சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, அஞ்சுகோட்டை பகுதியில் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு புதிதாக மின்மாற்றி (Transformer) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வருட காலமாக அந்த மின்மாற்றி அமைக்கப்படாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய உதவிப் பொறியாளர் (AE) மற்றும் உதவிச் செயற்பொறியாளர் (ADE) ஆகியோரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதற்கு அதிகாரிகள், “இது என்ன மரமா உடனே நடுவதற்கு? உடனே அமைத்துத் தர முடியாது” என அலட்சியமாகப் பதில் கூறியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அஞ்சுகோட்டை – மங்கலக்குடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாடானை காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்வாரிய அதிகாரிகளை நேரில் வரவழைத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.





