நட்பிற்கு இலக்கணமாகத் திகழும் பொசுக்குடிப் பிசிராந்தையார்

நட்பிற்கு இலக்கணமாகத் திகழும் பொசுக்குடிப் பிசிராந்தையார்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் ‘பிசிர்குடி’ என்னும் ஊர் உள்ளது. பிசிர்குடி எனும் ஊர் மருவி தற்போது பொசுக்குடி என வழங்கப்பட்டு வருகிறது. நட்புக்கு இலக்கணமாகத் திகழும் (கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார்) சங்க இலக்கியப் புலவர் பிசிராந்தையார் பிறந்த ஊரே பொசுக்குடி ஆகும். இவரது காலம் கி.மு.25 என ந.சி.கந்தையா குறிப்பிடுகின்றார்.
ஆதன் தந்தையென்பது ஆந்தை என மருவியது. இதன் வாயிலாக இவரோ அல்லது இவருடைய முன்னோர்களுள் ஒருவரே ஆதன் என்பவனுக்குத் தந்தையாக இருந்திருக்கலாம் எனவும் அறியலாம்.
பிசிர் என்பது கடலையால் வீசப்படும் நீர்த்திவலைகளைக் குறிக்கும். அப்படியெனில் இந்த ஊர் கடற்கரை ஓரமாக இருந்த ஊர் என விக்கிப்பீடியா குறிப்பிடுகிறது. அதே போல் ஊற்றுநீர் கிடைக்கும் பகுதியெனவும் குறிப்பிடப்படுகிறது. “பிசிர் என்ற சொல்லுக்கு நீர்த்துளி அல்லது ஊற்றுநீர் என்று பொருள் இருப்பதால் நல்ல ஊற்றுநீர் கிடைக்கும் ஊராய் இருந்தது” என ஆளவந்தார் குறிப்பிடுகிறார். (இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள்,ப.159)
பிசிராந்தையார் பிசிர்க்குடி (பொசுக்குடி) எனும் ஊரில் பிறந்தார் என்பதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. “பாண்டி நாட்டுப் பிசிர் என்னும் ஊரினர் என்பதும் பிறவும் புறநானூறு கற்றார் பலரும் அறிந்தனவே. அத்தகையப் பெரியோர் பிறந்து சிறந்த பிசிர் என்னும் ஊர் இச்சேதுநாட்டு அலங்காரனல்லூர் (அலங்கானூர்)க்கு அடுத்துள்ள பிசிர்குடி என்பதாகும்” என ரா.இராகவையங்கார் குறிப்பிடுகின்றார். (தமிழகக் குறுநில வேந்தர்கள், பக்.105,106)
“பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ளதென்பது, “தென்னன் பொருப்பன் நன்னாட் டுள்ளும் பிசிரோன் என்ப” என்று கோப்பெருஞ்சோழன் கூறுதலால் அறியப்படும். இப்பொழுது அவவூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்குடியென்று வழங்குகின்றதென்பர்” என ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். (தமிழகம் ஊரும் பேரும், ப.101)
கோப்பெஞ்சோழனும் பிசிராந்தையாரும்
பிசிராந்தையார் பாண்டி நாட்டைச் சார்ந்தவர். இருப்பினும் உறையூரை ஆட்சி செய்த கோப்பெருஞ்சோழனுக்குச் சிறந்த நண்பர். கோப்பெருஞ்சோழன் தம் மக்களோடு மனம் வேறுபட்டு வடக்கிருந்து உயிர் நீத்தபோது பிசிராந்தையாரும் வடக்கிருந்து உயிர் நீத்தார். நட்புக்கு இலக்கணமாக கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் என இருவரையும் இன்றளவும் குறிப்பிட்டு வருவதைக் காணமுடிகிறது. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரின் நட்பைப் போற்றும் முகமாக சங்க இலக்கியப் புலவர் கண்ணகனார் புறம் 218 ஆம் பாட்டில் பாராட்டிப் பாடியுள்ளார். பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை கூறியது புறம் 184 ஆம் பாடலில் காணப்படுகிறது.
சங்க இலக்கியப் பாடல்கள்
பிசிராந்தையார் அகம், புறம், நற்றிணை என மூன்று நூல்களில் மொத்தம் ஏழு பாடல்களைப் பிசிராந்தையார் பாடியுள்ளார். புறநானூற்றில் 67, 184, 191, 211, 212 ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். கோப்பெருஞ்சோழனைக் காணாது நட்புக் பூண்டிருப்பதைச் சேவலிடம் உரையாடும் விதமாக,அன்னச் சேவல்! அன்னச் சேவல்!/ ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்/நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்/ கோடுகூடு மதியம் முகில்நிலா விளங்கும்/மையல் மாலை யாம் கையறுபு கிணையக்” (புறம் :67) எனும் பாடல் அமைகிறது. கோப்பெருஞ்சோழனிடம் என்னைப் பற்றி எடுத்துரைப்பாயாக. அவ்வாறு எடுத்துக் கூறினால் உன் பேடைக்குத் தன்னுடைய அன்பின் சின்னமாக, நல்ல பல அணிகலன்களை அவன் உனக்கு வழங்குவான் எனச் சேவலிடம் பிசிராந்தையார் கூறுவதாக இப்பாடல் அமைகிறது. பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அரசியல் இவ்வாறு இருத்தல் வேண்டுமென்பதை,“காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே/ மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;/ நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உனினே/ வாய்புகு வதனினும் கால்பெரிது கொடுக்கும்;/ அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே”/- (புறம்: 184) எனும் பாடலில் யானைக்குக் கவளம் கவளமாக ஊட்டினால் அது பலநாட்களுக்கு வளரும். பல நாட்கள் பசியடங்கும். மாறாக அதன் போக்கிலே தினைகளில் விட்டால் அது உண்டதைவிட அது காலடிபட்டு அழிவதே அதிகமாகும். அதுபோல அறிவுடை வேந்தனாகிய நீ! அறநெறியறிந்து, குடிகளிடம் இறை கொண்டால், கோடிக்கணக்கான செல்வம் பெற்று அவனும் இன்பறுவதுடன், அவனது நாடும் செழிக்கும், மாறாக, குடிகளை வற்புறுத்தி அறமற்ற பெருந்தொகையான இறையைப் பெற விரும்பினால் அவனுக்கும் அவன் நாட்டிற்கும் கேடு என அறிவுரை கூறினார் என்பதை அறிய முடிகிறது.
தனக்கு வயதாகியும் நரையின்றி இளமையாக இருப்பதற்குரிய காரணங்களை, “யாண்டுபல வாக, நரையில ஆகுதல்/ யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின் (புறம்:191) எனும் பாடலில், தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்? என்று கேட்பீர்களானால் சொல்கிறேன். சிறப்பான என் மனைவியோடு என்னுடைய மக்களும் அறிவு நிரம்பிய பெற்றோர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் மன்னன் நல்ல ஆட்சி செய்து வருகிறவனென்றனர். நான் வாழும் ஊரில் சிறந்த குணங்களும், நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று பணிவோடு சிறந்த கொள்கையோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர் என்பதை இப்பாடலில் சுட்டுகிறார். பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனின் நல்லியல்புகளைச் சிறப்பாகப் பாடி, பொத்தியாரோடு நட்புக் கொண்டு விளங்கும் சோழனது மாண்பையும் விளக்குவதாக புறம்:212 சுட்டுகிறது.
இறுதியாக, பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனை நேரில் காணாது அவருடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் துறந்தார். இவ்விருவரின் நட்பு, இன்றளவும் உலகிற்குச் சிறந்த நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எப்பேர்ப்பட்ட சங்க இலக்கியப் புலவர் முதுகுளத்தூர் தாலுகா பொசு குடியைச் சார்ந்தவர் என்பது பெருமைக்குரியதாகும்.

பேராசிரியர் சே.முனியசாமி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.



