வாரச்சந்தை பகுதியில் தவறுதலாக இழந்துபோன தங்க நகை மற்றும் பணத்தை காவல்துறையினர் விரைவாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் : பொதுமக்கள் பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாரச்சந்தை பகுதியில் தவறுதலாக இழந்துபோன தங்க நகை மற்றும் பணத்தை காவல்துறையினர் விரைவாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள மருதகம் கிராமத்தைச் சேர்ந்த தனவல்லி (கணவர்: பெரியசாமி) என்பவர் முதுகுளத்தூர் வாரச்சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மணி பர்ஸ் எதிர்பாராத விதமாக காணாமல் போனது. பர்ஸில் சுமார் முக்கால் பவுன் தங்க நகை மற்றும் ரூ.4,000 ரொக்கப் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தனவல்லி, முதுகுளத்தூர் காவல்துறையினரிடம் தனது மணி பர்ஸை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, முதுகுளத்தூர் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் திரு. சண்முகம் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.
இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் சிறப்பு பிரிவு தலைமை காவலர் சேக் ஆகியோர் வாரச்சந்தை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். பல மணி நேர தேடுதல் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காணாமல் போன மணி பர்ஸை கண்டுபிடித்தனர்.
மேலும், பர்ஸில் இருந்த முக்கால் பவுன் தங்க நகை மற்றும் ரூ.4,000 ரொக்கப் பணமும் முழுமையாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் முதுகுளத்தூர் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் திரு. சண்முகம் அவர்களால் புகார்தாரர் தனவல்லியிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டன.
தவறவிட்ட மதிப்புமிக்க பொருட்களை விரைந்து கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.




