பரமக்குடியில், பெண் போலீசாரிடம் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பரமக்குடியில், பெண் போலீசாரிடம் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெளிசாத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்மிஷ்ரா (26
இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞராக உள்ளார். நேற்று இரவு பரமக்குடி பேருந்து நிலையத்தில் உள்ள புறக் காவல் நிலையத்தில் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை பெண் போலீஸார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு முற்றிலும் மதுபோதையில் வந்த வழக்கறிஞர் வினோத்மிஷ்ரா, திடீரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீசாரின் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்துள்ளார். மேலும், “என்னை எனது வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுங்கள்” எனக் கூறி அங்கிருந்த பெண் போலீசாரிடம் வம்பு இழுத்துள்ளார்.
அவரை வாகனத்தில் இருந்து இறங்குமாறு பெண் போலீஸார் எச்சரித்துள்ளனர். ஆனால், போதை தலைக்கேறியிருந்த வினோத்மிஷ்ரா, “உங்களுக்குப் பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தருவதுதானே வேலை? பெண்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு கொடுப்பீர்களா? ஆண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க மாட்டீர்களா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, பெண் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையைத் தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் (SI) சண்முகப்பிரியா இது குறித்துப் பரமக்குடி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், பெண் போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தவெக வழக்கறிஞர் வினோத்மிஷ்ரா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத்மிஷ்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை வரும் ஜூலை 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




