இயல்பான பிரசவங்கள் குறைந்தது ஏன்? 100க்கு 50 குழந்தைகள் “சிசேரியன்’ மூலம் பிறக்கின்றன

Vinkmag ad

ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்’ என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான் என, டாக்டர்களே ஒப்புக் கொள்கின்றனர். 

வாழ்க்கை முறை மாற்றம், அதிக எடை, குறைந்த உடல் உழைப்பு போன்றவை சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்கக் காரணங்கள் என்றாலும், சிசேரியன் பிரசவங்களை தனியார் மருத்துவமனைகள் ஊக்குவிக்க, பணமும் ஒரு காரணம் என்ற வலுவான குற்றச்சாட்டும் உள்ளது. கரு உருவாகி, தங்களிடம்,”செக்-அப்’புக்கு வரும்போதே அந்தப் பெண்ணின் மனநிலையை, சிசேரியன் பிரசவத்துக்கு ஏற்ப, தனியார் நிறுவனங்கள் தயார் செய்து விடுகின்றன என குற்றம் சாட்டப்படுகிறது.

கர்ப்பிணியின் உடல் அமைப்பு, சாதாரண பிரசவத்துக்கு ஏற்றதாக இருந்தால், சிசேரியனுக்கு அவர்களைக் கட்டாயப்படுத்துவது இல்லை. இரண்டு தலைமுறைக்கு முன், சர்வ சாதாரணமாக ஏழு, எட்டு முறை கர்ப்பம் தரிப்பார்கள். இதில் ஒன்றிரண்டு குழந்தைகள் இறந்தே பிறக்கும். ஒன்றிரண்டு மிஞ்சும். ஆனால், இப்போது ஒன்று, தப்பினால் இரண்டு என்றாகிவிட்ட நிலையில் யாரும், “ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இல்லை.

சாதாரண பிரசவத்தை விட சிசேரியன் பாதுகாப்பானது என, பலர் நம்புகின்றனர்,” என மக்களின் மன நிலை மாற்றத்தை சுட்டிக் காட்டினார்.””சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் கூட சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டு, 20 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவங்கள் 2011ம் ஆண்டு 50 சதவீதமாக அதிகரித்துவிட்டது,” என, தனியார் மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர்.தியாகராஜன் கூறினார்.எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் மீனலோசனி, “”தலைமை அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் அதிகரித்துள்ளதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முடியாதவை, இங்கு அனுப்பப்படுவதே காரணம்.

ஆனால், அங்கு சாதாரண பிரசவங்கள் தான் அதிகம்,” என விளக்கம் அளித்தார். இதை கிராமப்புற செவிலியர் கற்பகமும் உறுதி செய்தார், “”ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதத்துக்கு 50 டெலிவரிகள் என்றால் 40 சாதாரண பிரசவம் தான்.”ஏழை மற்றும் அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த பெண்களில் பெரும்பாலோர், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக்கொள்வதால், அவர்களுக்கு சாதாரண பிரசவம் தான் நடக்கிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினர் டாக்டர்களின் அறிவுருத்தலின் பேரிலோ, பயம் காரணமாகவோ, சிசேரியனை எளிதில் தேர்வு செய்கின்றனர்.

மாறி வரும் வாழ்க்கை முறை சிசேரியன் பிரசவத்திற்கு ஒரு காரணம் என்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மகப்பேறு மற்றும் சிறுநீரகத் துறை டாக்டர் ஸ்ரீ கலா, “”வாழ்க்கை வசதிகள் பெருக, பெருக இயல்பான பிரசவங்கள் குறைந்து, சிசேரியன் அதிகரித்து வருகிறது. இப்போது உடல் உழைப்பு குறைந்துவிட்டது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவை சில நேரங்களில் தாய்-சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். இதுவே சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க காரணங்கள்,” என்றார்.

வாழ்முறை ஒரு பக்கம் இருக்க, தனியார் மருத்துவமனைகளில் பணமும் முக்கிய காரணமாக உள்ளது, “”சிசேரியன் அதிகரிக்க, பணம் ஒரு முக்கிய காரணம் என்பது நடுநிலை மருத்துவர்களின் கருத்து. இப்போது மருத்துவமும் வர்த்தகமாகப் பார்க்கப்படுவதால், தாங்கள் செய்துள்ள முதலீட்டுக்கு ஏற்ப பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம், தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. பணத்துக்காக சிசேரியன் என்ற குற்றச்சாட்டை உடைப்பதற்காக, இரண்டுக்கும் ஒரே விதமான கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்,” என டாக்டரர் தியாகராஜன் கூறினார்.

தாய்- சேய் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், நார்மல் டெலிவரியே தாயுக்கும்,சேய்க்கும் நல்லது என்பதே அனைத்து டாக்டர்களின் ஒருமித்த கருத்து. எனவே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் என்று டாக்டர்கள் உறுதி கொள்ள வேண்டும். நார்மல் டெலிவரியை ஊக்கப்படுத்தும் வகையில், பெண்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நல்ல நாளில் பிறக்க…நல்ல நாளில், நல்ல நேரத்தில், நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பெற்றெடுப்பதற்காக சிலர் அறுவை சிகிச்சை செய்கின்றனர், என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கு பதிலளித்த டாக்டர் ஜெயஸ்ரீ, “எங்காவது ஒன்றிரண்டு நடக்கலாம். பெரும்பாலான மருத்துவர்கள் இதற்கு உடன்படுவதில்லை’ என்றார் 
  
 
 
போலி டாக்டர்களை கண்டுகொள்வாரில்லை
 
காலை நேரம், “டிவி’யை, “ஆன்’ செய்தாலே போதும், “தீராத நோயில்லை, என்னால் தீர்க்க முடியாத நோயில்லை’ என, தெம்மாங்கு பாடும் டாக்டர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நிச்சயம் குணப்படுத்த முடியாது என, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, புற்று நோய், சர்க்கரை நோய் போன்றவற்றை கூட முழுமையாக குணப்படுத்துவதாக, இவர்கள் அடித்து கூறுகின்றனர்.படித்தவர்கள் அதிகம் உள்ள, சென்னை, மயிலாப்பூரில் கிளினிக் நடத்தி, “டிவி’யில் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த டாக்டர் ஒருவர், தீர்க்க முடியாத நோயை குணப்படுத்துவதாகக் கூறி, பல ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததால், இப்போது குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளார். இவரைப் போன்று கைது செய்யப்பட வேண்டிய போலி டாக்டர்கள் ஏராளம் உள்ளனர்.

இந்திய டாக்டர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு, 2,000 போலி டாக்டர் கைது செய்யப்பட்டனர். இதில், பலர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.குணமாக்கவே முடியாத நோய்கள் என, 43 நோய்கள், “மேஜிக் ரெமிடி ஆக்ட்’ சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த நோய்களைக் குணப்படுத்த முடியும் என, எந்த டாக்டரும் கோர முடியாது. அப்படி கூறுவது சட்டப்படி குற்றம். ஆனால், “டிவி’யில் விளம்பரம் செய்யும் டாக்டர்கள் பலர், இந்த நோய்களைக் குணப்படுத்துவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். இப்படி விளம்பரம் செய்வதும், மருத்துவச் சட்டப்படி குற்றம். கேபிள் சட்டப்படி, இது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்புவதும் குற்றம். ஆனால், சட்டங்களையும், விதிகளையும் யாரும் கண்டுகொள்வதில்லை.எல்லா மருத்துவர்களிடமும் சென்று, குணமாகாமல் விரக்தியில் இருக்கும் நோயாளிகள் தான் இவர்களது இலக்கு. 

குறிப்பாக, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், மூளை வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு பொன் முட்டையிடும் வாத்துக்கள்.தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக, தன்னார்வ அமைப்பின், புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால், யார் போலி டாக்டர்கள் என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கிளினிக் நடத்தி வருபவர்களில், போலிகளை வடிகட்டுவது மிகவும் சிக்கலான பிரச்னை.கிராமப்புறங்களில் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பாரம்பரியமாக வைத்தியம் செய்பவர்களை, அங்கீகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, 1970ம் ஆண்டு, தமிழகம் முழுவதும் 2,350 பேர், “ஆர்.ஐ.எம்.பி., – ஆர்.எச்.எம்.பி.,’ என, பதிவு செய்து கொண்டனர். இவர்களில், பலர் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவர்களது பெயரில், வாரிசுகள் அல்லது உறவினர்கள், உதவியாளர்கள், கிளினிக் நடத்தி வருகின்றனர்.இவர்களில் பலர், மருத்துவம் பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு, பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு வைத்தியம் செய்து வருகின்றனர்.
கடந்த 1991-96 அ.தி.மு.க., ஆட்சியில், சுகாதார செயலராக, இன்பசாகரன் இருந்தபோது, “என்லிஸ்ட் சித்தா டாக்டர்ஸ்’ என்ற பெயரில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க, 13 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.இதில், மருத்துவமனையில் எடுபிடியாக இருந்தவர், வேறு தொழில் செய்பவர்கள் என, ஆயிரக்கணக்கானோருக்கு, சித்த மருத்துவம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இப்படி அங்கீகாரம் பெற்றவர்களில் பலருக்கு, எந்த மருத்துவமும் முறையாக தெரியாது. ஆனால், எல்லா நோய்களையும் குணப்படுத்த மருந்து இருப்பதாகக் கூறி வியாபாரம் செய்து வருகின்றனர் . இது குறித்து, சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “”அரைகுறை டாக்டர்களால், எங்களைப் போன்று சித்த, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் படித்த, மருத்துவ பட்டதாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. திறமையான, பாரம்பரிய மருத்துவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு மருத்துவத் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், போலிகளை களை எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம்,” என்றார்.

எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தை, கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் என, இரண்டு வகை டாக்டர்களும் முறைப்படி பதிவு பெற்றவர்கள்.இவர்களைத் தவிர, பிற மருத்துவர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்துவது அவசியம் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.இது குறித்து, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்தியக் குழு உறுப்பினர் முத்துக்குமார் கூறும்போது, “”கல்லூரிகளில் படித்து பட்டம் பெறாமல், வைத்தியம் செய்பவர்களை, தகுதியின் அடிப்படையில் அனுமதிக்க உயர் நிலைக் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு வழங்கும், “அங்கீகார சான்று’ வைத்திருப்பவர்களை மட்டுமே, மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும். இதுதான் போலி டாக்டர்களை ஒழிக்க ஒரே வழி,” என்றார்.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம் கூறும்போது, “”போலி டாக்டர்களை களை எடுக்க, குழு அமைக்க வேண்டும் என்பதை ஏற்கிறோம். இந்த யோசனை குறித்து சுகாதாரத் துறை அமைச்சரிடம் கலந்து பேசுவோம்,” என்றார்.

News

Read Previous

சட்டமல்ல, கண்துடைப்பு!

Read Next

அமலால் நிறையும் ரமலான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *