இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் கந்துவட்டி கொடுமை!

முதுகுளத்தூரில் கந்துவட்டி கொடுமை!

6 லட்சத்துக்கு 11 லட்சம் வட்டி கட்டியும் மிரட்டல் – நிலத்தை எழுதி வாங்கியதாக பெண் கண்ணீர் – ஆட்சியரிடம் மனு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் இடையர்குடி பகுதியை சேர்ந்த முகமது குலாம் நசீர் என்பவரின் மனைவி ஆயிஷா கனி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இரண்டு பிள்ளைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவிற்காக அதே பகுதியை சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகி இந்திரா என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார் ஆயிஷா கனி.

இதற்கு தொடர்ந்து வட்டி செலுத்தி வந்த நிலையில், இதுவரை 11 லட்சம் ரூபாய் வரை வட்டி மட்டுமே கட்டியுள்ளார்.

வட்டி கட்ட முடியாத நிலையில், வட்டிக்கு வட்டி போட்டு 14 லட்சம் என கணக்கு காட்டி, ஆயிஷா கனிக்கு சொந்தமான இடத்தையும் மிரட்டி பத்திரப்பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் நாள்தோறும் 10,000 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் எனவும், தரவில்லை என்றால் அசிங்கப்படுத்துவேன், பிள்ளைகளை கடத்துவேன் எனவும் இந்திரா, ரஞ்சிதா, ரியவியா ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மிரட்டலால் மனமுடைந்த ஆயிஷா கனி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆட்சியரிடம் கண்ணீர் மனு
இதனை தொடர்ந்து தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஆயிஷா கனி, தங்கள் குடும்பத்தை கந்துவட்டி கும்பலிடமிருந்து காப்பாற்ற கோரியும், தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரியும் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

“தாலி செயினை அடகு வைத்து கூட வட்டி கட்டினேன். என் கணவர் வெளிநாட்டில் இருந்து வாங்கி போட்ட சொத்தை பிடுங்கி விட்டார்கள். எனக்கு நீதி வேண்டும்” என ஆயிஷா கனி கதறி அழுதார்.

இந்த சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button