மலேசிய வாழ் பரமக்குடி கவிஞருக்கு வரவேற்பு

மலேசிய வாழ் பரமக்குடி கவிஞருக்கு வரவேற்பு

பரமக்குடி :
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாவலர் கோவதன் அவர்கள் தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார். இவரது இயற்பெயர் தனசேகரன். சித்த மருத்துவராகவும் பணியாற்றி வரும் இவர்
எலக்ட்ரோ ஹோமியோபதி மற்றும் அக்குபஞ்சர் மருத்துவத்துறை ஆய்வில் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். 1972 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய இவர் பல்வேறு கதைகள்,கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இதுவரை அருள்மிகு முத்தால பரமேஸ்வரி அம்பாள் இருபா இருபது, அந்தாதியும் பிள்ளைத்தமிழும், புனல், சக்திவேல் பாமாலை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 10 நூல்கள் அச்சிடும் நிலையில் உள்ளன. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் மரபுக் கவிதைகளை இன்று வரையிலும் எழுதி வருகின்றார்.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் அதன் அமீரக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத், இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் கவிஞர் பரம்பை இதயா, கவிஞர் தமீம், ஆசிரியர் தண்டாயுதபாணி ஆகியோர் பாவலர் கோவதனுக்கு வரவேற்பு அளித்தனர்.
அதனையடுத்து கவிஞர் இதயா தான் எழுதிய அகர மலர்கள் என்ற நூலையும், கவிஞர் தமீம் தான் எழுதிய முதல் தடம் என்ற நூலையும்,
முதுவை ஹிதாயத் ஈரோடு எம்.கே.ஜமால் முஹம்மது எழுதிய தியாகச்சுடர் திப்பு சுல்தான் உள்ளிட்ட நூல்களையும் வழங்கி கவுரவித்தனர்.
மேலும் டாக்டர் பாவலர் கோவதன் தான் எழுதிய புனல் கவிதை நூலை அனைவருக்கும் வழங்கினார்.
இரண்டு வாரங்கள் பரமக்குடியில் இருக்கும் நாட்களில் இலக்கிய ஆர்வலர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.
வருகின்ற 27.12.2025 அன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் கவிதை வாசிக்க உள்ளார்.




