கீழக்கரையில் எது நமக்கான அரசியல் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துரையாற்றினார்

கீழக்கரையில் எது நமக்கான அரசியல் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துரையாற்றினார்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பில் ‘எது நமக்கான அரசியல்?’ என்ற தலைப்பில் இஸ்லாமியர்களின் அரசியல் கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்து கருத்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சேக் உசேன், முனைவர் இப்ராஹிம்,தமிழ்த்தேசிய இஸ்லாமியக் கூட்டமைப்பு “உலமாக்கள் அணி” நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளராகவும்
இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
இஸ்லாமிய மக்களின் கேள்வியும் நாம்
தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பதிலும்
1,வரும் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா இல்லையா ?
நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகிறது . அன்று சொன்னதுதான் எப்போதும்
காங்கிரஸ் தமிழ் இன எதிரி
பாஜக மனித குல எதிரி
திராவிட கட்சிகள் தமிழ் நிலத்தில் தீய அரசியலின் தோற்றுவாய் .
இவர்களுடன் எந்த காலத்திலும் கூட்டணிக் கிடையாது .
ஆயிரம் ஆயிரம் கோடிகள், மத்தியில் அமைச்சர்,மாநிலத்தில் முதல் அமைச்சர் என்றும் சின்னத்தை எடுத்துக் கொண்டும் வியாபாரம் பேசினார்கள் . அன்றும் தனித்துதான் போட்டியிட்டேன்.
நான் மக்களை நம்புகிறேன் , மக்களோடு நிற்கிறேன் . எந்த காலத்திலும் மேற்சொன்ன கட்சிகளுடன் கூட்டணிக் கிடையாது .
வீரத் தமிழர் முன்னணியை இந்துத்துவ அரசியல் கோட்பாட்டை மட்டுப்படுத்த முட்டுக்கு எதிர் முட்டு என்கிற அடிப்படையில் . அதில் என்னுடைய இஸ்லாமிய தம்பிகள் தாங்களாகவே விரும்பி இணைந்து கொண்டனர் . நான் சேர்க்கவில்லை .
இஸ்லாமியச் சொந்தங்களின் உரிமைக்காக நான் நிற்பது போல் எங்களுடைய வழிபாட்டு உரிமைக்காக அவர்கள் கூட நிற்கிறார்கள் .
2,பர்தா அணிந்து செல்வதற்கு சில பள்ளி கல்லூரிகளில் தடை இருக்கிறது. நாம் தமிழர் ஆட்சியில் எப்படி இருக்கும் ?
பர்தா பிரச்சனை வந்த போது பிராமணர்கள் பூணூல் கலட்டி விட்டும் சீக்கியர்கள் தாடி மற்றும் தலைப்பாகையும் கலட்டிவிட்டு வருவார்களா என்று கேட்டேன் நான் .
நாம் தமிழர் ஆட்சியில் பெண்கள் சுதந்திரமாக அவர் விரும்பிய உடை, பர்தா அணியலாம் . யாரும் கேட்க மாட்டார்கள் என்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
3,இஸ்லாமியர்களை கவனமாக கையாள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தில் இருப்பதாக சொல்லி இஸ்லாமிய மக்களை உங்களிடம் இருந்து பிரித்து வைக்கிறார்களே ?
நாங்கள் வெளியிட்ட ஆட்சி வரைவில் அப்படி ஒரு தகவல் இல்லை . இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாக உணர்வதில்லை வேறு இனமாகவேக் கருதிக் கொள்கிறார்கள் என்று ஆட்சி வரை பாட்டை எழுதிக் கொடுத்ததில் ஒருவர் கொண்டு வந்தார் . அதைப் படித்து விட்டு இது தவறு என்று அப்பொழுதே நீக்கி விட்டேன். அப்படி ஒரு ஆவணம் நாங்கள் வெளியிடவில்லை. இது நமக்கான இடைவெளியை அதிகரிக்க பரப்பப்படுகிறது.
4,இஸ்லாமிய சிறைக் கைதிகள் விடுதலையில் திமுக ஏமாற்றி விட்டது . போராடிக் கொண்டிருந்த நீங்களும் நிறுத்தி விட்டீர்கள், ஏன் ?
தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்தோம். இறுதியாக மேலப்பாளையம் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டார்கள். பல்வேறு இஸ்லாமிய தலைவர்களும் சீமான் நடத்தும் போராட்டத்திற்கு செல்லாதீர்கள் என்று தடுத்தனர் . அதற்கு அவர்கள் சொன்ன காரணம் திமுக அரசு அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யும் என்றும் நீங்கள் சென்றால் விடுதலையில் சிக்கல் வரும் என்றார்கள்.
போராட்டத்தை நிறுத்தியும் இதுவரை விடவில்லை . அதனால் தற்போது அது குறித்து ஆவணப்படம் ஒன்று தயார் செய்துள்ளோம் . விரைவில் சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம். என்று கூறினார்.




