உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் ?
உடல்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றது. உடல் சீரழிந்து போய் விடுமேயானால், பிறகு மற்ற செல்வங்கள் எல்லாம் இருந்து பயனில்லை.
ராபின்சர்மா என்கிற ஒரு அமெரிக்கர் எழுதியுள்ள புத்தகம் கூடஞு எணூஞுச்tணஞுண்ண் எதடிஞீஞு என்பது. அதனுடைய தமிழாக்கம் மேன்மைக்கான வழிகாட்டி அண்மையிலே வெளிவந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தைப் படித்தபோது பல சின்னச் சின்னச் செய்திகள், வாழ்க்கையின் பெரிய பெரிய உண்மைகளை உணர்த்துவதாக இருந்தன. இன்றைக்கு உலகத்திலே இருக்கிற பன்னாட்டு நிறுவனங்களான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், இன்போசிஸ் முதலான பல நிறுவனங்களினுடைய மேலாளர்களுக்குப் பயிற்சி வகுப்பெடுக்கிறபோது ராபின்சர்மா பேசியது ஒரு கட்டுரையாக வெளிவந்துள்ளது.
அந்தக் கட்டுரையினுடைய தலைப்பு, செல்வத்தின் ஏழு விதங்கள் என்பது. நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய செல்வமாகவே அது இருக்கிறது. பொதுவாக யார் பணம் வைத்திருக்கிறார்களோ அவர்களைத்தான் நாம் செல்வந்தர் என்று சொல்கிறோம். ராபின்சர்மா சொல்கிறார். பணம் வைத்திருக்கிறவர்கள் செல்வர்கள்தான் செல்வத்துக்குப் பணம் ஒரு அடிப்படைக் காரணம் மறுக்க முடியாது. ஆனால் நம்மிடம் இருக்க வேண்டிய ஏழு செல்வங்களில் பணம் ஒன்று. அது ஏழில் ஒரு பகுதியே தவிர, முற்றும் அதுதான் என்று கருதுவதும், அந்தப் பார்வையும் சரியானதில்லை என்பதுதான் அவருடைய பேச்சு. அப்படியானால் மீதம் இருக்கிற ஆறு செல்வங்கள் என்ன என்பதை அவர் வரிசைப்படுத்துகிறார்.
ஒருவனைச் செல்வந்தன் என்று நாம் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவனிடத்திலே இந்த ஏழு செல்வங்களும் இருக்க வேண்டும்.
முதல் செல்வம் உடல் நலம்தான்.
இரண்டாவது செல்வம் மனநலம்.
மூன்றாவது செல்வம் குடும்ப நலம்.
நான்காவது செல்வம் தொழில் நலம்.
ஐந்தாவது செல்வம் பண நலம்.
ஆறாவது செல்வம் இலட்சிய நலம்.
ஏழாவது செல்வம் புகழ் நலம்
என்று ஏழு நலன்களை அவர் வரையறுக்கிறார்.
உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்றால், இந்த உடல்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றது. உடல் சீரழிந்து போய் விடுமேயானால், பிறகு மற்ற செல்வங்கள் எல்லாம் இருந்து பயனில்லை.
மிக அழகான வரியை அவர் குறிப்பிடுகிறார். மிகப் பெரிய பணக்காரனாக இருக்கலாம். ஆனால் மருத்துவமனையிலே இருக்கிற பணக்காரனைக் காட்டிலும், சுதந்திரமாக உலவ முடிகிற உடல் நலம் உள்ள உழைப்பாளி மகிழ்ச்சியாக இருப்பான் இல்லையா என்று கேட்கிறார். எவ்வளவு கோடீசுவரனாக இருந்தாலும் மருத்துவமனையிலே படுத்திருக்கிறபோது, அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மற்ற செல்வங்கள் எல்லாம் இருக்கலாம். உடல் நலம் என்கிற ஒரு செல்வம் இல்லாம் போய் விடுமானால் மற்ற செல்வங்களை எல்லாம் அவனால் துய்க்க முடியாது.
மறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள்தான் ஒருமுறை மிக அழகாக ஒரு விடையைச் சொன்னார். உலகத்திலே மிகப் பெரியது எது என்று கேட்டபோது, அவர் பணம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லாமல் கண்ணதாசன் சொன்னார், உடல் நலம் மட்டும் இருந்து விடுமானால், பிறகு உலகத்திலே உள்ள எல்லாச் செல்வங்களையும் பணம் காலடியிலே கொண்டு வந்து குவிக்கும் என்று சொன்னார். நீ போக வேண்டியதுகூட இல்லை பணம் எல்லாவிதமான நலன்களையும் உன் காலடியிலே கொண்டு வந்து குவிக்கும். ஆனால் ஒரு நிபந்தனை மட்டும் இருக்கிறது அது உடல் நலம். உடல் நலம் என்பது பெரிய ஒரு செல்வம்.
அடுத்ததாக மனநலம் என்பதை அதைவிடப் பெரிய செல்வம் நமக்கு மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. அதிலே குறைபாடு இல்லை என்பது மட்டுமல்ல. அந்த மனம் அன்பினால் நிறைக்கப்பட்டிருக்க வேண்டும். நுட்பமான அறிவைக் கொண்டதாக இருக்க வேண்டும். மனிதநேயம் உடையதாக இருக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வை உடையதாக இருக்க வேண்டும். அமைதியை நாடுவதாக இருக்க வேண்டும். இத்தனையும் இருந்தால்தான் அது மனநலம். மனநலம் உடையவர்களால்தான் மற்ற காரியங்களை எல்லாம் செய்ய முடியும்.
மூன்றாவதாக ராபின்சர்மா சொல்கிறார், குடும்ப நலம் என்பது இன்னொரு செல்வம். அருமையான செல்வம். நீங்கள் என்னதான் அறிவாளியாக இருந்தாலும், என்னதான் செல்வாக்கு உடையராக இருந்தாலும், வீடு என்பது நிம்மதியற்றுப் போகுமேயானால், உங்களால் இயங்க முடியாது. வீடுதான் உங்களினுடைய தொடக்கம். வீடு என்பது உங்களுடைய குடும்பம் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருக்கிற உறவினர்கள், நண்பர்கள் என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். எனவே நமக்கு உடல் நலம் வேண்டும். மன நலம் வேண்டும். உறவுகளோடு… குடும்பத்தோடு… மகிழ்ச்சியான தொடர்பு இருக்க வேண்டும். எந்த நேரமும் வீட்டுக்குள்ளே நுழைந்தால் ஒரு சிக்கலும் பிரச்சினையுமாக இருக்குமென்று சொன்னால், நம்மால் வெளியிலும்கூடச் சரியாகச் சிந்திக்க முடியாது. எனவே குடும்பத்தோடு ஆகிய தொடர்பு என்பதை நாம் எப்போதும் கவனமாய் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே வெளியிலேயே கவனம் செலுத்துகிறோம் என்பதினாலே குடும்ப உறவுகள் சிதைந்து போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தொழில் நலம் என்று சொல்கிறார். அது ஒரு செல்வம். எந்த இடத்தில் நம்முடைய தொழில் நடக்கிறதோ அல்லது எங்கே நாம் வேலை பார்க்கிறோமோ, அங்கே நம்முடைய உறவும், அங்கே நம்முடைய மனநலமும் எப்படி இருக்கின்றன என்பது, ஏறத்தாழ வீட்டில் கழிக்கிற நேரத்திற்கு இணையாகத் தொழில் சார்ந்த இடங்களிலேயும் நம்முடைய நேரம் கழிகிறது. ஆகையினாலே தொழிலகம் என்பதும்கூட நமக்கு மிகக் கவனமாக இருக்க வேண்டிய இடம். எனவே அது நான்காவது செல்வம்.
ஐந்தாவது செல்வமாகத்தான் ராபின்சர்மா பணத்தைக் குறிக்கிறார். அது ஒரு செல்வம்தான். இல்லை என்று யார் சொல்ல முடியும். பணம் இல்லாமல் இந்த உலகத்தில் யாரால் வாழ முடியும். பணம் என்பதுதான் நம்முடைய வேட்கைகளை நிறைவேற்றுகிறது. பணம் என்பதுதான் நம்முடைய
வாழ்க்கையை எளிதாக்குகிறது. பணம் இல்லை என்றால் நீங்கள் பத்து மைல் நடக்க வேண்டும். பணம் இருந்தால் மகிழ்வுந்திலே போகலாம். வாழ்க்கையை அது எளிமையாக்குகிறது. நேரத்தை மிச்சமாக்குகிறது. எனவே பணம் ஒரு செல்வம்தான் ஆனால் அது ஐந்தாவது செல்வம்.
ஆறாவதாக ஒரு செல்வத்தை அவர் குறிப்பிட்டார். எவன் ஒருவன் லட்சிய வெளியோடு இருக்கிறானோ அவன்தான் தொடர்ந்து காரியங்களைச் செய்வான். முடிந்து போயிற்று என்று கருதுகிறவன் எவனும் தொடர்ந்து பணியாற்றமாட்டான். எவரையாவது இமயம் என்றும் சிகரம் என்றும் சொன்னால் அவருடைய வேலை முடிந்துவிட்டது என்று பொருள். சிகரத்திற்கு மேலே என்ன இருக்கிறது. எனவே அதையும் தாண்டிப் போக வேண்டும் என்கிற வெறியைத் தனக்குள் வளர்த்துக் கொள்கிறபோது மட்டும்தான் நம்மாலே இயங்க முடிகிறது. எப்போது இயக்கம் என்பது அடுத்த கட்டத்தை நோக்கியதுதான். கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்ப்பது இயக்கமன்று. அடுத்த கட்டத்தை நோக்கியதான். எழுத்தாளருக்கு இன்னொரு புத்தகம் எழுத வேண்டும். ஒரு கலைஞருக்கு இன்னொரு படைப்பை உருவாக்க வேண்டும். விஞ்ஞானிக்கு இன்னொன்றைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்கிற அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு இருக்கிறது பாருங்கள்… அதிலே இருக்கிற ஒரு வெறி இருக்கிறதே… அது ஒரு செல்வம் என்று ராபின்சர்மா சொல்கிறார். அந்த உணர்வு உந்துதல் நம்முடைய வாழ்க்கையிலே ஒரு செல்வம்.
ஏழாவதாக இருக்கிற செல்வம் என்ன என்று கேட்டால், ஏழாவது கடைசி இடத்திலே இருந்தாலும்கூட அதுதான் எல்லாச் செல்வங்களுடைய சாரமாக இருக்கிறது. புகழ் என்பது ஒரு செல்வம். ஆறு செல்வத்தைக் கொண்டுதான் இந்த ஏழாவது செல்வத்தைப் பெற முடியும். ஆனால் ஏழாவது செல்வத்தைப் பெற்று விட்டால் இந்த ஆறு செல்வங்களும் என்றைக்கும் மிஞ்சும். உடல் நலம். மனநலம்; குடும்ப நலம், தொழில் நலம்., மனநலம், லட்சிய நலம், புகழ் நலம் என்கிற இந்த ஏழு நலன்களும் ஏழு செல்வங்கள். இந்த ஏழு செல்வங்களும் யாரிடம் இருக்கிறதோ அவரை நீங்கள் செல்வந்தர் என்று அழைக்கலாம் என்பது அந்தக் கட்டுரையினுடைய சாரம்.
Article By. Suba Veera Pandiyan. Thanks
After reading this article I remember a Hadees sai by our Prophet (saw) .
ஐந்து நிலைகளுக்கு முன் ஐந்து நிலைகளை பெரும் பேறாக கருதுங்கள்
வாழ்க்கையை, மரணத்திற்க்கு முன்
ஆரோக்கியத்தை, நோய்க்கு முன்
செல்வத்தை,வறுமைக்கு முன்
இளமையை , முதுமைக்கு முன்
ஓய்வை, கடும் வேலைக்கு முன்
(Mishkath )