பெங்களூரில் ரஜினி பெயரில் ரத்ததான கழகம் திருமாறன் திறந்து வைத்தார்

பெங்களூரில் ரஜினி பெயரில் ரத்ததான கழகம் திருமாறன் திறந்து வைத்தார்

ரஜினி படித்த பெங்களூரு ஏபிஎஸ் மாலை கல்லூரியில் ரஜினியின் இயற்பெயரான சிவாஜி ராவ் கெய்க்வாட் ரத்ததான கழகம் துவக்கப்பட்டது. 5,000 மாணவ மாணவிகள் படிக்கும் ஏபிஎஸ் கல்லூரியில் உன்னத மனித உயிர்களைக் காக்கும் பொருட்டு, கல்லூரியின் பழைய மாணவரான ரஜினி பெயரில் ரத்ததானக் கழகம் துவக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரத்ததான கழக நிறுவனரும், சமூக நல ஆர்வலருமான வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் டாக்டர்.விஷ்ணு பரத் தலைமை தாங்கினார். மாலை கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுதர்சன் குமார் முன்னிலை வகித்தார். ரத்ததான முகாம் ஏற்பாடுகளை கன்னட பேராசிரியர் சதீஷ், ஆங்கிலத்துறை அனுபமா, பொருளாதார பேராசிரியர் பிரதிபா, வணிகவியல் துறை பேராசிரியர் சங்கர் செய்திருந்தனர்.
ஏராளமான மாணவிகள், மாணவர்கள், பழைய மாணவர்கள், 60 வயதை தொடப்போகும் முன்னாள் மாணவர்கள் ஆர்வமாக ரத்த தானம் செய்தனர்.
ரத்ததான கழகத்தை துவக்கி வைத்த திருமாறனுக்கு கல்லூரி சார்பில் பூரண மரியாதை, கேடயம், மாலை, நினைவுப் பரிசு அளிக்கப்பட்டது. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் உள்ள சூப்பர் ஸ்டார், பெங்களூரிலுள்ள ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணராவ் கல்லூரியில் துவக்கப்பட்ட குருதிக்கொடை கழகத்தின் சேவை பொதுமக்களை எட்டிட மானசீக வாழ்த்து தெரிவித்தனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், கன்னடர், தமிழர் என்ற பாகுபாடின்றி உயிர்களைக் காப்பாற்ற ரத்ததானம் ஒரு பேராயுதம் என திருமாறன் பேசினார். கர்நாடகாவில் மூலை முடுக்கெல்லாம், ஒவ்வொரு பகுதியிலும் தாங்கள் விரும்பும் பெயர்களில் ரத்ததானக் கழகங்கள் துவக்கப்பட திருமாறன் அழைப்பு விடுத்தார். தமது நெடிய ரத்ததான அனுபவங்கள், லண்டன், பிலிப்பைன்ஸ், ரத்ததான முகாம் அனுபவங்கள், இந்தியாவின் 34 மாநிலங்களில் ரத்ததானப் பிரச்சாரம் என ஏ பி எஸ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திருமாறன் ஆங்கிலத்தில் எழுச்சி உரையாற்றியதை அனைவரும் பாராட்டினர். தமிழகத்தைப் போல ரத்த தானத்திற்கு கட்டில், மெத்தை, விரிப்பு என்றில்லாமல் பெங்களூரில் ஒரு ஈஸி சேரில் சாய்ந்து அமர்ந்து அனைவரும் ரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறையை தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். சிவாஜி ராவ் கெய்க்வாட் பெயரில் ரஜினி படித்த கல்லூரியில் ரத்ததானக் கழகம் தொடங்க முயற்சிகள் எடுத்த கல்லூரி முதல்வர் சுதர்சன், ரஜினியின் உறவினர் கிருஷ்ணாஜிராவ் இருவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த முயற்சி ரத்ததான வரலாற்றில் ஒரு மையில் கல் என்று சொல்லலாம்.





