திருவாடானை அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்: கூடுதல் ஆட்சியர் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் வாபஸ்!

திருவாடானை அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல்: கூடுதல் ஆட்சியர் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் வாபஸ்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் ஆட்சியரின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம்,
திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை, மேலவயல், மனதிடல், மற்றும் சீவலாத்தி ஆகிய கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த பல மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்வதில் அதிகாரிகள் கடும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இப்பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த காவிரி கூட்டுக்குடிநீர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வேறு வழியின்றி மழைக்காலங்களில் ஊரணிகளில் தேங்கும் தண்ணீரையே குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அவர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று அஞ்சுகோட்டை – மங்கலக்குடி – பாண்டுகுடி செல்லும் சாலைகளை மறித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் ஆட்சியர் திவ்யான் ஜு நிகாம் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் நேரில் அவர்களுடன் சாலையிலேயே அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உரிய மற்றும் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
மேலும், தங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அடுத்தகட்டமாகத் தொடர் போராட்டங்களை கையிலெடுக்கப் போவதாகவும் கிராம மக்கள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் இன்று இப்பகுதியில் உங்களை தேடி , உங்கள் ஊரில் முகாமில் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த சாலை மறியலால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது





