நாகம்பட்டி கல்லூரியில் 5025 மரக்கன்றுகள் நடுதல் தொடக்க விழா

*நாகம்பட்டி கல்லூரியில் 5025 மரக்கன்றுகள் நடுதல் தொடக்க விழா*

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு உட்பட்ட 32 ஏக்கரில், 25 ஏக்கர் நிலப்பரப்பில் 5025 மரக்கன்றுகள் நடுதலுக்கான தொடக்க விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு வனத்துறை தூத்துக்குடி சரகம், ஓட்டப்பிடாரம் பிரிவு, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டம், கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 159, & 195 இணைந்து நடத்தியது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். தொடக்க விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா இராமநாதன் தலைமையுரை ஆற்றினார். தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்கள் நிறைந்த காடுகள் மிகவும் குறைவு. தொழிற்சாலைகள் இருக்கும் தன்மையைப் பொருத்து நாம் மரங்களை வளர்க்க வேண்டும். விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பல்கலைக்கழக் கல்லூரிகளின் இயக்குநர் வெளியப்பன், வன அலுவலர் பாபு மரம் நடுதலின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். கல்லூரி முதல்வர் முருகானந்தம், நாகம்பட்டி சுமதி, பொன்னூஸ் நேச்சுரல்ஸ் நிறுவனர் பொன்னுசாமி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் செல்வி, சுமித் கபில் வாட்டர்ஸ் உரிமையாளர் முத்துராஜ், ஒட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைபெருந்தலைவர் காசிவிஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் கலந்து கொண்டனர். மரம் நடுதலின் ஏற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் வரவேற்றுப் பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பவானி நன்றி கூறினார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றுகளை நட்டனர். தமிழ்நாடு வனத்துறை தூத்துக்குடி சரகம், ஓட்டப்பிடாரம் பிரிவு மூலம் 5025 மரக்கன்றுகளை நட உள்ளனர். இதனை வளர்த்தெடுக்கும் பொருப்பினை தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை ஏற்றுள்ளது.




