அன்னையர் தின வாழ்த்துக்கள்
அன்னையர் தின வாழ்த்துக்கள்
உன்னைக் கருவில் சுமந்து
இன்னுயிர் கொடுத்து வளர்த்து
தன்னுயிர் பணயம் வைத்து
உன்னை ஈன்றெடுத்த
அன்னையை தினம் வணங்கு.
அருமை மகவாய் விளங்கு .
விண்ணினும் உயர்ந்த பாசம்
மண்ணினும் பரந்த உள்ளம்
கடலினும் ஆழ்ந்த அன்பு
காற்றினும் விரைந்த அக்கறை
மலையினும் உயர்ந்த கருணை
அனைத்தையும் நிறைத்து செய்த
அற்புதப் படைப்பே அன்னை.
உதிரப்பால் கொடுத்து
உறுபசி தீர்த்திடுவாள் .
உன் விருப்பங்களை
உடனே நிறைவேற்றிடுவாள் .
உன் ஒவ்வொரு அசைவினிலும்
உற்சாகம் காட்டிடுவாள்.
உறவுகளைப் புரிய வைத்து
உள்ளமதில் நிறுத்திடுவாள் .
ஒழுக்கமதைக் கற்பித்து
உத்தமனாய் வளர்த்திடுவாள்.
உன் திறமைகளை வளர்க்க
உற்சாகமூட்டிடடுவாள் .
உலகத்தில் முதன்மை பெற
உறுதுணையாய் இருந்திடுவாள்.
உன்னைப் பெற்ற அன்னையை
உள்ளத்தில் நிலை நிறுத்தி
உயர்ந்த இடம் கொடுத்து
உரியபடி மதித்து ஒரு
உத்தமப் பிள்ளையாய் இருத்தலே
உன் நன்றிக் கடனன்றோ .
அன்னையர் தினத்திற்கென்று
உன்னிடம் இருந்து அவள்
பரிசுகள் கேட்பதில்லை.
பாசமே கேட்டிடுவாள்.
முதியோர் இல்லம் சேர்த்து
முடக்கிடாது அவளை என்றும் ,
மதித்து உடன் வைத்துக் காத்தலே – பெற்ற
மக்களின் கடமையன்றோ .
தாய்மார்கள் தினமாம் இன்று
தாரணி முழுவதும் உள்ள
தாய்க்குலங்களைப் போற்றி
தாள்பணிந்து வணங்கிடுவோம் .
அன்பு மகன் ,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
11.05.2025