சுதந்திரத்திற்கு முந்தைய கிறிஸ்துராஜா பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிப்பு

சுதந்திரத்திற்கு முந்தைய கிறிஸ்துராஜா பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையின் பிரபல கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் ஓராயிரம் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து விதைப்பந்துகள் செய்தது பார்ப்போரை பரவசமடையச் செய்தது.
ஒரு வாரமாக மாணவ மாணவியர் வேம்பு, புளி, நாவல், சீதா, சப்போட்டா விதைகளை வகுப்புகளில் கொண்டு வந்து குவித்தனர். தலைமையாசிரியர் அருட் சகோதரர் கன்னீஸ் பீட்டர் மாணவர்களின் உற்சாகத்தை உணர்ந்து விதைப்பந்துகளை செய்ய டிராக்டர் மூலம் களிமண்ணை பள்ளி வளாகத்தில் குவித்தார்.
ஒரு கோடி விதைப்பந்துகளை செய்து முடிக்க தமிழக பள்ளிகளில் பயணம் மேற்கொண்டுள்ள வெங்காடம்பட்டி சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிப்பு செய்முறைகளை விளக்கினார். துணை தலைமையாசிரியர் வில்சன் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். வரம் நாகராஜன், ஆசிரியை மல்லிகா பசுமையின் அவசியம் குறித்து விவரித்தனர்.
101 வயது உடைய கிறிஸ்துராஜா பள்ளி வளாகத்தில் விதைப்பந்துகள் தயாரிப்பு வித்தியாசமான செயல்பாடாக இருந்தது. விளையாட்டு வீரர்களை கணிசமாக உருவாக்கும் பாளை கிறிஸ்துராஜா பள்ளி, 1946 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஆயிரக்கணக்கான விதைப்பந்துகளை நேர்த்தியாக செய்து குவித்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் அருட்சகோதரர் கன்னீஸ் பீட்டர், சமூக நல ஆர்வலர் திருமாறன், வரம் நாகராஜன், பசுமை ஜவகர் சான்றிதழ்கள் வழங்கினர். தங்களுக்கு இப்படியொரு வாய்ப்பு நல்கிய கிறிஸ்துராஜா பள்ளியின் அருட்சகோதரர்கள் பிரிட்டோ மற்றும் கன்னிஸ் பீட்டர் இருவருக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.




