பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்
பேருந்து நிலையத்தை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பின்புறம் ரூ.32 லட்சம் செலவில் 2008ம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் அரசுப் பேருந்துகள் வராமல் புறக்கணிக்கின்றன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் ஏர்வாடி தர்கா பின்புறம் உள்ள பேருந்து நிலையத்திற்குள் வராமல், ஒரு கி.மீ முன்பாக உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் பேருந்து நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகியுள்ளன.
ஏர்வாடியைச் சேர்ந்த தன்னார்வலர் முருகசக்தி கூறியதாவது: நாள்தோறும் ஏர்வாடி தர்காவிற்கு ஏராளமான அரசுப் பேருந்துகள் வருகின்றன. ஆனால் அவை பேருந்து நிலையத்திற்குள் வராமல் ஒரு கி.மீ முன்புள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஏர்வாடி பேருந்து நிலையம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. கழிப்பறை வசதிகள் இல்லை. குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.
எனவே ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் பேருந்துகள் நிலையத்திற்குள் வந்து செல்ல உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றார்.




