றாராம் கவி கதே, அதைக் குறிப்பிடும் லெனின், வாழ்க்கையின் நிறம் உயிர்த்துடிப்புள்ள மரத்தின் பசுமை என்று சொல்வதை மேற்கோள் காட்டுகிறார் காரத். ஆஹா… எத்தனை ருசியான மேற்கோள்கள்!
பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களைக் கொண்டாட்டமாகக் குறிப்பிடும் காரத், உலகின் தலைசிறந்த மார்க்சிய அறிஞர் எரிக் ஹோப்ஸ்வாம் புத்தகங்கள் அனைத்தையும் படித்ததோடு அவரை நிறைய முறை நேரில் சந்தித்து விவாதித்ததையும் ஆர்வத்தோடு பதிவிடுகிறார்.
மார்க்சிய அறிஞர்கள் அய்ஜஸ் அகமது, பிரபாத் பட்நாயக் மற்றும் இர்பான் ஹபீப் உள்ளிட்டு உற்சாகத்தோடு குறிப்பிடுகிறார். இந்துத்துவ வகுப்பு வாதத்தின் அபாயத்தை உணர ஒரு புறம் ஆர் எஸ் எஸ் இரண்டாம் தலைவர் எம் எஸ் கோல்வர்க்கர் எழுதிய நாங்கள், எமது தேசியம் இவற்றின் வரையறை எனும் நூலையும், ஆர் எஸ் எஸ் பற்றிய ஏ ஜி நூராணி நூலையும் படித்ததைக் குறிப்பிடுகிறார்.
இத்தனை தீவிர வாசிப்புக்கும் ஊடே புனைவு இலக்கியங்களின் மீதான காதலை ஒரு போதும் துறந்ததில்லை அவர். ஆங்கிலம் மட்டுமல்ல, இந்திய மொழிகள் பலவற்றில் வந்திருக்கும் முக்கிய புனைவு எழுத்துகளை ஆங்கிலத்தில் வாசித்து மகிழ்ந்திருக்கிறார். மலையாள மொழியின் முக்கிய படைப்பாளி எம்டி வாசுதேவன் நாயரின் இரண்டாம் நாவல், சிறந்த வாசிப்பு அனுபவம், தமிழில் கு சின்னப்ப பாரதியின் தாகம், சர்க்கரை எல்லாம் வாசித்து இருக்கிறேன், சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள சு வெங்கடேசனின் வேள்பாரி நாவலை ஆங்கிலத்தில் படிக்க காத்திருக்கிறேன் என்கிறார்.
கவிதைகள் அத்தனை படித்ததில்லை என்று சொல்லும் அதே வேகத்தில் பிரபல ஆங்கில கவிஞர்கள் பெயர்கள், பாப்லோ நெருடா உள்ளிட்டோர் புத்தகங்களைப் பேசுகிறார். மாய கோவ்ஸ்கி, நெருடா, துருக்கி கவி நாசிம் ஹிக்மத் ஆகியோர் மனம் கவர்ந்தவர்கள். இந்தியாவின் கவி நிஸிம் எசகீல் பெயரும் உண்டு அந்த வரிசையில்.
துப்பறியும் கதைகளை தேடித்தேடி வாசித்த காரணத்தையும் சுவையாகக் கூறும் இடம் உள்ளபடியே நுட்பமானது. குற்றங்களை அலசும் இத்தகைய நாவல்கள், சமூகத்தின் அசமத்துவத்தைப் பேசுகின்றன என்கிறார் காரத். தனக்கு உவப்பான துப்பறியும் கதாசிரியர் ராங்கினையும் சந்தித்து இருக்கிறார்.
‘புத்தகங்கள் என் உற்ற துணையாய்…’எனும் இந்தக் குறும் புத்தகம் தமிழ் வாசகருக்கு அருமையாக வாய்த்திருப்பதன் பின்னணிக் கதையும் சுவாரசியமானது தான். உள்ளபடியே மலையாள மொழியியல் இதழான பாஷா போஷினி பத்திரிகைக்கு அவர் எழுதிக் கொடுத்த கட்டுரை இது, அதை அறியவந்த மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஏகே பத்மநாபன் இதைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்று எடுத்த முயற்சி தான் மூல பிரதியான ஆங்கிலக் கட்டுரை கிடைக்கப்பெற்று அது பாரதி புத்தகாலய வெளியீடாக எழுத்தாளர் ச.சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் அருமையாக வந்துள்ளது.
காரத் வாசித்த புத்தகங்களின் பட்டியல் அல்ல இந்த நூல், அப்படி எழுதினால் அது 32 பக்கங்களுக்குள் நிச்சயம் முடிந்திருக்கவும் முடியாது! அவரது வாசிப்பின் வண்ணங்கள் ஒரு காலப் பயணத்தின் சுவையான வரைபடமாக வந்திருப்பது தான் இந்தப் புத்தகம். நழுவ விடக் கூடாத இந்தச் சிறு நூல், வாசிப்பின் இன்பத்தை இலகுவாகக் கடத்த வல்லது.
2025 மாநாட்டில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு விடுபட்ட புத்தகங்களை எல்லாம் எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார். வயது ஏறிக்கொண்டே போக வேகவேகமாக வாசிக்கத் தோன்றுகிறது என்று வருத்தத்தோடு சொல்லும் பிரகாஷ் காரத், மறுபிறவியில் தனக்கு நம்பிக்கை இல்லை, ஒருவேளை அப்படி ஒன்று இருக்குமானால், தான் எங்கு பிறந்தாலும் தனது புத்தகங்கள் அனைத்தும் தன்னிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும், டிஜிட்டல் வடிவில் என்றாலும் சரி என்று நிறைவு செய்யும் இடம், புத்தக வாசிப்பில் உள்ள தீராத காதலை இலக்கிய மொழியில் சொல்கிறது!
(இன்றைய தீக்கதிரில் வெளியாகியுள்ள கட்டுரையின் முழு வடிவம் இது)

