கீழக்கரையில் ‘மின்வாரியத்தகவல் தளம்’ வாட்ஸ்அப் குழு: பொதுமக்கள் பாராட்டு

கீழக்கரையில் ‘மின்வாரியத்தகவல் தளம்’ வாட்ஸ்அப் குழு: பொதுமக்கள் பாராட்டு
ராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற நியமன கவுன்சிலர் சபீர் அலி, ‘மின்வாரியத் தகவல்கள்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு உருவாக்கி மின்சாரம் தொடர்பான பொதுமக்கள் புகார்களை உடனுக்குடன் தீர்த்து வைத்து சிறப்பாக சேவையாற்றி வருகிறார்.
கீழக்கரை நகரில் மின்தடை, மின்கம்பம் பழுது, தெருவிளக்கு எரியாமை, மின்கசிவு, குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்சினைகளை பொதுமக்கள் ‘மின்வாரிய தளம்’ வாட்ஸ்அப் குழுவில் புகைப்படத்துடன் பதிவிடுகின்றனர்.
புகார் பதிவான சில நிமிடங்களில் நியமன கவுன்சிலர் சபீர் அலி, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். இதனால் பெரும்பாலான புகார்கள் அன்றைய தினமே சரி செய்யப்படுகின்றன.இந்த வாட்ஸ்அப் குழுவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர்கள், லைன்மேன்கள், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
“முன்பெல்லாம் மின்வாரிய அலுவலகம் சென்று புகார் கொடுக்க வேண்டும். இப்போது வீட்டில் இருந்தபடியே போட்டோ எடுத்து அனுப்பினால் போதும். உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள்” என சமூக ஆர்வலர் தெரிவித்தார்.
திமுக நியமன கவுன்சிலர் சபீர் அலி கூறுகையில்:
மக்களுக்கும் அரசு துறைக்கும் இடையே பாலமாக இருக்கவே இந்த குழுவை தொடங்கினேன். 24 மணி நேரமும் குழு செயல்படும். தேவையில்லாத பதிவுகள் தவிர்க்கப்பட்டு, மின்சார பிரச்சினைகள் மட்டும் பதிவிட அறிவுறுத்தியுள்ளோம். மின்வாரிய ஊழியர்களின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமாகிறது” என்றார்.
மின்வாரிய அலுவலர்கள் பாராட்டு:
“பொதுமக்கள் புகார்களை உடனடியாக எங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதால், நாங்களும் விரைந்து செயல்பட முடிகிறது. சபீர் அலியின் இந்த முயற்சி மற்ற நகரங்களுக்கு முன்மாதிரி” என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாராட்டினார்.





