சேதுகவி ஜவாதுப் புலவர் -2

சேதுகவி ஜவாதுப் புலவர் -2

தனது கூர்மையான புத்தியால் பிழையிழைத்தவன் அல்ல என நிரூபித்த சேதுகவி ஜவாதுப் புலவர் – பகுதி-2
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேசுவரம் என்னும் ஊரில் 1745 ஆம் ஆண்டு இசுலாமியக் குலத்தில் பிறந்தவர் ஜவாதுப் புலவர். இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள
சகோதரத்துவத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கும் சான்றாகத் திகழ்ந்த ஜவாதுப் புலவர் கிழவன் சேதுபதியிடம்
தொடர்பு கொண்டவராக இருந்துள்ளார். அவரைப் பற்றி “திருமலை சேதுபதி, தளவாய் இரகுநாத சேதுபதி என்ற குலப் பெயர்களுடன் அழைக்கப்பட்ட இராமநாதபுர அரசர் பல நேரங்களில் கிழவராக வேடம் பூண்டு பலரை மருட்டி விட்டதன் காரணமாக கிழவன் சேதுபதி என அழைக்கப்பட்டார்’’. எனக் குறிப்பிடுகிறார். (சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர், கனிந்துரை, ப.10)
கிழவன் சேதுபதி ஒருநாள் இரவு நேரத்தில் கிழவர் வேடம் தரித்து,
தெற்குப்பட்டணம் வடகோடிப் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் “ஒரு வீட்டில் தாய் தன் மகளை நோக்கி, அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு நபரைச் சுட்டிக் காட்டி, வரும் மனிதர் நல்லவர், பணக்காரர், உன்மீது மோகம் கொண்டு வேட்கையாக உள்ளார். எனவே அவரது விருப்பத்தை மறுக்காமல் நானும் சரியெனக் கூறி விட்டேன். உனக்காக அவர் வாங்கிக் கொடுத்த சேலையும், தைக்கப்பட்டுள்ள கச்சும் இந்த முடிச்சினுள் இருக்கின்றன. இப்பொழுதே இதை எடுத்து உடுத்திக் கொள். அவர் வரும்போது அவரை சந்தோஷப்படுத்திப் பிரியமாக வைத்துக்கொள்” எனக் கட்டளை பிறப்பித்தாள். இதைக் கேட்ட மகளுக்கு இடிவிழுந்தாற் போல ஆனது. திருமணமாகி தன் கணவன் பொருளீட்டுவதற்காக வெளியூர் சென்றுள்ளார். அவருக்கு எவ்வாறு துரோகம் இழைப்பது என யோசித்து தன் தாயிடம் முடியாது என்ற ஒற்றைச் சொல்லுடன் மன உறுதியுடன் செயல்பட்டாள். இதைக் கேட்ட தாய்க்குச் சினம் அதிகரித்தது.
இவ்வாறு தாய்க்கும் மகளுக்கும் பெரிய வாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கிழவன் சேதுபதி சத்தம் கேட்டு பூட்டியிருந்த வீட்டுக் கதவைத் தட்டுகிறார். கதவைத் திறந்த தாயைக் கண்டதும், நான் இராமேஸ்வரம் செல்லும் யாத்ரிகன். நீண்ட தொலைவிலிருந்து வருகிறேன். இன்று இரவு மட்டும் உங்கள் வீட்டுத் திண்ணையில் உறங்க அனுமதி தாருங்கள் என்று கூறினார். இதைக் கேட்ட தாய், இவரை இங்கே தங்க அனுமதித்தால் நமது திட்டம் நிறைவேறாது என்பதை நினைவில் கொண்டு, அருகில் யாத்ரிகர் தங்க சத்திரம் சாவடிகள் அதிகம் உள்ளன. அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள் இங்கே தங்க முடியாது என்று கடிந்து சொல்லிவிட்டாள். நிலையறிந்து அதை ஏற்றுக் கொள்வது போல நடித்து ‘செல்கிறேன்’ எனப் பதிலளித்தார். சிறிது நேரம் கழித்து திரும்பவும் வந்து வீட்டின் நிலைப்பாட்டை அறிய இருளில் மறைந்து கொண்டு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் விவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
தாய் மகளை வற்புறுத்தி முடிச்சைப் பெற்றுக் கொள்ள ஆணையிட்டாள். அதனை ஏற்காது வெறுப்புடன் தட்டிவிட்டாள். அது உடனே இருளில் மறைந்து நிற்கும் கிழவன் சேதுபதியின் காலில் விழுந்தது. அதைக் கண்ட கிழவன் சேதுபதி முடிச்சை எடுத்துக் கொண்டு விரைவாக நடக்க ஆரம்பித்தார். விரைந்து நடந்து செல்லும் போது வீட்டுத் திண்ணைகளில் உறங்கிக் கிடந்த சிலரின் கண்களில் தென்பட்டார். இருப்பினும் விரைவாக அரண்மனையை நோக்கி செல்லும் போது எதிரே ஜவாதுப் புலவரின் வீடு தென்பட்டது. அன்று வெள்ளிக் கிழமையென்பதால் சவாதுப் புலவர் தொழுகைக்குப் பள்ளிவாசல் சென்றிருந்ததால் வீடு பூட்டப்பட்டிருந்தது. உடனே மாற்றுச் சாவி கொண்டு வீட்டின் உள்ளே ஓரிடத்தில் முடிச்சை வைத்து, வீட்டைப் பூட்டி அரண்மனைக்குச் சென்றார்.
மகளால் வீசப்பட்ட முடிச்சைத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் விடிந்ததும் அந்தத் தாய் கூப்பாடிட்டு எனது பொருள் களவு போய்விட்டதே என்று சத்தமிட்டாள். சுற்றியுள்ள மக்களுக்கு செய்தி பரவியது. மக்களோடு அரச சேவகர்களும் கூடினர். நிலையறிந்து தேடத் தொடங்கி இறுதியாக ஜவாதுப் புலவர் வீட்டோடு நின்றது. அங்கே பரிசோதனை நடத்த வேண்டுமென முடிவெடுத்தனர். உடனே மன்னருக்குச் செய்தி தெரிவிக்கப்படுகிறது. புலவர் இப்போது தூங்கிக் கொண்டிருப்பார். யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கூறி அவரது வீட்டின்முன் காவல் காக்க உத்தரவு போடுகிறார். அவ்வாறே நடைபெறுகிறது.
நேரம் கடந்தது. புலவரும் கண்விழித்தார். வெளியே வந்ததும் அரசு அலுவலர்கள் நிலையினைக் கூறினார்கள். ஒன்றுமறியாப் புலவர் என் வீட்டைச் சோதனை செய்து கொள்ளுங்கள் எனக் கூறினார். உள்ளே நுழைந்து சோதனை செய்தனர். பின் துணிமுடிச்சு இருந்ததைக் கண்டறிந்து, அரசவையில் விசாரணை நடைபெற்றது. அரசர் புலவரை நோக்கி “ஜவாதுப் புலவரே நீங்களே ஒரு கலை முடிச்சு! இந்நிலையில் உங்களை இங்கு தொடர்பு கொண்டிருக்கிறதும் கலை முடிச்சாகவே காணப்படுகிறது. இவைகளைக் கவனிக்கிற போது உங்களை வேறுவகையில் வைத்துப் பேச வேண்டியதாக இருக்கிறது. ஏன் உங்கள் மனநிலை இவ்வாறு வேறு வகையில் சென்று விட்டதென்பதை உணர்கிற போது அது வெளியில் சொல்ல முடியாததாய் இருக்கிறதே” என்று வருந்தும் தன்மையில் குத்தல் குதிகொள்ளப் பேசினார்” (சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர், கனிந்துரை, ப.13)
மன்னர் சொல்வதைக் கேட்ட புலவர் எந்தத் தவறையும் செய்யாத நமக்கு இந்தச் சோதனையா? என எண்ணியபோது நினைவில் கொண்டு மனவெளியில் சிந்தனைப்புயல் சோதனை மின்னலாகப் பாய்ந்தது; இடி முழக்கமாய்ப் பாடல் ஒன்றைப் பாடுகிறார். அதனை “தொட்டான் அயல்போய வேளை மகளையோர் சோரனிடம்/ கட்டாயமாகக் கலவிசெய்யச் சொன்ன காரிகையால்/ கட்டாடை தன்னைக் களவாடி என்னில் கரந்ததுநும்/ பட்டாங் கதன்றோ ரகுநாத சேதுபதி மன்னனே” எனும் பாடல் வாயிலாக பாடினார். (சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர், கனிந்துரை, ப.13) பாடலைக் கேட்டதும் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஜவ்வாதுப் புலவரின் திறமை கண்டு வாழ்த்தினர். புலவர் மீது அழுக்காறு கொண்டிருந்த புலவர்களும் அது ஒழித்து அன்றிலிருந்து அவருக்கு அடங்கி நடக்கத் தொடங்கினர். ஒரு தவறும் அறியாத தம்மீது குற்றம் சுமத்த விளையும் போது, தனது கூர்மையான புத்தியால் பிழையிழைத்தவன் அன்று என நிரூபித்தார் ஜவாதுப் புலவர்.
பேராசிரியர் சே. முனியசாமி, மதுரை.