தமிழ்நாடு

காட்சியழகும் சொற்செறிவுமே ஹைக்கூவின் சிறப்பு

காட்சியழகும் சொற்செறிவுமே ஹைக்கூவின் சிறப்பு

    ‘ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் கவிஞர்கள் பகிர்வு

    சென்னை. டிசம்பர்.21. ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் மாதாந்திர
இலக்கிய நிகழ்வு, கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன்
தரைத்தள அரங்கில் நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்வுக்கு கவிஞர் உ.முத்துக்குமாரசாமி தலைமையேற்றார். 
கவிஞர் கோசின்ரா அறிமுகம் செய்து உரையாற்றினார்.
    ‘ஹைக்கூவும் நானும்…’ எனும் தலைப்பில் கவிஞர் கா.பாபுசசிதரன்
உரையாற்றுகையில், “ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ இன்று
உலகின் திசையெங்கும் பரவியிருக்கிறது. 2015-ஆம் ஆண்டில் எனது
அலுவலகப் பணி நிமித்தமாக நான் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது,
ஜப்பானியர்கள் ஹைக்கூ எனும் கவிதை வடிவம் மீது எவ்வளவு ஆர்வத்தோடும்
ஈடுபாட்டோடும் இருக்கிறார்கள் என்பதைக் கண்டு வியந்து போனேன்.
1984-இல் கவிஞர் அறிவுமதி எழுதிய ‘புல்லின் நுனியில் பனித்துளி’ எனும் ஹைக்கூ
கவிதை நூலைப் படித்த பின்னரே எனக்கும் ஹைக்கூ எழுதும் ஆர்வம்
பிறந்தது. இன்றைக்கு தமிழில் ஹைக்கூ புரிந்தும், புரியாமலும் பலரும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். காட்சியழகோடும் மொழிச் செறிவோடும் 
எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளே சிறப்பான கவிதைகளாகப் 
பேசப்படும். காலங்கடந்தும் பேசப்படும். ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய
புரிதலுக்கும் தெளிவுக்கும் இப்படியான சந்திப்புகளும் பகிர்வுகளுமே
உதவி புரியும்” என்று குறிப்பிட்டார்.
    முன்னதாக, தமிழ்க் கவிதையின் முன்னோடியும் 1985-ஆம் ஆண்டிலேயே
‘சூரியப் பிறைகள்” எனும் ஹைக்கூ நூலினைப் படைத்த மறைந்த கவிஞர்
ஈரோடு தமிழன்பனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற
கவிஞர்கள் பலரும் ஹைக்கூ கவிதைகளை வாசித்தனர். சிறந்த ஹைக்கூ
கவிதைக்குப் புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்வை கவிஞர் மு.முருகேஷ் ஒருங்கிணைக்க, கவிஞர் ஆழ்வார்குறிச்சி
ப.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.
    நிகழ்வில், கவிஞர்கள் சக்திமான் அசோகன், ஞால.ரவிச்சந்திரன், புதுகை ஆதிரா,
அன்புத்தோழி ஜெயஸ்ரீ, பாளை கோ.மாணிக்கம், அனுராதா செளரிராஜன், நயினார்,
பா.மகாலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

படக்குறிப்பு: சென்னையில் நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் சிறப்பு
அழைப்பாளர்களாகப் பங்கேற்ற கவிஞர்கள் கா.பாபுசசிதரன், உ.முத்துக்குமாரசாமி
ஆகியோருக்குப் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன. அருகில், கவிஞர்கள் ஆழ்வார்குறிச்சி 
ப.சொக்கலிங்கம், கோசின்ரா, மு.முருகேஷ்,அகவலன் ஆகியோர் உள்ளனர்.

இணைப்பு: நிகழ்வு படம் – 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button