தமிழ்நாடு

இந்திர பிரஸ்தம்

இந்திர பிரஸ்தம்

எதற்கும் உபயோகப்படாத நிலம், விளைச்சலுக்கு துளியும் பயன்படாத மண், “அய்யோ பாவம்”, “போனால் போகிறது” என கொடுக்கப்பட்ட இடத்தில் தான் இந்திரப் பிரஸ்தம் உருவானதாக கதை. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஆயிரம் ரஜினி படங்களை உள்ளடக்கியதே மகாபாரதம். இது நடந்ததா, இல்லையேல் கற்பனையா என்பதற்குள் எவரும் சென்று ஆராயத் தேவையில்லை. வியக்கத்தக்க அம்சங்கள் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு ஏகாந்தம்.

 குண்டூசி அளவு இடம் கூட பாண்டவர்களுக்கு கொடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்த துரியோதனன் பீஷ்மரின் வற்புறுத்துதலாலும் தனது தந்தையின் வார்த்தையாலும் ஒரு வறண்ட இடத்தை கொடுத்தான். அதைத்தான் பாண்டவர்கள் சொர்க்க பூமியாக, பசுமைச் சோலையாக, வனப்பு மிகுந்த பகுதியாக, இந்திரலோகமே மூக்கில் விரல் வைத்து அதிசயிக்கும் அளவிற்கு மாற்றினார்கள். அதுதான் இந்திரப் பிரஸ்தம். மருண்டு போக வைக்கும் மாயஜாலங்களும், மலைத்து நிற்க வைக்கும் அதிசயங்களும் அரண்மனையில் நிரம்பிக் கிடந்தன. சாதாரண கட்டாந் தரையை பஞ்சபாண்டவர்கள் தங்களது ஆற்றலால் உழைப்பால் அற்புத அரண்மனையாக உயர்த்தி இயற்கையை இழையோடச் செய்தனர். தலைநகர் டில்லியின் ஒரு பகுதி தான் “இந்திரப்ரஸ்தம்” என்று சொல்லப்படுகிறது யமுனை நதிக்கரையில் அர்ஜுன கை வண்ணத்தில், முட்டாள்களின் பரிகாசங்களுக்கு நடுவே, வேண்டா வெறுப்பாக வழங்கப்பட்ட நிலத்தை செழுமையாக்கி இந்திரன் நிர்மாணித்தது போன்ற ஒரு அதிசய அரண்மனையை பாண்டவர்கள் ஒற்றுமையாக செய்ததால் தான் அது சாத்தியமாயிற்று. நம்பிக்கையோடு செயல்பட்டதால்தான் அவ்விஷயம் நடந்தேறியது. இந்திரப்ரஸ்தத்திற்கு இணையானது தான் தற்போது தமிழகத்தில் நடந்து வரும் விதைப்பந்து தயாரிப்பு. இங்கும் பஞ்சபாண்டவர்கள் இருக்கிறார்கள். விதைப்பந்துகளை தயாரித்து தக்க இடங்களில் வீசி, விருட்சங்களை வளர்த்தெடுக்கும் பசுமை சேவையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரை முழுமையாக ஈடுபடுத்தியது தான் இந்தத் திட்டத்தின் மகத்தான வெற்றி. முதற்கட்டமாக “ஒரு கோடி விதைப்பந்துகள்” தயாரிப்பில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு விதைப்பந்திற்குள் ஆறு முதல் ஏழு விதைகள் கூட வைக்கப்படுகிறது.

 பஞ்ச பூதங்கள் போல, பஞ்ச பாண்டவர்கள் போல பள்ளித் தலைமை, மாணவ மாணவியர், ஆசிரிய பெருமக்கள், சமூக நலம் பேணுபவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஐந்து சக்திகள் இதனை ஒருங்கிணைக்கின்றன. இது அடுத்த தலைமுறை காக்கும் சன்மார்க்க சிந்தனை. மனித குலம் தழைத்தோங்க தொலைநோக்கப் பார்வையுடன் நடைபெறும் தூய பணி. மருண்டு நிற்கும் மனித ஜென்மங்களை மரங்களால் மீட்டெடுக்கும் ஒரு மனிதப் புரட்சி. “தலைக்குப் பத்து விதைப்பந்துகள்” செய்யும் குழந்தைகளுக்கு ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஏராளமான விதைப்பந்துகளை செய்து இயற்கைக்கு அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒரு கோடி விதைப்பந்துகளை தயாரித்து விண்ணின் மழைக்காக மண்ணில் வீசி விடலாம் என இலட்சிய வேட்கையோடு ஓடும் எனது ஓட்டத்தில் துணை நின்ற, நிற்கின்ற அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாத பிராணவாயுவும் சீரான மழைப்பொழிவும் கண்டிப்பாக கிடைத்திடும். நல்லாருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும் தானே!

 ஆயிரம் விதைப்பந்துகள் செய்த பள்ளிகளும் உள்ளன தனியொரு மாணவராக மாணவியாக ஆயிரக்கணக்கில் விதைப்பந்துகள் செய்தவர்களும் உள்ளனர். அதிகபட்சம் 5 லட்சம் விதைப்பந்துகளை ஆர்வத்துடன் செய்த பள்ளிகள் உள்ளன. இந்திரப்ரஸ்தம் உங்களை பிரமிக்க வைத்தால் அதற்கு நிறைய காரண கர்த்தாக்கள் இருக்கின்றனர். ஊர் கூடினால் தானே தேர் நகரும். விதைப்பந்து திட்டத்தேரின் வடம் பிடித்து என்னோடு இழுத்தவர்கள் பத்துபேர். இவர்கள் தான் நான் கண்ட “பத்துப்பாண்டவர்கள்”

 எனது திருவாட்டி சாந்தி, நண்பர் ஜவகர், மகன் ஏகலைவன், ஹரி பிரியாணி ஹரிஹர செல்வன், அன்பர் தினேஷ், வரம் நாகராஜன், சுற்றுச்சூழல் விஜயலட்சுமி, காந்தியத் திலகம் விவேகானந்தன், மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் தலைவர் மரியாதைக்குரிய கார்த்திகேயன், மருத்துவர் சுரண்டை பொன்ராஜ்.

 பாராட்டுக்காகவோ, பெருமைக்காகவோ இந்த புரட்சியை நடத்தவில்லை. அப்படி ஒரு கௌரவம் கிடைக்குமானால் அது மண் உருண்டைகளில் விதைகளைப் பொதிந்து உருட்டிய பிஞ்சு மாணவ மாணவியருக்கும் அவர்களுக்கு துணை நின்ற கல்விக்கூடங்களுக்கும் தான். உறங்காத விதையை உற்சாகப்படுத்த 77087 75647 ல் அழையுங்கள். வியாசரோ, வில்லிபுத்தூராரோ, பேரறிஞரோ, மூதறிஞரோ, இவர்கள் விரல் பிடித்து கி.மு 400 லிருந்து கி.பி 400 வரை காப்பிய நடை பயின்றால் வழியில் கண்ணன் வரலாம், இந்திரன் வரலாம், விராட் விஷ்வபிரம்மா வரலாம். “தாண்டவப் பிரஸ்தம்” கண்டெடுத்த கதை நிஜமோ, கற்பனையோ சாட்சிக்கு பிரம்மனையோ, மயனையோ இந்த மாறன் அழைத்து வர நேரமில்லை. மரங்கள் தலையாட்டட்டும் “இந்தப் பட்டா” என்ற “இந்திர ப்ரஸ்தா” அமைகிறதென!

பள்ளி, கல்லூரி அழைப்புகளுக்காக காத்திருக்கிறேன். “இந்திரப்ரஸ்தம்” இனி பிரசித்தம்!

 பூ திருமாறன்

சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி- 62 74 15

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button